Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

கோவை: பெரியார் சிலைக்கு காவிச் சாயம்! - தொடரும் போராட்டம்; வலுக்கும் கண்டனம்

கோவை சுந்தராபுரம் பகுதியில் திராவிடர் கழகம் சார்பில் அமைக்கப்பட்ட பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்நிலையில், நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் பெரியார் சிலை மீது காவிச் சாயத்தை ஊற்றி அவமதித்துள்ளனர். இதனிடையே, இன்று காலையில் பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் அளித்தனர்.

பெரியார் சிலை போராட்டம்

Also Read: `திட்டமிட்ட புறக்கணிப்பு!' - சேலம் பெரியார் பல்கலையைச் சுற்றும் `மகளிர் தின சுற்றறிக்கை' சர்ச்சை

பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டது குறித்து தகவலறிந்த திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலை முன்பு திரண்டனர். பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முழக்கங்களை எழுப்பியபடி அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையடுத்து தண்ணீர் ஊற்றி பெரியார் சிலை சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருவதால் பெரியார் சிலை முன்பு பாதுகாப்புக்காக போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக சிசிடிவி காட்சிகளைக் கொண்டு அடையாளம் தெரியாத நபர்களை, குனியமுத்தூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

பெரியார் சிலை பாதுகாப்பு

பெரியார் சிலைக்கு காவிச் சாயம் ஊற்றப்பட்ட சம்பவம், திராவிட இயக்கங்கள் மற்றும் கட்சிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுந்தராபுரம் பகுதியில் ம.தி.மு.க-வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோல, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காந்திபுரம் பெரியார் சிலை முன்பும், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் புலியகுளம் பெரியார் சிலை முன்பும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

பெரியார் சிலை அவமதிப்புக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, தி.மு.க எம்.பி கனிமொழி ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ``அ.தி.மு.க ஆட்சியில் சமீபகாலமாகப் பெரியார் சிலை தாக்கப்பட்டு இழிவு செய்யப்படுவது தொடர் நிகழ்வாக நடந்து வருகிறது. இதை நான் கடுமையாகக் கண்டிப்பதுடன், இந்தச் செயலை செய்தவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வைகோ கூறியுள்ளார்.

பெரியார் சிலை

“தமிழக மக்களின் ஆதரவை எந்தக் காலத்திலும் பெற முடியாத ஒரு கும்பல் பெரியார் சிலைகளைத் தொடர்ந்து அவமதித்து வருகிறது. அவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஏன்?” என்று கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/political-parties-protest-regarding-coimbatore-periyar-statue-damaged-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக