தென்காசி மாவட்டம் கடையம் அருகே வாகைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான அணைக்கரை முத்து என்பவர் தன்னுடைய தோட்டத்தில் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளார். அதற்காக வனத்துறை அலுவலகத்துக்கு இரவு 11 மணிக்கு மேல் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர் உயிரிழந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நெஞ்சுவலியால் அணைக்கரை முத்து உயிரிழந்ததாக வனத்துறையினரும், அவரை அடித்துக் கொன்றுவிட்டதாக குடும்பத்தினரும் தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவர் மன்ற மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகிறார்.
Also Read: தென்காசி:`வனத்துறை அலுவலகத்தில் விவசாயி மரணம்!' - நிவாரண உதவித் தொகை அறிவித்த முதல்வர்
அணைக்கரை முத்துவை தாக்கிய வனவர் நெல்லை நாயகம் உள்ளிட்ட வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என உயிரிழந்தவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்று 5-வது நாளாகப் போராடி வருகிறார்கள்.
இதற்கிடையே, குற்றச்சாட்டுக்கு உள்ளான வனவர் நெல்லை நாயகம் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழக அரசு சார்பாக அணைக்கரை முத்துவின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அரசு வழங்கிய நிவாரணத் தொகையை ஏற்க மறுத்து குடும்பத்தினர் போராடி வருகிறார்கள். இது தொடர்பாக உயிரிழந்த அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி கூறுகையில், ``என் தந்தையை வனத்துறையினர் அழைத்துச் சென்று அடித்துக் கொன்று விட்டார்கள். அவர்கள் மீது இதுவரை கொலை வழக்கு பதியவில்லை.
என் தந்தையின் உடலில் 12 இடங்களில் காயங்கள் இருந்ததை நாங்கள் பார்த்தோம். விசாரணையின்போது மாஜிஸ்திரேட் பார்வையிட்டு அதைக் குறித்துக்கொண்டார். எங்கள் சம்மதம் இல்லாமலே உடலை போஸ்ட்மார்ட்டம் செய்துவிட்டார்கள். அதன் ரிப்போர்ட்டை இதுவரை கொடுக்கவும் இல்லை.
தந்தையின் மரணத்தால் நாங்கள் நிலைகுலைந்து போயிருக்கும் நிலையில், நிவாரண உதவியை அரசு அறிவித்திருக்கிறது. என் தந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்காமல் அவரைக் குற்றவாளியாக முதல்வர் சுட்டிக் காட்டியிருப்பது வேதனையளிக்கிறது.
எங்களுக்கு நிதி முக்கியமல்ல. நீதி கிடைக்க வேண்டும். 10 லட்சம் கொடுத்துவிட்டால் எங்களுக்கு தந்தை கிடைத்துவிடுவாரா? நாங்கள் கஷ்டப்பட்டவர்கள்தாம் என்றாலும் எங்களுக்குத் தேவையான பணத்தைச் சம்பாதித்துக்கொள்ளத் தெரியும். என் தந்தையைக் கொன்ற வனத்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம்” என்றார்.
source https://www.vikatan.com/news/general-news/family-members-refused-to-get-the-body-of-deceasedfarmer-request-justice
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக