சமீபத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான பி.ஜி.முத்தையா தயாரித்த யோகி பாபுவின் `காக்டெய்ல்’ படத்தையும், வரலட்சுமி நடித்த `டேனி’ படத்தையும் `ஜீ5’ தளத்துக்கு நேரடி ரிலீஸுக்காகக் கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவரிடமும், அந்தப் பட இயக்குநர்களிடமும் பேசினேன்.
`` `காக்டெய்ல்’ படம் தியேட்டரில் ரிலீஸாகுறதுக்கு ஒரு வாரத்திற்கு முன்னாடிதான் லாக்டெளன் அறிவிச்சாங்க. தியேட்டர் ரிலீஸ் வரைக்கும் போய், அதுக்கான செலவுகளையும் பண்ண பிறகு படம் ரிலீஸாகாமல் போனதால, ஒரு வாரத்துக்கு அப்புறமே ஓ.டி.டி-ல ரிலீஸ் பண்றதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டேன். சாட்டிலைட் ரைட்ஸுக்காக `ஜீ5’யில ஏற்கெனவே `காக்டெய்ல்’ படத்தையும் `டேனி’ படத்தையும் பார்த்திருந்தாங்க. அதனால எனக்கு அவங்ககிட்ட பேசுறது ஈசியா இருந்துச்சு. அப்படி மூவ் பண்ணித்தான் இந்த ரெண்டு படங்களையும் ஓ.டி.டி-ல ரிலீஸ் பண்றதுக்கு கமிட் பண்ணேன். இந்த இரு படங்களின் இயக்குநர்களைப் பொறுத்தவரைக்கும் இப்போ இருக்கிற சூழல் என்னன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும். அதனால, என்னோட இந்த முடிவுக்கு அவங்க எதுவும் மறுப்பு சொல்லலை.
வரலட்சுமி லாக்டெளன் ஆரம்பிச்சதில் இருந்தே, `ஓ.டி.டி ரிலீஸுக்கு நாம கொடுக்கலாமா’ன்னு கேட்டுட்டே இருந்தாங்க. `பொன்மகள் வந்தாள்’ ஓ.டி.டி உறுதியானதுக்கு அப்புறமும் எனக்கு கால் பண்ணி, `நாமளும் கொடுக்கலாம்’னு சொல்லிட்டே இருந்தாங்க. இப்போ இது கன்ஃபர்ம் ஆனதில், அவங்களுக்கு ரொம்பவே சந்தோஷம். நம்ம கையில் தங்கம் இருந்தால், எத்தனை நாள் ஆனாலும் வெயிட் பண்ணி வித்துடலாம். ஆனால், கையில் இருக்கிறது படம். அதை அதுக்கான நேரம் வரும்போதே வித்துடணும். படம் வெளியில வரணும்னு சிறிய அளவு நஷ்டத்தில்தான் படத்தை வித்திருக்கேன். இன்னும் லேட்டாகி இருந்தால், நிலைமை மோசமாகியிருக்கும்’’ என்றார் தயாரிப்பாளர் முத்தையா.
ஜூலை 10-ம் தேதி ரிலீஸாகவிருக்கும் `காக்டெய்ல்’ படத்தின் இயக்குநர் ரா.விஜய முருகனிடம் பேசும்போது, ``தியேட்டரில் ரிலீஸ் பண்ணணும்னுதான் இந்தப் படத்தை எடுத்தோம். அதுக்கான வேலைகள் எல்லாமே கிட்டத்தட்ட நடந்து முடிஞ்சதுக்கு அப்புறம்தான் லாக்டெளன் ஆச்சு. என்னதான் இருந்தாலும் சினிமா மூலமா மக்களை என்டர்டெய்ன் பண்ணணும். அவங்க தியேட்டர்ல இருந்தாலும், வீட்ல இருந்தாலும் அவங்களை என்டர்டெய்ன் பண்றதுதான் எங்க வேலை. அதனால, இந்த ஓ.டி.டி ரிலீஸ்ல எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான்.
அதுமட்டுமில்லாம, இப்போ மக்கள் இருக்கிற கொரோனா டென்ஷன் மனநிலையில், ஜாலியான ஒரு படம் பார்த்தால் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆவாங்கன்னு நினைக்கிறேன். அப்படி ஒரு படமாதான் `காக்டெய்ல்’ படத்தை இயக்கியிருக்கேன். இந்த நம்பிக்கை எனக்கு யோகி பாபு அண்ணன் சொன்ன வார்த்தையில் இருந்துதான் வர ஆரம்பிச்சது. `காக்டெய்ல்’ படத்தோட ஷூட்டிங் நடந்திட்டு இருந்த சமயத்தில்தான், யோகி பாபு அண்ணன் `பிகில்’ படத்தோட ஷூட்டிங்கிலும் நடிச்சிட்டு இருந்தார். ஒரு நாள் `பிகில்’ ஷூட்டிங் முடிஞ்சு சாயங்காலம் `காக்டெய்ல்’ செட்டுக்கு வந்தவர், `எனக்கு நாளைக்கு காலையில 5 மணிக்கு `பிகில்’ ஷூட்டிங் இருக்கு. என்னை ஒரு மணிக்கு விட்டுடு முருகா’னு சொன்னார். ஆனால், அவர் நடிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறம் அவர் கிளம்பணும்னு நினைச்சதையே மறந்துட்டு 3 மணி வரைக்கும் நடிச்சிட்டு இருந்தார். அப்புறம் சுதாரிச்சிட்டு, வேக வேகமா கிளம்பினார். கிளம்பும்போது, `என் வாழ்க்கையிலேயே நான் சொன்ன ஒரு விஷயத்தை நானே மீறுனது இதுதான் முதல் முறை. நாளைக்கும் இதே மாதிரியான காட்சிகளா வெச்சு என்னை இங்கேயே இருக்க வெச்சுடாத முருகா’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார்.
இந்த வார்த்தைதான், இந்தப் படம் மக்களை திருப்திப்படுத்தும்கிற நம்பிக்கையை எனக்கு கொடுத்துச்சு. அந்த நம்பிக்கை வீண் போகாதுனு நினைக்கிறேன்’’ என்றார்.
ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகவிருக்கும் `டேனி’ படத்தின் இயக்குநர் ல.சி.சந்தானமூர்த்தியிடம் பேசினேன். ``இது ஒரு க்ரைம் த்ரில்லர் படம். பொதுவாவே க்ரைம் த்ரில்லர் படங்களெல்லாம் சிட்டியில் நடக்குற கதையாத்தான் இருக்கும். ஆனால், இது தஞ்சாவூர் வட்டார வழக்கில் இருக்கும். அதுவே ஆடியன்ஸுக்கு ஒரு புது அனுபவமா இருக்கும்னு நினைக்கிறேன்.
இந்த க்ரைம் கேஸை விசாரிக்கிற போலீஸ் அதிகாரியா வரலட்சுமி நடிச்சிருக்காங்க. கேஸில் ஒரு முக்கியமான விஷயத்தை `டேனி’ங்கிற நாய் கண்டுபிடிக்கும். இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து எப்படி உண்மையான குற்றவாளியை கண்டுப்பிடிக்கிறாங்க என்பதுதான் கதை. பெண்களை மையமா வெச்சு வர்ற படங்களை எல்லாம் தனியா பார்க்கிறதே தப்புனு நினைக்கிறேன். ஏன்னா, இந்த மாதிரியான படங்கள் எல்லாமே முன்னாடி இருந்தே வந்திருக்கணும். இப்போ எல்லாத்துறைகளிலும் பெண்கள் இருக்காங்க; அதிகமான எண்ணிக்கையிலும் இருக்காங்க. அப்போ, ஏன் அவங்களோட கதைகள் அதிக எண்ணிக்கையில் படமாகலைனு எனக்கு தெரியலை. அதனால, இந்தப் படத்தை நான் வுமன் சென்ட்ரிக் படம்னு பிரிச்சுப் பார்த்து எடுக்கலை. க்ரைம் நடக்குற ஏரியா இன்ஸ்பெக்டர் ஒரு பொண்ணு. அவங்க எப்படி இந்த கேஸை முடிச்சாங்கங்கிற விஷயம்தான், `டேனி’.
நிச்சயம் ஆடியன்ஸுக்கு இந்தப் படம் ஒரு புது அனுபவமா இருக்கும்’’ என்றார்.
source https://cinema.vikatan.com/tamil-cinema/pg-muthiah-explains-why-he-chose-ott-to-release-cocktail-and-danny-movies
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக