கொரோனா வைரஸ் மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது, அதிலும் குறிப்பாக, இந்த வைரஸால் அமெரிக்கா மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. அங்கு இதுவரை 43,71,839 பேர் பாதிக்கப்பட்டு 1,49,849 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் இந்த நேரத்தில் தற்போது அங்கு பல மாகாண மக்களுக்கு ஒரே வகையான நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சைக்ளோஸ்போரா கெய்டனென்சிஸ் என்ற சிறிய ஒட்டுண்ணியால் ஏற்படும் குடல் தொற்றான சைக்ளோஸ்போரா என்ற நோயால் 11 மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக இது மாசுபட்ட பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதன் மூலம் மனித உடலுக்குள் செல்கிறது, கடுமையான வயிற்றுப்போக்கு இதன் அறிகுறியாக உள்ளது.
மே மாதத்தில் ஒரு சிலருக்கு இந்த நோய் இருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் தற்போது ஜார்ஜியா, அயோவா, இல்லினாய்ஸ், மினசோட்டா, பென்சில்வேனியா, வடக்கு மற்றும் டகோட்டா உள்ளிட்ட பல மாகாணங்களில் சுமார் 600-க்கும் அதிகமானவர்கள் இந்த நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்காவின் உணவு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த நோய் தொடர்பான தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
ஒரே நேரத்தில் 11 மாகாணங்களைச் சேர்ந்த மக்களுக்கு எப்படி இந்தப் பாதிப்பு ஏற்படும் என்ற விசாரணையின் இறுதியில் ஒரே ஒரு நிறுவனம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவாக இருந்துள்ளது. இல்லினாய்ஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஃபிரஷ் எக்ஸ்பிரஸ் என்ற நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட காய்கறி சாலட் கலவையால்தான் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சாலட்டில் மாசுபட்ட சிவப்பு முட்டைகோஸ், லெட்டியூஸ் மற்றும் கேரட் ஆகியவை இருந்துள்ளன.
Also Read: கொரோனா: `நிமிடத்துக்கு 43 பேர்; மணிக்கு 2,600 பேர்!’ - பாதிப்பால் திணறும் அமெரிக்கா
சில்லறை விற்பனை நிறுவனமான ஃபிரஷ் எக்ஸ்பிரஸ் தயாரித்த உணவுகள் பல மாகாணங்களிலும் விற்கப்பட்டுள்ளன. இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்த நிறுவனத்தால் விற்பனை செய்யப்பட்ட பல உணவுப் பொருள்களும் நிறுவனத்தால் திரும்பப் பெறப்பட்டுள்ளன. மேலும், சாலட்கள் உண்பதைத் தவிர்க்குமாறு உணவு மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மக்களிடம் வலியுறுத்தியுள்ளது. அதேபோல் திரும்பப் பெறப்பட்ட எந்த உணவுப் பொருள்களையும் வாங்கவோ விற்கவோ கூடாது என உணவகங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்களின் பொருள்களை மட்டுமே மக்கள் பயன்படுத்துவது சிறந்தது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஃபிரஷ் எக்ஸ்பிரஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
source https://www.vikatan.com/news/international/600-people-fall-sick-after-eat-bagged-salad-in-us
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக