Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

குமரி: ஃபேஸ்புக் நட்பு; இரண்டாவது திருமணம்! - ஃபேஷன் டிசைனரை ஏமாற்றிய இளைஞர்

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பெருமாள்புரத்தைச் சேர்ந்த 28 வயதுப் பெண் ஒருவர் கணவனைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். ஃபேஷன் டிசைனராகப் பணிபுரிந்து வரும் அந்தப் பெண்ணுக்கு 2013-ம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மூன்று மாதத்தில் பிரிந்துவிட்டார். அவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

இந்தநிலையில், கடந்த ஆண்டு நாகர்கோவில் அடுத்த கட்டையன்விளையைச் சேர்ந்த கேபிள் நிறுவனம் நடத்தி வரும் லோகேஷ் குமார் (28) என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் நட்பாகியுள்ளார் அந்தப் பெண். அப்போது லோகேஷ்குமார், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். இதை நம்பி அவருடன் மிக நெருக்கமாகப் பழகியுள்ளார். இருவரும் அடிக்கடி வெளியூர்களுக்கும் சென்று வந்துள்ளனர்.

இதற்கிடையில் லோகேஷ் குமார் தனது நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று கூறி அந்தப் பெண்ணிடம் இருந்து சிறிது சிறிதாக 30 பவுன் நகைகளை வாங்கியுள்ளார். பணத்தேவைக்காக அந்த நகைகளை அடகு வைத்திருப்பதாகவும், விரைவில் மீட்டு தருவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.

லோகேஷ் குமார்

பின்னர் கார் வியாபாரம் செய்யப் போவதாகக் கூறி ஐந்து லட்சம் ரூபாய் வாங்கியுள்ளார். அந்தப் பணத்தில் கார் வாங்கிய அவர், பின்னர் பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. பணமும் நகையும் வாங்கிய பிறகு லோகேஷ்குமாரின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தன்னைத் திருமணம் செய்யும்படி வலியுறுத்தியிருக்கிறார் அந்தப் பெண். ஆனால், லோகேஷ்குமார் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தியதுடன், ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடியாது என மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Also Read: ஃபேஸ்புக் மூலம் நட்பு - கல்லூரி மாணவரிடம் நகையைப் பறிகொடுத்த சென்னைச் சிறுமி

இதையடுத்து அந்தப் பெண் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அந்தப் புகாரில், `லோகேஷ் குமார் என்னிடம் நெருக்கமாகப் பழகியதுடன், பணம் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான் அவர் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டேன். அப்போது லோகேஷ் குமாரும் அவரது தாய் கீதா குமாரி, அவர் மாமா அய்யாசாமி, நண்பர் பிரதீப் ஆகியோர் சேர்ந்து என்னைத் தகாத வார்த்தைகளில் பேசி தாக்கினார்கள்.

என்னுடைய மொபைல் போனை பறித்து அதில் இருந்த சில ஆதாரங்களை அழித்ததுடன், போனையும் உடைத்துவிட்டனர். திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பணம் மற்றும் நகையை நான் திரும்பக் கேட்டேன். அதற்கு என்னுடன் நெருக்கமாக இருந்தபோது எடுத்த போட்டோக்களையும், வீடியோக்களையும் சமூக வலைத்தளத்தில் பரப்பி விடுவதாக லோகேஷ்குமார் மிரட்டினார். எனவே, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அந்தப் புகாரில் கூறியிருந்தார்.

எஸ்.பி அலுவலகம்

Also Read: Corona Live Updates: `இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேருக்கு கொரோனா பாதிப்பு’ - மத்திய சுகாதாரத்துறை

இந்த மனுவை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி நாகர்கோவில் மகளிர் காவல்நிலைய அதிகாரிகளுக்கு எஸ்.பி பத்ரிநாராயணன் உத்தரவிட்டார். அதன் பேரில் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து லோகேஷ் குமாரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய லோகேஷ் குமாரின் தாயார் கீதா குமாரி, மாமா அய்யாசாமி மற்றும் நண்பர் பிரதீப் ஆகியோர் மீது ஆறு பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து போலீஸார் தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/kanyakumari-youth-arrested-under-cheating-charge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக