Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

கொரோனா: பரிசோதனை செய்யாமல் 6,000 பேருக்கு சான்று! - புர்கா அணிந்து தப்பியோட முயன்ற டாக்டர்

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச அளவில் 1.39 கோடி பேருக்கு வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல் வங்கதேசத்திலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உச்சத்திலேயே உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,96,323 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,496 ஆக உள்ளது.

கொரோனா சோதனை

இந்நிலையில் வங்கதேசத்தின் தலைநகரான டாக்காவில் இருக்கும் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு இலவசமாக சோதனை செய்வதாகக் கூறி அரசின் அனுமதியைப் பெற்றுள்ளது. அங்கு கொரோனா சோதனையும் செய்யப்பட்டுள்ளது. ஆனால், பல ஆயிரக்கணக்கானவர்களிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு சோதனையே செய்யாமல் போலியாக கொரோனா நெகட்டிவ் எனச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Also Read: கொரோனா :`நெகட்டிவ் சான்றிதழ் தர ரூ.2,500’ - பேரம் பேசிய நபர்; உ.பி மருத்துவமனைக்கு சீல்

இந்த விவகாரம் தொடர்பாக அந்நாட்டு சுகாதாரத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்று அதிகாரிகள் நடத்திய சோதனையில், அந்த மருத்துவமனையின் இரண்டு கிளைகளில் மட்டும் இதுவரை சுமார் 10,000-க்கும் அதிகமானவர்களுக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 4,000 பேருக்கு முறையான சோதனையும் 6,000-க்கும் அதிகமானவர்களுக்கு பரிசோதனையே இல்லாமல் போலி நெகட்டிவ் சான்றிதழ் வழங்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசம் - கொரோனா சோதனை

பின்னர், இந்த சர்ச்சையில் தொடர்புடைய மருத்துவர் மற்றும் நிர்வாகி முகமது ஷகீத்தை கைது செய்யும் பணிகள் தொடங்கின. ஆனால், அதற்குள் அவர் தலைமறைவாகியுள்ளார். 9 நாள்கள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு வங்கதேசம் - இந்தியா எல்லையில் உள்ள ஒரு ஆற்றின் அருகேயிருக்கும் கிராமத்தில் மறைந்திருந்த அவரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். அவர் புர்கா அணிந்தபடி, ஆற்றைக் கடந்து இந்தியாவுக்கு தப்பி ஓட முயன்றபோது இந்தக் கைது சம்பவம் நடந்துள்ளது. மேலும், இதே விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர்கள், நிர்வாகிகள் எனப் பலரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர் மட்டுமல்லாது வங்கதேசம் முழுவதும் பலருக்கும் சோதனை செய்யாமலே கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வழங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் வங்கதேசத்தின் கொரோனா பற்றிய உண்மைத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரம் அந்நாட்டில் பெரும் சர்ச்சையாகியுள்ளது.

Also Read: கொரோனா: `ஆமாம், நான்தான் ஊசி போட்டேன்!' -போலி மருத்துவரால் கரூரில் நேர்ந்த துயரம்



source https://www.vikatan.com/news/international/bangladesh-hospital-owner-accused-of-issuing-fake-negative-coronavirus-test-results

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக