Ad

சனி, 11 ஜூலை, 2020

ஆன்லைன் (அ) தொலைக்காட்சி வழி வகுப்புகள்... அமைச்சருக்கு சில கோரிக்கைகள்!

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை வரும் 13-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைப்பார் எனும் அதிரடி அறிவிப்பை கடந்த எட்டாம் தேதி வெளியிட்டார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதோடு, ''தொலைக்காட்சி வாயிலாக, ஒவ்வொரு பாடத்துக்கும் ஒரு சேனல் என்று 5 தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றும் அப்போது தெரிவித்தார்.

செங்கோட்டையன்

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகள் நடந்துவரும் நிலையில், முன்னர் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவிக்க, அரசுப் பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியவர்கள், பெரும்பாலானவர்கள் வீடுகளில் ஆண்ட்ராய்டு போன் வசதிகள் இல்லை. போன் வசதி இருந்தாலும் இணைய வசதி இல்லை என அமைச்சரின் அறிவிப்புக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், ''தமிழகத்தில் ஆன்லைன் வழிக்கல்வி இல்லை. டி.வி மூலமே பாடம் கற்பிக்கப்படும்''என்று ஜகா வாங்கினார்

ஆண்ட்ராய்டு போன், இணைய வசதி மட்டுமல்ல, பல வீடுகளில் தொலைக்காட்சி வசதியும் இல்லை. அதனால் தொலைக்காட்சி வழி வகுப்புகள் என்பதும், அரசுப் பள்ளி மாணவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்புலத்தைக் கருத்தில் கொண்டு, குழந்தைகளின் நலன் சார்ந்து சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்று அமைச்சரின் கருத்துக்கு கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய குழந்தைகள் நலச் செயற்பாட்டாளர் தேவநேயன்,

''தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்துகிறார்களே நாமும் நடத்த வேண்டும் என்றுதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஆன்லைன் வகுப்பு எனச் சொல்லிய அமைச்சர் எதிர்ப்பு வரவும் தொலைக்காட்சி வழியில் எனப் பின்வாங்குகிறார். ஆனால், இன்று மாணவர்களுக்கு என்ன தேவை. உயிர் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு அதற்கு அடுத்துதான் கல்வி.

பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்களின் குடும்பங்களில் கொரோனா நெருக்கடி காரணமாக, சாப்பாட்டுக்குக்கூட கஷ்டப்படும் சூழல்தான் தற்போது நிலவுகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு, உறவினர்களுக்கு, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு எனக் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவிவரும் இந்தச் சூழலில் குழந்தைகள் உளவியல் ரீதியாக ஒருவித அச்சத்தோடு இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர்களுக்குக் கல்வி அவசியமா என்பதுதான் என் கேள்வி. கல்வி என்பது குழந்தைகளுக்கு நம்பிக்கையை ஊட்டவேண்டும். ஆனால், அரசின் இந்த முடிவு, குழந்தைகளின் நம்பிக்கையை மேலும் சிதைக்கும் வகையில் இருக்கிறது.

தேவநேயன்

தொலைக்காட்சி இல்லாத பல விடுகள் உண்டு. தொலைக்காட்சி இருந்தாலும், மிகச்சிறிய வீடுகளில் வசிக்கும் குடும்பங்கள்தான் அதிகமாக இருக்கின்றன. அங்கே மிகவும் பொறுமையாக வகுப்பைக் கவனிக்கக்கூடிய சூழல் மாணவர்களுக்கு வாய்க்குமா என்பதே என் கேள்வி. ஊரடங்கு நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலும் வீடுகளில்தான் இருப்பார்கள். பொருளாதார நெருக்கடிகளால் பல குடும்பங்களில் சண்டை சச்சரவுகளுமாகத்தான் இருக்கும். இந்த நிலையில் குழந்தை எப்படி கல்வியில் கவனம் செலுத்தும்? மூன்று மாதம் தொடர்ச்சியாகப் படிக்கவில்லையென்றால் குழந்தைகள் மறந்துவிடுவார்கள் என்று சொல்கிறார்கள். 2011-ம் ஆண்டில் சமச்சீர் கல்விக்காக வழக்கு நடந்துகொண்டிருந்த சூழலில் செப்டம்பரில்தானே வகுப்புகளைத் தொடங்கினீர்கள். தற்போது மட்டும் ஏன் அவசரப்படுகிறீர்கள்?

இதுகுறித்து கல்வியாளர்கள், உளவியலாளர்கள், சைபர் வல்லுநர்கள் யாரிடமாவது கலந்து ஆலோசித்தார்களா... எதுவும் இல்லாமல் எப்படி முடிவு எடுக்கலாம்? கொரோனாவுக்குப் பிறகு கல்வி தொடர்பாக முடிவெடுக்க, 18 பேர் கொண்ட குழுவை அமைத்தார்கள். அவர்களில், 13 பேர் அரசு அதிகாரிகள், மீதமுள்ளவர்கள் தனியார் பள்ளி உரிமையாளர்கள், தொழிலதிபர்கள். இவர்கள் அமைச்சரின் முடிவுக்கு எதிர்க்கருத்து சொல்வார்களா? தமிழகத்தில் உள்ள மொத்த பள்ளிகளில் 60 சதவிகிதம் அரசுப் பள்ளிகளே. அவர்களின் பிரதிநிதிகள் யாரும் அந்தக் குழுவில் ஏன் இடம்பெறவில்லை? அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்வியாளர்கள், குழந்தைகள் செயற்பாட்டாளர்கள் என யாரையுமே அந்தக் குழுவில் ஏன் இணைக்கவில்லை?

பள்ளிக் குழந்தைகள்

கல்வி என்பது இருவழிப் பாதை. மனப்பாடம் செய்வது மட்டுமல்ல. அறம், வாழ்வியல், ஆளுமை சார்ந்தது. தொலைக்காட்சியில் பார்த்து எல்லாம் அதைக் கற்றுக்கொள்ள முடியாது. விளிம்பு நிலைக் குழந்தைகளை எட்டி உதைப்பதுதான் அரசின் இந்த முடிவு. இதனால் என்ன பாதிப்பு வரும் என்றால், முதல் தலைமுறைக் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரிக்கும். இந்தக் குழந்தைகள்தான் குழந்தைத் தொழிலாளர்களாக, கொத்தடிமைகளாக, பாலியல் சுரண்டல்களுக்கும் ஆளாவார்கள். சுனாமி போன்ற பேரழிவுகளின்போது நாங்கள் நேரடியாக அதைக் கண்டிருக்கிறோம். அதனால் பல லட்சம் குழந்தைகளின் வாழ்க்கையில் விளையாடும் அரசின் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்'' என வெடிக்கிறார் தேவநேயன்.

குழந்தை நேயப் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், ஆசிரியை சுடரொளியிடம் பேசினோம், ''ஆன்லைன் வகுப்புகளை நாங்கள் முற்றிலுமாக எதிர்க்கிறோம். பாலியல் கல்வி கொடுக்காத ஒரு நாட்டில், இணைய வழியாகப் பாடம் எடுப்பது தவறான ஒரு வழிகாட்டல். ஆனால், தொலைக்காட்சி வழியாக என்றால் வரவேற்கலாம். அதேநேரம், தொலைக்காட்சி வழியாக எடுக்கப்படும் பாடங்களை சிலபஸை முடித்த கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. சிலபஸை முடிக்கும் கருவியாகப் பயன்படுத்திக்கொள்ளக் கூடாது. தொலைக்காட்சி வழியாக வெறும் பாடங்களை மட்டும் எடுக்காமல், சுவாரஸ்யமான விஷயங்களைக் குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கலாம். உதாரணமாக, கலை வடிவங்களை, விளையாட்டுக்களைக் கற்பிக்கலாம்.

சுடரொளி

உணவுப் பற்றாக்குறை, பாதுகாப்பற்ற சூழல், பாலியல் சீண்டல்கள் ஆகியவை தற்போது அதிகரித்திருக்கின்றன. தொலைக்காட்சி வழியாக அதுகுறித்த விழிப்புணர்வுப் பிரசாரங்களை நாம் குழந்தைகளிடம் மேற்கொள்ளலாம். அதேபோல, வரும் கல்வி ஆண்டிலும் பொதுத்தேர்வில்லாத வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்குத் தேர்வைத் தள்ளுபடி செய்துவிடலாம். பொதுத்தேர்வு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு வகுப்புகள் ஆரம்பித்த பிறகு மீண்டும் முதலில் இருந்து பாடங்களை எடுக்க வேண்டும். எடுத்த பாடங்களில் இருந்து மட்டுமே தேர்வுகளை நடத்த வேண்டும். தவிர, தொலைக்காட்சி, மின் இணைப்பு, கேபிள் இணைப்பு இல்லாத குழந்தைகளின் குடும்பங்கள் 10 - 15 சதவிகிதம் இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. அவர்களின் வீடுகளில் அந்த வசதிகளை ஏற்படுத்தித்தர அரசு முன்வர வேண்டும்'' என்கிறார் சுடரொளி.

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியையும் எழுத்தாளருமான பரமேசுவரியிடம் பேசினோம்,

''அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள், தொலைக்காட்சி வழியான வகுப்புகளை ஒட்டுமொத்தமாகப் புறம்தள்ளுவது இனியும் நியாயமாக இருக்காது என்பதே என் கருத்து. தொலைக்காட்சி, மின்சார வசதிகள் இல்லாத குழந்தைகளின் வீடுகளுக்கு அந்த வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டுமே தவிர, அதைக் காரணம் காட்டி ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கக் கூடாது. லேப்டாப் இல்லாவிட்டால் Tab, இணையவசதி ஆகிவற்றைக்கூட அரசு நினைத்தால் ஏற்படுத்திக்கொடுக்கலாம். இந்த வழியிலாவது அவர்களின் வீடுகளுக்கு அந்த வசதிகள் போய்ச் சேரட்டுமே... எல்லோருக்கும் கல்வி போய்ச் சேராது என்பதைச் சொல்லி, யாருக்குமே கிடைக்காமல் செய்வது எந்தவிதத்திலும் நியாமில்லை.

பரமேசுவரி

Also Read: இணையவழி வகுப்புகள் சாதகமா, பாதகமா..? மாணவர்களும் ஆசிரியர்களும் சொல்வது என்ன?

அதேபோல, தொலைக்காட்சி வழி வகுப்புகளில், ஒளிபரப்பப்படும் வீடியோ சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால், கல்வித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடிய வீடியோக்கள் தெளிவாக இல்லை. அதை அரசு மேம்படுத்த வேண்டும். அதேபோல, இந்தத் தொலைக்காட்சி வழி வகுப்புகளை எவ்வளவு அனுமதிக்க வேண்டுமோ அவ்வளவுதான் அனுமதிக்க வேண்டும். அதுதான் குழந்தைகளின் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லது. இதற்கான ஒரு குழு அமைத்து முறையாகத் திட்டமிட வேண்டும். ஒட்டுமொத்தமாக நிராகரித்தால் மற்ற மாணவர்களுக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் இடைவெளி இன்னும் அதிகரிக்கும்'' என்கிறார் அவர்.

வைகைச் செல்வன்

குழந்தைகள் நல செயற்பாட்டாளர்கள் முன்வைக்கும், விமர்சனங்கள், ஆசிரியர்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்துப் பேச, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைத் தொடர்பு கொள்ள முயன்றோம். அவர் அழைப்பை எடுக்காததால், முன்னாள் கல்வி அமைச்சரும் அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வனிடம் பேசினோம்,

''இடர்பாடு, சிக்கல் என்பது எல்லா விஷயத்திலும் 10 சதவிகிதம் இருக்கத்தான் செய்யும். அதற்காக பொது நன்மைக்கான முயற்சிகளைக் கைவிட முடியாது. அரசுப் பள்ளி மாணவர்கள் பயிற்சிக் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட, ஒரு தற்காலிக ஏற்பாடுதான் இது. அதற்கான, வசதிகள் இல்லாத இடத்தில் அரசு கண்டிப்பாக செய்துகொடுக்கும். அதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் அரசு யோசித்து வருகிறது. பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிலும் கல்வித்துறை பேசிக்கொண்டு இருக்கிறது'' என்கிறார் வைகைச்செல்வன்.



source https://www.vikatan.com/government-and-politics/education/merits-and-demerits-of-television-classes-for-school-children

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக