உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டம், சவுபேர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதி, பிக்ரூ (Bikru) என்ற கிராமம். இது அம்மாநில தலைநகர் லக்னோவிலிருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி, 50 வயதான விகாஸ் தூபே. இவர்மீது கொலை, கொள்ளை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என 60 -க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ரவுடி விகாஸ் தூபே அடிக்கடி கைதுசெய்யப்படுவதும் பிறகு விடுவிக்கப்படுவதும் வழக்கமான ஒன்றாக நடந்துவந்துள்ளது. இந்நிலையில், சமீபத்தில் தூபே செய்த ஒரு கொலை முயற்சி தொடர்பாக அவரைக் கைதுசெய்வதற்காக சவுபேர் சரக போலீஸார் அவரைத் தேடிவந்துள்ளனர். இதற்கிடையில் ரவுடி தூபே, பிக்ரூ கிராமத்தில் மறைந்திருப்பதாகக் காவலர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டிஎஸ்பி, காவல்துறை ஆய்வாளர், இரு துணை ஆய்வாளர்கள் மற்றும் பல போலீஸார் அடங்கிய குழு இணைந்து தூபேவை கைது செய்வதற்காக நேற்று நள்ளிரவு பிக்ரூ கிராமத்துக்குச் சென்றுள்ளனர்.
எதிர்பார்க்காத தாக்குதல்:
காவலர்கள் வருவதை முன்னரே அறிந்த ரவுடி, அந்த கிராமத்துக்குச் செல்லும் வழி முழுவதும் பல்வேறு தடுப்புகளை அமைத்துள்ளார். ஒரு புல்டோசர் உள்பட அனைத்து தடைகளையும் தாண்டி, போலீஸ் குழு இன்று அதிகாலை அந்த கிராமத்துக்குள் நுழைந்துள்ளது. அப்போது, ஒரு வீட்டின் மாடியில் மறைந்திருந்த பல ரவுடிகள், கண் இமைக்கும் நேரத்தில் போலீஸாரை நோக்கி திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத காவலர்கள், சுதாரித்துக்கொண்டு மறு தாக்குதல் நடத்துவதற்குள் பலரையும் சரமாரியாகச் சுட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், டிஎஸ்பி தேவேந்திர மிஸ்ரா, மூன்று சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 4 கான்ஸ்டபிள்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். பின்னர், பக்கத்துக்கு மாவட்டமான கன்னூஜ் மாவட்ட காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து, காயமடைந்த போலீஸாரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர். அதற்குள் தூபே உள்பட அனைத்து ரவுடிகளும் கிராமத்திலிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களைப் பிடிக்க கூடுதல் சிறப்புப் படை அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ரவுடி தூபே மீது 1990-ம் ஆண்டு முதன்முதலாக ஒரு கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு, பல்வேறு வழக்குகள் தொடர்ந்து பதிவாகியுள்ளன. 2001-ம் ஆண்டு கான்பூர் பா.ஜ.க தலைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தூபே மீது குற்றம்சாட்டப்பட்டது, பிறகு, 2002-ம் ஆண்டு தூபே தானாக வந்து சரணடைந்து, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். இவர், அரசியல் கட்சி பிரமுகர்களின் ஆதரவுடன் கட்சியிலும் செயல்பட்டுள்ளார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிர்ச்சி!
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். உயிரிழந்த காவலர்கள் குடும்பங்களுக்கு தன் இரங்கலைத் தெரிவித்ததோடு, தப்பியோடிய ரவுடிகளைப் பிடிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, கான்பூர் கூடுதல் எஸ்பி, போலீஸ் ஐஜி, மாவட்ட போலீஸ் எஸ்பி போன்ற பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது பற்றிப் பேசியுள்ள டிஜிபி அவாஸ்தி, ‘இந்த ஆப்பரேஷனில் 8 காவலர்கள் கொல்லப்பட்டு, 7 பேர் பேர் படுகாயமடைந்துள்ளனர். ரவுடி தூபேவை பிடிக்கும் ஆப்பரேஷன் இன்னும் முடியவில்லை. இருட்டை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு, தூபே இந்த கொடூர சம்பவத்தைச் செய்துள்ளார். சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். மேலும், திறமை வாய்ந்த குழுவும் அந்த கிராமத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் 8 சக காவலர்களை இழந்துள்ளோம். ரவுடி தூபே விரைவில் கைது செய்யப்பட்டு அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
source https://www.vikatan.com/news/india/eight-policemen-shot-dead-in-uttar-pradesh
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக