Ad

புதன், 15 ஜூலை, 2020

"அஜித்தின் `காதல் கோட்டை' ஓடாது... பெட்டிக்கடை வெச்சுக்கோனாங்க!"- அகத்தியன் #25YearsofKadhalKottai

" 'காதல் கோட்டை' படத்தோட ஒன்லைன் புறநானூறுல இருந்துதான் எடுத்தேன். கோபெருந்தேவர், பிசிராந்தையார் நட்புல இருந்து தோன்றியது. நண்பர்கள் இருவரும் கதையோட கடைசிலதான் சந்திச்சுப்பாங்க. இதைப் பற்றி படிக்கும்போது இதே மாதிரியே ஆண் பெண் ரெண்டும் பேரும் பார்க்காமல் காதலித்து படத்தோட கடைசில சந்திச்சா என்னவாகும்னு தோணுச்சு. அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்துல உட்கார்ந்து இருந்தப்போ ஒன்லைன் தோணுச்சு. உடனே எழுத ஆரம்பிச்சிட்டேன்.

''புதுவிதமான காதல் கதைக்கான தயாரிப்பாளர் கிடைக்கிறது சிரமமா இருந்ததா?''

Ajith, Devayani

''கொஞ்சம் சிரமமா இருந்தது. ஏன்னா, `படத்தோட முதல் காட்சியில கதாநாயகனும் நாயகியும் சந்திச்சிக்கிட்டாக்கூட படம் ஓட மாட்டேங்குது. நீ கடைசி காட்சியில சந்திக்க வைக்குற, கண்டிப்பா ஓடாது'னு சொன்னாங்க. சில தயாரிப்பாளர்கள் 'படம் ஓடாது. பெட்டிக்கடை வெச்சு தரட்டுமா'னுகூட கேட்டாங்க. ஒரு சிலர், 'மூணு பெண் குழந்தைங்க வெச்சிருக்க... எங்கேயாவது 2,000 ரூபாய்க்கு வேலைக்குப் போ. உனக்கெல்லாம் சினிமா ஒத்து வராது'னு அட்வைஸ் பண்ணாங்க. இந்தக் கதையை நாடகமா போட சொன்னாங்க. 'எப்படி இவ்வளவு கேவலமா கதை யோசிச்சு இருக்க. சினிமானா என்னனு தெரியுமா'னு கேட்டாங்க. இவங்க யாரையும் பற்றி நான் கொஞ்சமும் கவலைப்படல. ஏன்னா, இவங்க எல்லாருமே குதிரைக்கு கடிவாளம் போட்ட மாதிரியே ஒரு பக்கமா போயிட்டு இருக்கிறவங்க. 'பழையன கழிந்து புதியன புகும்'ங்கிறது தன்னம்பிக்கையா இருந்தேன். ரெண்டாவது, புதிய விஷயத்தை சிறப்பா சொல்லிட்டா மக்கள் ஏத்துக்குவாங்கனு நம்பிக்கை இருந்தது. இந்த நேரத்துலதான் சிவசக்தி பாண்டியன் சார் கூப்பிட்டார். இந்தக் கதையைதான் சொன்னேன். அவரும், என்கிட்ட வித்தியாசமான கதையைதான் எதிர்பார்த்தார். பாண்டியன் சார்க்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உடனே, படம் பண்ணிட்டார். படத்தோட வெற்றி விழாவின்போது, 'இந்த டிரெயின்ல ஏறாம இறங்கிக் கொண்டவர்களில் நானும் ஒருவன்'னு சொன்ன தயாரிப்பாளர்கள் இருக்காங்க. மாறுபாடான சிந்தனைதான் 25 வருஷம் தாண்டியும் படத்தைப் பற்றி பேச வெச்சிருக்குனு நினைக்கிறேன்.''

தமிழ் சினிமாவில் இயக்குநருக்கான தேசிய விருதை முதலில் வாங்கியது நீங்கதானே?

''தேசிய விருது ஆரம்பிச்சு கிட்டதட்ட 44 வருஷங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டின் சார்பா சிறந்த இயக்குநர் விருது முதல் முறையா நான் வாங்குனேன். இதுக்கு முன்னாடி, சிறந்த படம் மற்றும் திரைக்கதைக்கான விருதுதான் கிடைச்சிருக்கு. பாண்டியன் சார், 'இந்தப் படம் ரிலீஸாச்சுனா நிறைய பணம் எனக்கும், நிறைய விருது உனக்கும் கிடைக்கும்'னு சொன்னார். திரைக்கதைக்கான விருதை இந்தப் படம் வாங்கிரும்னு நம்பிக்கை வெச்சிருந்தேன். ஏன்னா, ஒவ்வொரு காட்சியை யோசிச்சு யோசிச்சு மெனக்கெட்டு பண்ணியிருந்தேன். பெஸ்ட் இயக்குநர் விருதும் வாங்குவேன்னு நினைக்கவே இல்ல.''

படத்தோட கதை அஜித்திடம் எப்படிப் போனது?

அகத்தியன்

''எப்பவும், ஹீரோவை ஃபிக்ஸ் பண்ணிட்டு கதை பண்ணதில்ல. கதையை எழுதி முடிச்சிட்டு, யார் நடிச்சா நல்லா இருக்கும்னு யோசிப்பேன். இப்படியிருக்கும்போது அஜித் சார்கூட 'வான்மதி' படம் பண்ணேன். இந்தப் படம் பண்ண தயாரிப்பு நிறுவனத்துக்கே அடுத்த படமும் பண்ணலாம்னு முடிவாச்சு. அப்போ, அஜித் சார் இந்தக் கதைல நடிக்க ரெடியா இருந்தார். எனக்கும் நல்ல இளமை துள்ளும் இளைஞர் தேவைப்பட்டார். பெண்களுக்கு மிகவும் பிடித்தமான நாயகனாக அஜித் இருந்த காலகட்டம். கதை சொல்றேன்னு சொன்னதுக்குக்கூட, `அதெல்லாம் வேண்டாம் சார், செட்ல வந்து கேட்டுக்கிறேன்'னு அஜித் சொல்லிட்டார். செட்டுல ஒவ்வொரு காட்சியும் விளக்கும்போதும், காட்சியோட முந்தைய, பிந்தைய விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லுவேன். இப்படி சொல்லுறப்போ, காட்சியோட ஓட்டம் கேட்குறவங்களுக்கு புரிஞ்சிக்கிட்டு வரும். இப்படித்தான் இந்தக் கதையை அஜித் உள் வாங்கினார். மத்தபடி முழு கதையும் கேட்காமத்தான் நடிச்சு கொடுத்தார். இவரைத் தவிர வேற சாய்ஸ் எதுக்கும் நான் போகல.''

தேவயானி எப்படி வந்தாங்க?

காதல் கோட்டை

புதுமுகமான பெண் படத்துக்குத் தேவைப்பட்டாங்க. கமலிங்கிற கதாபாத்திரத்தின் தோற்றம் மாடர்ன் பொண்ணா இல்லாம மிடில் க்ளாஸ் பொண்ணா இருக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். பக்கத்து வீட்டுல, நம்ம வீட்டுல இருக்கிற பொண்ணு மாதிரி இருக்கணும்னு தேடிக்கிட்டு இருந்தப்போ, 'என்கூட ஒரு படத்துல நடிச்சாங்க. அவங்களை டெஸ்ட் பண்ணி பார்ப்போம்'னு அஜித்தான் சொன்னார். சரினு ஆபீஸுக்கு வரச் சொல்லியிருந்தேன். வரும்போதே ரொம்ப மாடனா வந்தாங்க. காஸ்ட்டியூம் டிசைனர கூப்பிட்டு 'சேலை கொடுத்து கட்டுக்கிட்டு வரச் சொல்லுங்க'னு சொன்னேன். கதைப்படி கமலி சிடுமூஞ்சி கேரக்டர். அப்போ, தேவயானி அவங்க அம்மாகிட்ட ஏதோ கோபமா பதில் சொன்னாங்க. இதைப் பார்த்தவுடனே நம்ம கமலி கேரக்டருக்கு சரியா இருப்பாங்கனு தோணுச்சு. உடனே, புரொடியூசர்கிட்ட இவங்க சரியா இருப்பாங்கனு சொன்னேன். 'எப்படிச் சொல்றீங்க'னு பாண்டியன் சார் கேட்டதுக்கு, 'பாடிலாங்குவேஜ், எக்ஸ்பிரஷன்ஸ் சரியா இருக்கும் சார்'னு சொன்னேன். தேவயானி, கமலி கேரக்டருக்கு சரியா பொருந்தி போயிருந்தாங்க. அதே மாதிரி தூர்தர்ஷன் சேனல்ல 'தலைவாசல்' விஜய் நடிச்ச நாடகம் பார்த்துட்டு படத்துல அவரை கமிட் பண்ணேன். 'நம்மவர்' படத்துல கரண் ரொம்ப பிரமாதமா நடிச்சிருந்தார். அவரோட பாடிலாங்குவேஜ் நல்லாயிருந்தது. 90'கள் காலகட்டத்துல இளைஞர்கள் இருந்த ஸ்டைலை நல்லா பிரதிபலிச்சிருந்தார். அதனால, கரணை சிவா கேரக்டருக்கு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். மணிவண்ணன் சார்கூட நேரடியான அறிமுகம் எனக்கு எப்பவும் உண்டு. ரெண்டாவது வித்தியாசமான கேர்கடர்கள்ல நையாண்டி தனத்தோட பேசுறது நல்லாயிருக்கும். இப்படிதான் ஒவ்வொரு கேரக்டரையும் கொண்டு வந்தேன்.''

படத்தோட க்ளைமாக்ஸ் காட்சி பற்றி சொல்ல முடியுமா?

'' 'காதலே நிம்மதி' பாட்டு ஷூட்காக வாகினி ஸ்டூடியோல செட் போட்டிருந்தோம். அப்போ, இயற்கையா மழை ஆரம்பிஞ்சிருச்சு. வாகினி தியேட்டர்ல செட் ரெடியாக மதியம் ஆகும்னு சொன்னாங்க. உடனே, காலையில தேவயானியையும் அஜித்தையும் கூட்டிட்டுப் போய் மழைல எடுக்க வேண்டிய காட்சியை எடுத்தேன். பிறகு, மதியம் செட்டுக்கு வந்து 'காதலே நிம்மதி' பாட்டுக்கான ஷூட்டிங் முடிச்சேன். திரும்பவும் இரவு நேரம் மழை வந்தப்போ அஜித், தேவயானி ஷூட்டிங்கை எடுத்தேன். மழையில நிறைய காட்சிகள் எடுத்திருந்தேன். இருந்தாலும் வெறும் அஞ்சு ஷாட் மட்டும் எடுத்துக்கிட்டு மத்ததெல்லாம் செயற்கை மழையில எடுத்த காட்சியை வெச்சேன். அதே மாதிரி படத்தோட க்ளைமாக்ஸ் காட்சியா முதல்ல, ரெண்டு பேரும் சேராத மாதிரி ஸ்க்ரிப்ட்ல எழுதியிருந்தேன். புரொடியூசர்கிட்ட சொன்னப்போ, 'ரெண்டு பேரையும் சேர்த்து வைக்குறியா'னு கேட்டார். அதனால, அப்போதே ஸ்க்ரிப்ட்ல க்ளைமாக்ஸ் காட்சி சேர மாதிரி மாத்திட்டேன். நிறைய பேர் ஸ்பாட்ல மாத்துனேன்னு நினைச்சுக்கிட்டு இருக்காங்க. ஆனா அது உண்மையில்லை. அப்படியிருந்தா ஸ்பாட்ல திடீர்னு கமலி கிஃப்ட் கொடுத்திருந்த ஸ்வெட்டர் எப்படி வந்திருக்கும்? சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன்ல வேற 2 மணியில் இருந்து 4 மணி வரைக்கும்தான் பெர்மிஷன் கொடுத்திருந்தாங்க. அதே மாதிரி கமலி டிரெயின்ல இருந்து குதிக்குற ஷாட் ஒரே டேக்குல எடுத்தது. ஸ்டெடி கேமரா வெச்சி எடுத்தாங்க.''

படத்துக்கான பாடல்கள் எல்லாமே நீங்களே எழுதியும் இருந்தீங்களே?

''இயல்பாவே பாட்டு எழுதணும்னு எண்ணம் எனக்குள்ள வந்தது இல்ல. இருந்தாலும், இதுல பிராக்டீஸ் பண்ணிக்கிட்டே இருப்பேன். கவிஞர் காளிதாஸ் சார் பாட்டு எழுதும்போது பக்கத்துல உட்கார்ந்து கவனிப்பேன். 'காதல் கோட்டை' சமயத்துல நானே பாடல் எழுத வேண்டிய சூழலும் வந்திருச்சு. யாரும் எனக்கு பாடல் வரிகள் எழுத மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஏன்னா, முக்கியமான சிலரின் பாடல்கள் பிடிக்கலைனு சொல்லிட்டேன். அதனால, என்னோட படங்களுக்கு பாடல் எழுத யாரும் விருப்பப்படல. ஆனா, சொன்னவங்க பின்னாளில் என்னை கூப்பிட்டு பாராட்டியும் இருக்காங்க. முதல்ல, 'கவலைப்படாத சகோதரா' பாட்டை எழுதினேன். இதுக்குப் பிறகு எல்லா பாடல்களும் அப்படியே எழுத ஆரம்பிச்சிட்டேன். பிறகு, என்னோட படங்கள் எல்லாத்துக்கும் பாடல்கள் எழுத ஆரம்பிச்சிட்டேன். இதுக்கு தேவா சாரும் எனக்கு உதவியா இருந்தார். எங்க இருவரின் நட்பு தேவாவின் முதல் படத்துல இருந்து தொடங்கியது. ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் சாரும் அழகான ஒளிப்பதிவு கொடுத்திருந்தார். இந்தப் படத்தை இந்தியில எடுத்தபோதும் என்கூட சேர்ந்து பயணம் செஞ்சார்.''

படம் ரிலீஸான முதல் நாள் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைச்சது?

காதல் கோட்டை

''ஏவி.எம் ராஜேஸ்வரி தியேட்டர்ல முதல் காட்சி பார்த்தேன். கொஞ்சம் உள்ளுக்குள்ள பயமிருந்தது. 'நலம் நலமறிய ஆவல்' பாட்டு ஓடிக்கிட்டு இருந்தப்போ சிலபேர் எந்திரிச்சி வெளியே போயிட்டாங்க. கடைசி அரைமணி நேரம் தியேட்டர்ல இடைவிடமா சத்தம் போட்டுக்கிட்டே இருந்தாங்க. எதுக்கு கத்துறாங்கனு ஜட்ஜ் பண்ண முடியல. என்னோட மேனேஜர் சிவாகிட்ட, 'ஏன் இப்படி கத்துறாங்க'னு கேட்டேன். படம் ரொம்ப பிடிச்சு எமோஷன்ல கத்துறாங்கனு சொன்னார். எனக்கு அப்படி தோணலயேனு சொல்லிட்டு, திரும்பவும் மதியம் காட்சிக்கு அப்படியே உட்கார்ந்துட்டேன். அப்போதான் ஆடியன்ஸ் எந்தளவுக்கு ரசிச்சு ஆரவாரம் பண்ணியிருக்காங்கனு புரிஞ்சது. இந்தப் படம் வெற்றி பெற்றாதான், 'எனக்கு சினிமா வாழ்க்கை. இல்லனா இல்லை'னு நண்பர்கள்கிட்ட சொல்லிக்கிட்டே இருப்பேன். படம் மிகப்பெரிய வெற்றியடைஞ்சும் நானும் அஜித்தும் ஒண்ணா சேருவதற்கு அதற்குப் பிறகு சந்தர்ப்பம் கிடைக்கல.''



source https://cinema.vikatan.com/tamil-cinema/director-agathiyan-recalls-about-his-movie-kadhal-kottai-with-ajith

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக