Ad

புதன், 15 ஜூலை, 2020

சாத்தான்குளம்: `சி.பி.ஐ-யின் நள்ளிரவு விசாரணை!’ - என்ன காரணம்?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தந்தை, மகன் காவல்நிலையத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதை அடுத்து இவ்வழக்கு, சி.பி.ஐ-க்கு மாற்றப்பட்டது. 7 பேர் கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், வழக்கை விசாரித்து வருகிறார்கள். இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சி.பி.ஐ

நேற்று, சி.பி.ஐ தரப்பில் காவலில் எடுக்கப்பட்ட ஆய்வாளார் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய ஐவரையும், மதுரை ஆத்திகுளத்தில் உள்ள சி.பி.ஐ அலுவலகத்தில் வைத்து நேற்று நள்ளிரவு முதல் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள் சி.பி.ஐ அதிகாரிகள். இந்நிலையில், நேற்று நள்ளிரவு, காவலர் முத்துராஜை அழைத்துக்கொண்டு, மதுரையில் இருந்து புறப்பட்ட சி.பி.ஐ அதிகாரிகள், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து முத்துராஜிடன் விசாரணை நடத்தியுள்ளனர். சுமார் இரண்டரை மணி நேர விசாரணைக்குப் பின்னர், மீண்டும் மதுரை அழைத்து வந்துள்ளனர்.

Also Read: சாத்தான்குளம் இரட்டைக்கொலை - “சி.பி.ஐ விசாரணையில் விரைவில் நியாயம் கிடைக்கும்!”

நள்ளிரவு விசாரணை ஏன் எனத் தகவலறிந்த வட்டாரத்தில் விசாரித்தபோது, ``ஜெயராஜ், பென்னிக்ஸ் இறப்புக்குப் பின்னர், இயல்பாகவே சாத்தான்குளம் மக்கள் போலீஸ் மீது கொதிப்பில் இருக்கிறார்கள். அதனால்தான், இருவரது இறுதிச்சடங்கில் போலீஸார் கலந்துகொள்ளக் கூடாது என மக்கள் கண்டிப்போடு கூறினர். எனவே, கைதான போலீஸாரை சம்பவ இடத்துக்கு அழைத்துவந்து விசாரிப்பதும் பாதுகாப்பு காரணங்களுக்காகத் தவிர்க்கப்பட்டது. வழக்கை சி.பி.சி.ஐ.டி கையில் எடுத்தபோது கூட, அவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துவரவில்லை. தற்போது வழக்கு சி.பி.ஐ வசம் உள்ளது. அவர்களும் வழக்குக்குத் தேவையான ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டும்.

காவலர்கள்

அப்படி இருக்கையில் கைதான போலீஸாரை சம்பவ இடத்துக்கு அழைத்து வர வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்படிதான் காவலர் முத்துராஜ், நள்ளிரவில் சாத்தான்குளம் அழைத்து வரப்பட்டார். பகலில் அழைத்து வந்தால், ஊர் மக்கள் சேர்ந்து, போலீஸாரை தாக்கலாம். அவர்கள் உயிருக்குக் கூட ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, இன்று இரவு, இரண்டு உதவி ஆய்வாளர்களை, சாத்தான்குளம் அழைத்துவந்து விசாரணை செய்ய சி.பி.ஐ திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு யோசித்து வருகிறார்கள் சி.பி.ஐ அதிகாரிகள். முன்னர், சிறைச்சாலையிலும் இதே நிலை வந்ததால்தான், அனைவரும் மதுரைக்கு மாற்றப்பட்டனர். முதலில் தூத்துக்குடியில் வைத்துதான் விசாரணை நடத்த சி.பி.ஐ அதிகாரிகள் திட்டமிட்டனர். ஆனால், பாதுகாப்பு காரணங்களே, மதுரை சி.பி.ஐ அலுவலகத்தில் விசாரணை நடத்தப்பட காரணம்” என்றனர்.

Also Read: சாத்தான்குளம்: `நள்ளிரவில் முத்துராஜுடன் தூத்துக்குடி பறந்த சி.பி.ஐ’ -சூடுபிடிக்கும் விசாரணை



source https://www.vikatan.com/news/tamilnadu/reason-behind-the-cbis-midnight-investigation

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக