'கொரோனா நோய்த் தொற்று பலரையும் மீண்டு வர முடியாத அளவுக்கு கஷ்டத்தைக் கொடுத்து கசப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு உலகை உலுக்கியபோதும் எஞ்சும் அளவுக்கு சில நன்மைகளை நிகழ்த்தியுள்ளது. அப்படியான நிகழ்வு ஒன்று மதுரையில் ஏற்பட்டுள்ளது. பொதுவாக, மாமியார் - மருமகள் என்றாலே எதிரும் புதிருமாதான் இருப்பார்கள் எனச் சமூகத்தில் பேசப்படுகிறது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் உறவினர்கள் வீட்டு விருந்துக்குச் செல்ல முடியாத தன் மகன் மற்றும் மருமகளுக்கு 101 வகை உணவுகள் செய்து பரிமாறிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மூன்றுமாவடி பகுதியைச் சேர்ந்தவர் அகிலா - அபுக்கலாம் தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகனுக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்த நிலையில், தன் இரண்டாவது மகன் அபுல்ஹசனுக்கு கடந்த 9-ம் தேதி ஷப்னா என்ற பெண்ணுடன் திருமணம் முடித்து வைத்தனர். ஊரடங்கு சமயம் என்பதால் எளிமையான முறையில் முக்கிய உறவினர்கள் மட்டும் திருமணத்தில் கலந்துகொண்டனர். புதுமண தம்பதி உறவினர்களின் வீட்டுக்கு விருந்துக்குக்கூட செல்லாமல் வீட்டிலே இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் தன் மகன், மருமகளுக்கு விருந்து வழங்கி உற்சாகப்படுத்த வேண்டும் என்ற நோக்கதோடு 101 வரை வகை உணவு வழங்கிய அசத்திய சம்பவம் பலரையும் வியப்படையச் செய்துள்ளது.
இது குறித்து அகிலா நம்மிடம், "என் மூத்த மகன் திருமணம் முடிந்து எங்கள் உறவினர்கள் இல்லத்துக்குச் சென்று விருந்து சாப்பிட்ட ரசனையான அனுபவங்களைச் சொன்னது தற்போதும் மனதில் நிற்கிறது. ஆனால், என் இளையமகனும் மருமகளும் ஊரடங்கால் வெளியில் செல்ல நாங்க அனுமதிக்கவில்லை.
அதே சமயம் புதுவித அனுபவத்தைக் கொடுக்க 101 வகை உணவைத் தயார் செய்து கொடுத்தோம். அதில் பிரியாணி, பிரைட் ரைஸ், மட்டன், சிக்கன், மீன், முட்டை, காடை, லெமன், புளியோதரை, தயிர் சாதம், ஆம்லேட், புரோட்டா, சப்பாத்தி தொடங்கி அனைத்து வகையான சூப்புகள், பழ ஜூஸ்கள் முதல் அப்பளம் வரை எனக்குத் தெரிந்த வகைகளை சமைத்தும், சில உணவுகளை கடையில் வாங்கியும் கொடுத்தேன்.
என் மகனுக்கும் மருமகளுக்கும் ஊட்டியும் மகிழ்ந்தேன். விருந்தில் நிறைய உணவுகள் இருந்ததால் எங்கள் குடும்பத்தினர் ஒவ்வொரு உணவுவகையும் பகிர்ந்து சாப்பிட்டோம். எங்கள் வாழ்நாள் முழுதும் அசைபோட வைக்கும் நல்ல அனுபவமாக அமைந்துவிட்டது. உணவை வீணடிக்கும் பழக்கம் எங்களுக்கு எப்போதும் இருந்ததில்லை. இந்த விருந்தில்கூட அப்படித்தான் திட்டமிட்டு சமைத்தோம்" என்றார் மகிழ்ச்சியாக.
source https://www.vikatan.com/news/tamilnadu/madurai-mother-in-law-arranged-101-food-varieties-for-her-son-and-daughter-in-law
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக