Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

`உங்க தெருவுல மரம் நடணுமா... எங்களைக் கூப்பிடுங்க!' - அருப்புக்கோட்டையை வளமாக்கும் முயற்சியில் இளைஞர்கள்

விருதுநகர் என்றாலே கொளுத்தும் வெயிலும், சீமைக்கருவேல மரங்களும்தான் நினைவுக்கு வரும். ஆயிரக்கணக்கில் விதைக்கப்பட்ட சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து பெருகி, அந்தப் பகுதி நிலத்தை வறட்சியாக்கிவிட்டன. வேறு வழியில்லாமல் சீமைக்கருவேல வளர்ப்பையே தொழிலாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் பல விவசாயிகள். இந்த நிலை மாற சமூக ஆர்வலர்களும், அருப்புக்கோட்டை மக்களும் ஒன்றாக இணைந்து, `வனத்துக்குள் அருப்புக்கோட்டை' என்ற பசுமை அமைப்பை தொடங்கி, வறண்ட பூமியை பசுமையாக்க முயற்சிகள் செய்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் மரங்கள் நடுவதுடன் தொடர்ந்து பராமரித்தும் வருகின்றனர்.

இது தொடர்பாக இவ்வமைப்பின் நிறுவனர் சுந்தரராஜனை சந்தித்துப் பேசினோம்.

சுந்தரராஜன்

``தண்ணிக் கஷ்டம், வறண்ட நிலங்கள்ன்னு இயற்கை சார்ந்த பிரச்னைகள் எங்க மாவட்டம் முழுக்க பரவிக்கிடக்கு. ஒவ்வொரு வருஷமும் ஏதோவொரு காரணம் விளைச்சலை பாதிச்சா, விவசாயிகளால் என்ன பண்ண முடியும். எத்தனை வருஷம் கடன் வாங்கிச் சமாளிப்பாங்க. ஒரு கட்டத்துக்கு மேல, விவசாய நிலங்கள் வெச்சுருக்கவங்க கூட, பட்டாசுத் தொழில், அச்சுத் தொழில், தீப்பெட்டித் தொழில், பஞ்சாலைகள்னு கூலி வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க. விவசாய நிலம் தரிசாக மாற, வறட்சி இன்னும் அதிகமாகத் செய்யுது. உண்மையைச் சொல்லணும்னா இயற்கை, மனுஷங்களை ஏமாத்துறது இல்ல, மனுஷங்கதான் நம்ம தேவைக்காக இயற்கையை அழிச்சுக்கிட்டிருக்கோம். இயற்கையைக் காப்பத்தணும்னு ஒவ்வொரு மனுஷனும் நினைச்சா மட்டும்தான் இந்த நிலைமை மாறும். அந்த எண்ணத்தை மக்களோட மனசுக்குள் விதைக்க எடுத்த சின்ன முயற்சிதான் இது" - செடிகளை நடவு செய்து கொண்டே பேச ஆரம்பிக்கிறார் சுந்தரராஜன்.

`` `வனத்துக்குள் திருப்பூர்'ன்னு ஒரு அமைப்பு திருப்பூர் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு திருப்பூரை பசுமையாக்க முயற்சிகள் எடுத்தாங்க. அந்த அமைப்பின் நடவடிக்கைகளை சமூகவலைதளங்களில் பார்த்தேன். எனக்கும் அப்படி ஒரு மாற்றத்தை எங்களோட வறண்ட பூமியிலயும் ஏற்படுத்தணும்னு தோணுச்சு. அந்த ஆசையில் ஆரம்பிச்சதுதான் `வனத்துக்குள் அருப்புக்கோட்டை'. இளைஞர்கள், தன்னார்வலர்கள், விவசாயிகள், மக்கள், நன்கொடையாளர்கள்னு நிறைய பேரோட கூட்டு முயற்சி இது.

செடி நடவு செய்யும் பணியில்

`வனத்துக்குள் அருப்புக்கோட்டை' தொடங்கி, மூணு வருஷம் ஆகுது. இதுவரை மாவட்டம் முழுவதும் 8,000 மரங்கள் நடவு செஞ்சுருக்கோம். இதுகுறைவுதான். இன்னும் லட்சக்கணக்கான மரங்களை நடணுங்கிற கனவு எங்க அமைப்புக்கு இருக்கு. ஆரம்பத்தில் ரயில் நிலையம், காவல் நிலையம், கோர்ட்னு பொது இடங்களில் மரங்கள் நட ஆரம்பிச்சோம். அதை பார்த்து நிறைய மக்களுக்கு விழிப்புணர்வு வர ஆரம்பிச்சுது.

எங்க பகுதியில் மரம் நட்டு தர முடியுமானு கேட்க ஆரம்பிச்சாங்க. அப்படி கேட்குற மக்கள்கிட்ட, உங்க வீட்டுலனு தனியா இல்லாம, உங்க ஏரியா முழுக்க நட்டுத்தர்றோம்னு சொல்லுவோம். அவங்க ஏரியா முழுக்க பேசி, ஒவ்வொரு வீட்டுலயும் அனுமதி வாங்கிட்டா, அந்தப்பகுதியை தேர்வு செய்து மரம் நட்டு கொடுத்திருவோம். ஒரு ஏரியா முழுவதும் மரங்கள் நடவு செய்யும் போது ஒவ்வொருத்தரும் அவங்களே மரங்களை பராமரிப்பாங்க. அதோடு கார்பன் அளவு குறைஞ்சு பல்லுயிர் பெருக்கமும் உண்டாகும்.

வனத்துக்குள் அருப்புக்கோட்டை நட்ட மரங்கள்

ஆரம்பத்தில் தன்னார்வலர்களின் பங்கு கொஞ்சம் குறைவாகத்தான் இருந்துச்சு. நாங்க செய்கிற ஒவ்வொரு செயலையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து கொள்ள, இளைஞர்கள், மாணவர்கள்னு நிறைய பேர் எங்க கூட கைகோத்து உதவ ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலையில் எல்லாரும் ஒரே இடத்துல கூடி அடுத்து என்னன்னு திட்டமிடுறோம்" என்றவரிடம் என்ன மாதிரியான மரங்கள் விதைக்கப்படுகிறதென்று கேட்டோம்.

``வேம்பு, புங்கை, மகிலம், இலுப்பை, பிச்சி, கருநொச்சினு நாட்டு ரக மரங்கள் வளர்ப்பில்தான் அதிக கவனம் செலுத்துறோம். ஒரு சில இடங்களில் நெருக்கமாக மரங்கள் நட்டு குறுங்காடுகளும் உருவாக்கியிருக்கோம். நிறைய பேர் பிறந்த நாள் போன்ற விசேஷங்களுக்கு மரங்கள் நடுறாங்க. அப்படி நடவு செய்த மரங்களின் எண்ணிக்கைக்கு, இன்று தமிழகமே காடாக மாறியிருக்கணும். உண்மையை சொல்லணும்னா மரங்கள் நடுவதோடு நம்ம வேலை முடியல. அதைத் தொடர்ந்து பராமரிக்கணும். அப்போதான் மரம் நட்டதற்கான முழுப்பயனும் நமக்கு கிடைக்கும்.

பனை விதை சேகரிப்பு

நாங்க நடும் மரங்களை பராமரிக்கணுங்கிறதில் ரொம்ப உறுதியா இருக்கோம். நன்கொடையாளர்கள் உதவியோடு லாரிகளில் தண்ணீர் நிரப்பி, செடிகளுக்கு விடுறோம். எங்களால் பராமரிக்க முடியாத சில செடிகளை எங்க ஊரின் இளைஞரணி அமைப்பு பராமரிச்சுட்டு வர்றாங்க. மொத்தத்தில், நடவு செய்த மரங்களை காயவிடுறது இல்ல. சில மரங்கள் வளர்ச்சியில்லாம காய்ந்து போகும். அப்படிப்பட்ட மரங்களை வேரோடு பிடுங்கி எடுத்துட்டு வேறு மரங்கள் நட்டுருவோம். அதுமட்டுமில்ல, பனை மரங்களை அழிவிலிருந்து மீட்டெடுக்க முயற்சிகள் எடுத்துட்டு இருக்கோம். பனை குறித்த விழிப்புணர்வை பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு கொடுத்துட்டு இருக்கோம். எங்க பகுதியில் இருந்த கண்மாயை சுத்தப்படுத்தி பத்தாயிரம் பனை விதைகளை நட்டிருக்கோம். நம்மோட பாரம்பர்யத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொருத்தருக்கும் இருக்கு. அந்த எண்ணத்தை மக்களுக்கு கண்டிப்பா கொண்டு போய் சேர்ப்போம். இயற்கையை காக்க நினைக்கிற யார் வேண்டுமானாலும் எங்க கூட இணையலாம்.

எங்க அமைப்பை அடுத்தகட்டத்துக்கு எடுத்துட்டுப்போக யாரும் எங்களுக்கு பணம் கொடுத்து உதவவேண்டாம். எங்க அமைப்புக்குன்னு தனியா வங்கிக் கணக்கு ஆரம்பிக்க கூடாதுனு நாங்க உறுதியா இருக்கோம். எங்ககூட சேர்ந்து மரம் நட்டு உதவுங்கள்... இல்லைனா, இடம் கொடுங்க மரம் நட்டுக்கிறோம்னுதான் சொல்லுவோம். இடம் இல்லைங்கிறவங்க செடிகளாக, வாங்கிக்கொடுக்கலாம். தண்ணீர் லாரி ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

Also Read: 'பழைய திருப்பூரை இப்படித்தான் மீட்கப்போகிறோம்!' 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம்

இது சின்ன மாற்றம்தான். ஒவ்வொரு மாவட்டத்திலும் இது போன்ற அமைப்பு உருவாகணும்னு நினைக்கிறோம். ஆனால் எங்களோட இந்த சின்ன முயற்சியால் எங்க கந்தக பூமியை பசுமையாக்க முடியும்னு நம்பிக்கை. நாம் அழிச்ச இயற்கையை நாம்தான் மீட்டெடுக்கணும். மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்" - புன்னகையோடு விடைபெறுகிறார் சுந்தரராஜன்.



source https://www.vikatan.com/news/environment/vanathukkul-aruppukottai-organizations-efforts-to-tree-plantation-and-awareness

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக