Ad

வியாழன், 2 ஜூலை, 2020

ரஷ்யா:`அரசியலமைப்பில் மாற்றம்; 2036 வரை அதிபர்?!’ - புதினின் அரசியல் கணக்கு

ரஷ்யாவில் அதிபர் பதவியில் இருப்பவர்கள், அந்நாட்டின் அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளின்படி தொடர்ந்து இரண்டுமுறை பதவி வகிக்கலாம். அதற்கு மேல் அவர்களால் பதவி வகிக்க முடியாது. இந்த நிலையில், ரஷ்யாவின் தற்போதைய அதிபர் புதின், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு தன்னுடைய அதிபர் பதிவியை நீட்டிக்க வழிசெய்யும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மக்களிடம் வாக்கெடுக்கும் பணி, கடந்த சில நாள்களாக நடைபெற்றுவந்தது. இந்த வாக்கெடுப்பில், அரசியலமைப்பைத் திருத்த மக்கள் அதிக அளவு ஆதரவு அளித்துள்ளதாகவும், இதனால் அதிபர் புதின் 2036-ம் ஆண்டு வரை அதிபர் பதவியில் நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வாக்குச்சீட்டு முறையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்கெடுப்பு

அதிபர் புதின், தன்னுடைய பதிவிக்காலத்தை நீட்டிப்பது தொடர்பாக, அரசியலமைப்பில் திருத்தம் செய்ய மக்களிடம் வாக்கெடுக்கும் ஆலோசனையைக் கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார். இதனையடுத்து, ஏப்ரல் 22-ம் தேதி வாக்கெடுப்பு நடைபெற இருந்தது. இதனிடையே, கொரோனா வைரஸ் அதிக பாதிப்புகளை ரஷ்யாவில் ஏற்படுத்தத் தொடங்கியது. அமெரிக்கா மற்றும் பிரேஸில் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, ரஷ்யா கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது.

இதனால், ஊரடங்கு உத்தரவுகளும் அமல்படுத்தப்பட்டன. எனவே, ஜூலை 1-ம் தேதி வாக்கெடுப்பு தள்ளி வைக்கப்பட்டது. ஒரேநாளில் வாக்கு எண்ணிக்கை நடத்துவதால், தனிமனித இடைவெளி பாதிக்கப்பட்டு வைரஸ் அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதால், வெவ்வேறு நாள்களில் மக்கள் வாக்குகளைப் பதிவுசெய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, ஜூன் கடைசி வாரத்திலிருந்து இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுவந்தது. அதிபர் புதின் உட்பட, அனைவரும் வாக்களித்து முடித்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்றுவருகிறது.

Also Read: `பாகுபாடு இல்லாமல் கொரோனா பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இதுவே சாட்சி!’-கலங்கும் ரஷ்ய அதிபர் புதின்

உலகின் மிகப்பெரிய நாடான ரஷ்யாவில், அரசியலைப்பில் மாற்றம் செய்வது தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில், ஏறக்குறைய 60 சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதில் 76.9 சதவிகித மக்கள் அரசியலமைப்பை மாற்ற ஆதரவு அளித்துள்ளதாக, அந்நாட்டின் மத்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிபர் புதின், அந்நாட்டின் அதிபராக 2000 முதல் 2008-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அதன்பிறகு, 2008 முதல் 2012 வரை பிரதமராகப் பணியாற்றினார். இதனையடுத்து, மீண்டும் அதிபராக 2012-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகித்து வருகிறார். 2024-ம் ஆண்டு வரை அவருடைய பதவிக் காலம் உள்ளது. இந்நிலையில், தற்போது அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டால், 2036-ம் ஆண்டு வரை புதின் அதிபர் பதவியில் நீடிப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை எண்ணிய வாக்குகளில் அதிக ஆதரவு கிடைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிப்பதால், அவர் 2036-ம் ஆண்டு வரை அதிபராக நீடிப்பது ஏற்கெனவே உறுதியானதாகக் கூறப்பட்டாலும், இறுதி முடிவுகள் விரைவில் தெரியும் என கூறப்படுகிறது.

வாக்கெடுப்புக்கு எதிரான போராட்டம்

வாக்கெடுப்பு தொடர்பாக புதின், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பேசும்போது, ``ரஷ்யாவின் எதிர்கால ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை உறுதிப்படுத்த மாற்றங்கள் தேவை” எனக் கூறியிருந்தார். இந்த வாக்கெடுப்பு தொடர்பாகப் பேசிய 79 வயதான வேலண்டினா, ``நாட்டுக்கு நல்ல அதிபர் இருக்கும் வரை எங்களின் வாழ்க்கை நன்றாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதேபோல செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வாக்களித்த இளம் வாக்காளர்களில் ஒருவரான செர்ஜி, ``நான் அரசியலமைப்பை திருத்துவதற்கு எதிராக வாக்களித்தேன். இதனால், என்ன மாற்றம் நடக்கும் என எனக்குத் தெரியவில்லை. என்னுடைய கருத்தை நான் தெரிவித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

அந்நாட்டின் முக்கிய அரசியல்வாதியான நாவல்னி, ``பிரதமராகவோ அல்லது அதிபராகவோ 2000 -வது ஆண்டு முதல் 67 வயதான புதின் செயல்பட்டுவருகிறார். அவர், தன்னை வாழ்நாள் முழுவதும் அதிபராகவே வைத்திருக்க விரும்புகிறார். இதனை நாம் புறக்கணிக்க வேண்டும். இந்த வாக்கெடுப்பு சட்டத்துக்கு எதிரானது” என்று கூறியுள்ளார். புதினின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சில இடங்களில் போராட்டங்களும் நடந்துள்ளன.

Also Read: `ரஷ்யாவின் நிரந்தர அதிபர் ஆகிறாரா புதின்?!' -பிரதமர் மெட்வதேவ் ராஜினாமா பின்னணி



source https://www.vikatan.com/news/world/russia-changes-constitution-laws-for-allow-to-putins-rule

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக