கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, வனபத்ரகாளியம்மன் கோயில், தேக்கம்பட்டி பகுதிகளில் தற்போது ஏராளமான யானைகள் வலம்வருவது வழக்கம். எனவே, பல்வேறு இடங்களிலிருந்து வந்த யானைகள் அங்கு தங்கியுள்ளன. பவானி ஆற்றில் தண்ணீர் உள்ளதால் மலைப்பகுதியிலிருந்து வெளியேறும் யானைகள், தண்ணீருக்காகவும் உணவிற்காகவும் தேக்கம்பட்டி பகுதிக்கு நாள்தோறும் வருவது வழக்கம்.
Also Read: யானை ஏன் குண்டா இருக்கு? - கற்பனை சிறார் கதை #MyVikatan
இந்நிலையில், தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் நடைபெற்ற பகுதிக்கு அருகே உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், காதில் ரத்தம் வழிந்த நிலையில் பெண் யானை ஒன்று இறந்துகிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், உயிரிழந்த பெண் யானைக்கு 20 வயது இருக்கும் என்று தெரியவந்துள்ளது. யானையின் காதுப் பகுதியில் ரத்தம் வழிந்த நிலையில் காயங்கள் உள்ளதால், துப்பாக்கியால் சுடப்பட்டதால் இந்த யானை உயிரிழந்ததா
அல்லது பட்டாசு வெடித்து விரட்டும்போது ஏற்பட்ட காயமா போன்ற கோணங்களில் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
கோவை மாவட்ட வனப்பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 11 யானைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல, சிறுமுகை வனச்சரகத்தில் 6 யானைகள் உயிரிழந்துள்ளன. மேலும், போளுவாம்பட்டி, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களிலும் யானைகள் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. யானைகள் தொடர்ந்து உயிரிழந்துவருவது சூழலியல் செயற்பட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் அருகே வனப்பகுதியில், 10 வயது மதிக்கத்தக்க ஓர் ஆண் காட்டு யானை உடல்நலக் குறைவால் சோர்ந்து படுத்துள்ளது. அதற்கு, வனத்துறையினர் சிகிச்சை அளித்துவருகின்றனர்.
source https://www.vikatan.com/news/tamilnadu/female-elephant-dies-in-near-mettupalayam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக