`தமிழகம் முழுவதும் ஆற்று மணல் எடுக்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரியலூர் மாவட்டத்தில் மட்டும் ஆளும் கட்சியினர் ஆயிரக்கணக்கில் லாரிகள் எந்தவித இடையூறுமின்றி ஊரடங்கு நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு இயற்கை வளத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் போலீஸ்காரர்கள் முதல் ஆட்சியர் அலுவலகம் வரையிலும் மாமூல் சரியாகப் போய்க்கொண்டிருப்பதால் நடவடிக்கை எடுப்பதில்லை என்று கொந்தளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
தமிழகத்தின் இயற்கை வளக்கொள்ளையில் மிக முக்கியமானது ஆற்று மணல் கொள்ளை. அதிக லாபம் இருப்பதால், மணல் அள்ளுவதைத் தடுக்கும் காவல் மற்றும் வருவாய்த்துறையினரைக் கொலை செய்யக்கூட தயங்குவதில்லை மணல் கொள்ளையர்கள். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் மணல்கொள்ளை நடந்து வருகிறது என்றும் மணலை ஏற்றிக்கொண்டு வெளியேறும் லாரிகளுக்கு அங்குள்ள காவல்நிலையத்தில் உள்ள காவலர்கள் பாதுகாப்பு கொடுப்பதாகவும் சவுடு மணல் எடுப்பதாகச் சொல்லி இரவு நேரத்தில் கொள்ளிடம் ஆற்றில் மணல் எடுக்கிறார்கள் என்றும் அதைத் தடுக்க வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். ஆனால், இன்று வரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஆதங்கப்படுகிறார்கள்.
மணல்கொள்ளைக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டம் நடத்திவரும் சமூக ஆர்வலர் கார்த்திகேயனிடம் பேசினோம். ``அரசு மணல் குவாரி எதுவும் இல்லாததால், இந்த ஊரடங்கைப் பயன்படுத்தி ஆங்காங்கே மணல் கொள்ளை தொடங்கிவிட்டனர். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் அருகேயுள்ள திருவெங்கனூர், தா.பழூர் அருகேயுள்ள அண்ணகாரன் பேட்டை, சாத்தம் பாடி, ஸ்ரீபுரந்தான், வடுகபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மணல் கொள்ளை அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் உள்ள பட்டா இடங்களில் சவுடு மண் எடுப்பதாகக் கூறி அனுமதி பெற்று மணல் எடுப்பதோடு, இரவு நேரத்தில் கொள்ளிடம் ஆற்றுப் பகுதிகளில் இறங்கி ஆயிரக்கணக்கான லாரிகளில் தினம்தோறும் மணல் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மணலை ஏற்றிக்கொண்டு ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான லாரிகள் சென்றுகொண்டிருக்கிறது.
இதைக் கண்டும் காணாமல் இருக்க ஒரு நாளைக்கு சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு 10,000 முதல் 20,000 வரை கப்பம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள காவலர்களே அவர்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகள் வரையிலும் மணல் லாரியை பாதுகாப்பாக வழி அனுப்பி வைக்கிறார்கள்.
காவல்துறைதான் இப்படி என்றால், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரி ஒருவர் ஒட்டுமொத்த வருவாய்த்துறைக்கும் அவருதான் ஆளும்கட்சியினரின் உதவியோடு பணத்தைப் பிரித்து வழங்கிக்கொண்டிருக்கிறார்.
இப்பகுதியில் மணல் எடுத்தால் நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கப்படுகிறது என்றும், யாரும் மணல் அள்ளக் கூடாது என்றும் பொது மக்களே காவல்நிலையத்தில் தொடர்ந்து புகார் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இரண்டு நாள்களுக்கு முன்பு கூட இப்பகுதிகளில் மணல் எடுப்பதைத் தடைசெய்ய வேண்டும் என்று மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுக்கையிட்டு பொதும்மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இன்றுவரையிலும் நடவடிக்கை இல்லை” என்றார் வேதனையோடு.
இரண்டு நாள்களுக்கு முன்பு மணல் ஏற்றி இறக்கிவிட்டு வந்தபோது லாரி மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதனையும் ஆளும்கட்சி வட்டாரத்தினர்தான் வெளியில் தெரியாமல் பேசி முடித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஆட்சியர் ரத்னாவிடம் பேசினோம். ``இந்தத் தகவல் நீங்கள் சொல்லித்தான் எனக்கு தெரியவருகிறது. உடனே ஆர்.டி.ஒ தலைமையில் விசாரிக்க குழு அமைக்கிறேன். அவர்கள் தரும் தகவலைக் கொண்டு நடவடிக்கை எடுக்கிறேன்" என்று முடித்துக்கொண்டார்.
source https://www.vikatan.com/government-and-politics/crime/sand-mafia-issue-in-ariyalur-district
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக