Ad

வியாழன், 2 ஜூலை, 2020

தஞ்சாவூர்: பெண் ஊழியருக்கு கொரோனா; அதிகாரிகள் அலட்சியத்தால் பதறும் அறநிலையத்துறை

தஞ்சாவூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறிய நிலையிலும் அவரை வலுக்கட்டாயமாகப் பணிக்கு வர வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சத்தால் மூடப்பட்ட அலுவலகம்

இதுகுறித்து அறநிலையத்துறை ஊழியர்கள் சிலரிடம் பேசினோம். `` தஞ்சாவூர் பெரிய கோயில் மேம்பாலம் அருகே இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் டைப்பிஸ்ட்டாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் விடுமுறையில் தேனிக்குச் சென்ற நிலையில் இங்கு ஹெட்கிளார்க்காக பணிபுரியும் சுரேஷ் என்பவர், அந்தப் பெண் ஊழியரை கடந்த வாரத்தில் வலுக்கட்டாயமாகப் பணிக்கு அழைத்தார்.

அப்போது அந்தப் பெண், எனக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இருக்கிறது. இப்போது வரக்கூடிய சூழ்நிலையில் உடல்நிலை இல்லை எனக் கூறிய நிலையிலும் உடனே வேலைக்கு வர வேண்டும் எனக் கூறினார். இதனால் அந்தப் பெண்ணும் பணிக்கு வந்துவிட்டார். அத்துடன் பணி செய்துகொண்டிருந்த சில மணி நேரங்களிலேயே இருமல், தும்மல் தொடர்ச்சியாக இருந்ததால் மீண்டும் அவர் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

கொரோனா பரிசோதனை

அங்கு சென்ற பெண் ஊழியருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் அச்சம் ஏற்பட்டது. மேலும் நேற்றைய முன்தினம் சுமார் 40 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் நாளை கிடைக்கும் எனத் தெரிகிறது. இதனால் தற்போது அலுவலகம் மூடப்பட்டுள்ள நிலையில் எங்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பரவுதலைத் தடுப்பதற்காகத் தமிழகம் முழுவதும் கோயில்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நாங்கள் குறைந்த அளவிலான பணிகளையே செய்து வந்தோம். அரசு அலுவலகங்களில் குறிப்பிட்ட அளவிலான பணியாளர்கள் மட்டுமே பணி செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், ஹெட்கிளார்க் சுரேஷ் விடுமுறையில் தேனிக்குச் சென்ற பெண் ஊழியரை பணிக்கு வர வலியுறுத்தியுள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் ஊழியர் வேறு வழியில்லாமல் வந்துள்ளார். அதன் பிறகு, அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இப்போது எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. தனக்கு அறிகுறி இருப்பதாகச் சொன்ன பிறகும் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை வர வைத்ததால் இப்போது ஒட்டு மொத்த அலுவலகமே மூடப்பட்டதுடன் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பரிசோதனை

உயர் அதிகாரிகளும் இதில் உரிய கவனம் செலுத்தவில்லை. தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. ஆனால், அரசு அதிகாரிகளே போதிய விழிப்புணர்வு இல்லாமல் நடந்துகொள்வதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து தஞ்சாவூர் அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவராம் குமாரிடம் பேசினோம், ``வாரத்தில் இரண்டு நாள்கள் பணிக்கு வர வேண்டும் என அரசு விதியிருக்கிறது. அதன்படியே அந்தப் பெண் பணிக்கு வந்தார். 2 மணி நேரத்தில் திருப்பி அனுப்பிவிட்டோம். எல்லோருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது அலுவலகம் செயல்படவில்லை” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/thanjavur-hrc-women-staff-tested-positive-for-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக