Ad

புதன், 15 ஜூலை, 2020

ராஜஸ்தான்: `நான் பா.ஜ.க-வில் சேரப்பேவதில்லை!’ - சச்சின் பைலட் திட்டவட்டம்

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவி அசோக் கெலாட்டுக்கும் துணை முதல்வர் பதவி சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகாரம் தொடர்பான அதிருப்தி நிலவி வந்தது. அசோக் கெலாட், சச்சின் பைலட்டை ஓரம் கட்ட முயல்வதாக விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்தன.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்

இருவருக்குமான அதிகார மோதல் உச்சத்தை தொட, சச்சின் பைலட்டின் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியும் துணை முதல்வர் பதவியும் பறிக்கப்பட்டதாக நேற்று அறிவிப்பு வெளியானது. ஜெய்ப்பூரில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தனர். சச்சின் பைலட்டுக்கு பதில் கோவிந்த் சிங் என்பவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதல்வர் பதவிக்கு மறு அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே ட்விட்டரில் சச்சின் பைலட், `சத்தியத்தைத் தொந்தரவு செய்யலாம். ஆனால், தோற்கடிக்க முடியாது’ எனப் பதிவிட்டிருக்கிறார். மேலும், தனது ட்விட்டர் பயோவில், தனது பெயரில் கீழ், துணை முதல்வர் என்று இருந்ததையும் நீக்கியுள்ளார். சச்சின் பைலட் தன்னிடம் 30 எம்.எல்.ஏ-க்கள் இருப்பதாகக் கூறி வருகிறார். என்றாலும் அவருக்கு 15 முதல் 20 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுதான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. அதனால் சச்சின் பா.ஜ.க உடன் இணைந்தாலும் ஆட்சி மாற்றம் அளவுக்கு பாதிப்பு இருக்காது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எனினும் சச்சின் பைலட்டின் அடுத்தகட்ட நடவடிக்கை ராஜஸ்தான் அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதால், தனிக்கட்சி தொடங்கும் முடிவில் அவர் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இல்லை, அவர் பா.ஜ.க-வில் இணைந்து முக்கிய பொறுப்புகளைப் பெற இருக்கிறார் என்ற தகவல்களும் பரபரக்கின்றன.

சச்சின் பைலட்

இதனிடையே, தான் பா.ஜ.க-வில் இணையப்போவதில்லை என சச்சின் பைலட் தெரிவித்துள்ளார். ``நான் பா.ஜ.க-வில் இணைய மாட்டேன். டெல்லியில் கட்சியில் தலைமை பொறுப்பில் இருப்பவர்களின் மனதில் நஞ்சை விதைப்பதற்காகவே நான் பா.ஜ.க-வில் சேர இருப்பதாகத் தகவல்கள் பரப்புகிறார்கள்” என்று கூறினார்.

இதனிடையே ராஜஸ்தான் அரசுக்கு எதிராகச் செயல்பட்ட புகாரில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த திங்கள்கிழமை அன்று காங்கிரஸ் கட்சி எம்.ஏ-க்கள் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

Also Read: ராஜஸ்தான்: சச்சின் பைலட் பதவிப் பறிப்பு; ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமா? - என்ன நடந்தது?



source https://www.vikatan.com/government-and-politics/politics/im-not-joining-bjp-says-sachin-pilot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக