Ad

வெள்ளி, 3 ஜூலை, 2020

வாணியம்பாடி: `சிதிலமடைந்த அரசுப் பள்ளி!’ -ஹைடெக்காக மாற்றிய முன்னாள் மாணவர்கள்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த ஆலங்காயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 1990-1992ம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர், இப்போது அரசு மற்றும் தனியார்த் துறையில் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். இன்னும் சிலர் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பிஸினஸ் செய்கிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து அன்றைக்குப் போக்குவரத்து வசதிகூட இல்லாத ஊரில் படித்து உச்சத்தை எட்டிப்பிடித்திருக்கும் அந்த முன்னாள் மாணவர்கள், கடந்த ஜனவரி மாதம் 12-ம் தேதி, ‘சங்கமம்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் தங்களின் பள்ளியில் ஒன்றுகூடினர்.

புது பொலிவுடன் மாறிய வகுப்பறை கட்டடங்கள்

மீசைத் துளிர்விட்ட நாள்களில் பிரிந்துசென்று 28 ஆண்டுகளுக்குப் பிறகு தாடி நரைத்துச் சந்தித்துக்கொண்ட மகிழ்ச்சியான தருணத்தில், அவர்கள் சிறுப்பிள்ளைகளாகவே மாறிவிட்டனர். அதே சமயம், தங்களின் பள்ளி மிகவும் சிதிலமடைந்து மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்து வருத்தப்பட்டனர். வகுப்பறை கட்டடங்களை புதுப்பித்துத் தருமாறு பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் கோரிக்கை வைத்தார்.

உடனடியாக அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட முன்னாள் மாணவர்கள், 12 வகுப்பறைகள் கொண்ட 5 கட்டடங்கள், கலையரங்கத்தைப் புதுப்பித்து கொடுக்கும் பணியில் களமிறங்கினர். அதற்குள் கொரோனா ஊரடங்கு அனைவருடைய இயல்பு வாழ்க்கையையும் தலை கீழாகப் புரட்டிப்போட்டது. எனினும், மனம் தளராமல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், பள்ளியைப் புதுப்பித்துள்ளனர். அனைத்து கட்டடங்களையும் பழுது பார்த்து வர்ணம் பூசி தயார் படுத்திவிட்டனர்.

புது பொலிவுடன் மாறிய வகுப்பறை கட்டடங்கள்

12 வகுப்பறைகள் கொண்ட 5 கட்டடங்களுக்கும் காமராஜர் கட்டடம், சேரர் மாளிகை, சோழர் மாளிகை, பாண்டியர் மாளிகை, பல்லவர் மாளிகை என்று பெயர் சூட்டி பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். இந்த அற்புதமான செயலை செய்து முடிக்கக் காரணமாக இருந்தது, முன்னாள் மாணவர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான பாலசுப்பிரமணி, பாபு, வெங்கடேசன், முரளி ஆகியோர்தான்.

இவர்களிடம் பேசினோம். ‘‘எங்களை ஆளாக்கிய இந்த பள்ளியை புதுப்பித்துக் கொடுப்பதில் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதைவிடக் கடன் பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்லவேண்டும். இது எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. இதன் மூலம் அளவற்ற மகிழ்ச்சியும், ஆத்ம திருப்தியும் கிடைத்திருக்கிறது. பள்ளியைப் புதுப்பிக்க ரூ.11 லட்சம் செலவாகியிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளியை மாணவர்களின் பயன்பாட்டிற்காக வழங்க உள்ளோம்.

முன்னாள் மாணவர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள்

புது பொலிவாக மாறியப் பள்ளியில் அமர்ந்து படிக்கும்போது ஒருவித புத்துணர்ச்சி மாணவர்களிடம் ஏற்படும் என்று நம்புகிறோம். இதில் நாங்கள் விளம்பரம் தேடவில்லை. இளையத் தலைமுறையினருக்கு தூண்டுகோலாக இருக்க விரும்பினோம். அதற்காகத்தான் கடினமான இந்த நேரத்திலும் இவ்வளவுப் பெரிய திட்டத்தைச் செய்து முடித்திருக்கிறோம். எங்களின் செயலைப் பார்த்து பூரித்துப் போன எங்களுக்கு முன்னாள் படித்த மாணவர்களும்கூட பள்ளிக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று முன் வந்துள்ளனர்’’ என்றனர் மெய்சிலிர்க்க.



source https://www.vikatan.com/news/tamilnadu/vaniyambadi-government-school-was-converted-to-hi-tech-by-the-alumni

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக