ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்' நேரடி OTT ரிலீஸ் எனும் புதிய பாதையைத் தமிழ் சினிமாவில் தொடங்கிவைக்க, அடுத்துவந்த 'பெண்குயின்' அந்தப் பாதையைத் தக்கவைக்கத் தவறிவிட்டது. இதனால், "OTT ரிலீஸ் எல்லாம் வேலைக்கு ஆகாது... லாபம் இல்லை" எனத் தமிழ் சினிமாவுக்குள் பேச்சுகள் பரவ ஆரம்பிக்க, இப்போது மிகப்பெரிய படங்களைத் தங்கள் தளங்களில் இறக்கி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்த OTT தளங்கள் முடிவெடுத்திருக்கின்றன.
அமேசான், நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட சர்வதேச OTT நிறுவனங்கள் தலா ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழ் சினிமாவில் மூதலீடு செய்ய முடிவெடுத்திருக்கின்றன. அடுத்த ஆறு மாதங்களுக்குப் புதிதாக படங்கள் எடுக்கவோ, வெப்சீரிஸ்களை ஷூட் செய்யவோ முடியாது என்பதால் தற்போது ஷூட்டிங் பணிகள் முடிந்து தயாராக இருக்கும் படங்களைப் பெரிய தொகைக்கு வாங்கும் சூழலுக்கு அவர்களும் ரெடி. ஆனால், ஒவ்வொரு படத்தயாரிப்பு நிறுவனமும் கேட்கும்தொகைதான் மலைப்பாக இருக்கிறது என்கின்றன OTT தளங்கள்.
இந்நிலையில் தனுஷின் 'ஜகமே தந்திரம்' படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் எல்லாமே முடிந்து ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இந்தப்படத்தை OTTயில் நேரடி ரிலீஸ் செய்ய சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை நடத்திவந்தது நெட்ஃபிளிக்ஸ். ஜகமே தந்திரம் 65 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் படம். லண்டனில்தான் படத்தின் படப்பிடிப்புகள் முக்கால்வாசி நடந்தன.
Also Read: அக்ஷய், அபிஷேக், அஜய் தேவ்கன்... OTT ரிலீஸில் களமிறங்கும் பாலிவுட் பாட்ஷாஸ்!
முதலில் 'ஜகமே தந்திரம்' தியேட்டருக்குதான் எனப்பேசப்பட்டு வந்த நிலையில் தயாரிப்பாளருக்குக் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போவதால் இப்போது OTT முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். ஏற்கெனவே விகடனுக்கு அளித்திருந்த பேட்டியில் 'ஜகமே தந்திரம்' படத்தின் ரிலீஸ் குறித்து ஜூலை முதல் வாரத்தில் முடிவெடுப்போம் என்று சொல்லியிருந்தார் அதன் தயாரிப்பாளர் சஷிகாந்த். இந்நிலையில்தான் தற்போது OTT ரிலீஸ் என முடிவெடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். படத்தை நெட்ஃபிளிக்ஸ் வாங்கயிருக்கிறது. இதற்கிடையே அக்டோபரில் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாகச் சிலர் நம்புவதால் ஜூலை இறுதிவரைப் பொறுத்திருந்து முடிவெடுக்கலாம் என்கிற பேச்சும் இருக்கிறது.
நேரடி OTT ரிலீஸ் வழக்கத்தைத் தொடங்கிவைத்த சூர்யாவின் 2டி நிறுவனம் அடுத்த ரிலீஸுக்குக் காத்திருக்கிறது. சூர்யா நடிப்பில் தயாராகியிருக்கும் 'சூரரைப் போற்று' படம் டிசம்பர் வரை தியேட்டர்கள் திறக்காது என்கிறபட்சத்தில் OTT-யில் ரிலீஸ் செய்யலாம் என்கிற பேச்சுகள் எழுந்திருக்கின்றன.
2டி தயாரிக்கும் படங்களுக்குத் தனிநபர்களிடம் ஃபைனான்ஸ் வாங்காமல் வங்கிகள் மூலம் மட்டுமே கடன் வாங்கும் வழக்கத்தை வைத்திருக்கிறார் சூர்யா. 'சூரரைப் போற்று' படத்துக்கு சூர்யாவின் சம்பளம் இல்லாமல் 40 கோடி ரூபாய் செலவாகியிருப்பதாகச் சொல்கிறார்கள். சூர்யாவின் சம்பளம் மற்றும் இதர விஷயங்களைச் சேர்த்தால் இந்தப்படத்தின் பட்ஜெட் 80 கோடி ரூபாயை நெருங்கும். அதனால் 100 கோடி ரூபாய்க்கு மேல் OTT தளங்கள் வாங்கினால் மட்டுமே தங்களுக்கு லாபம் என்பதில் உறுதியாக இருக்கிறது சூர்யாவின் 2டி நிறுவனம். மேலும் 'சூரரைப் போற்று' படம் 'ஏர் டெக்கான்' நிறுவனர் கோபிநாத்தின் பயோகிராபி என்பதால், இந்தப் படத்தை உடனடியாக ரிலீஸ் செய்யவேண்டிய எந்தக் கட்டாயமும் இல்லை. அதற்குள் ட்ரெண்ட் மாறிவிடும் என்றெல்லாம் யோசிக்கவேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார் சூர்யா. நேரடியாக வங்கிகளிடமிருந்து கடன்வாங்கியிருப்பதால் வங்கிகளிடம் நிலைமையச் சொல்லிச் சமாளிக்கலாம் என்பது சூர்யாவின் கருத்தாக இருக்கிறது.
'மாஸ்டர்' படம் பொங்கல் ரிலீஸுக்குப் பிளான் செய்யப்பட்டிருப்பதுபோல 'சூரரைப் போற்று' படத்தையும் பொங்கல் சமயத்தில் ரிலீஸ் செய்யலாம் என்பதுதான் சூர்யாவின் விருப்பமாம். ஆனால், ஜூலை -ஆகஸ்ட்டில் கொரோனாவின் தாக்கம் எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்தகட்டம் குறித்து முடிவெடுக்கப்படும் என்கிறார்கள்.
அதனால் தமிழின் முதல் பெரிய ஹீரோ படமாக 'ஜகமே தந்திரம்' ஆகஸ்ட்டில் ரிலீஸாகும் எனத் தெரிகிறது. OTT நிறுவனங்கள் பெரியளவில் பணத்தை உள்ளே இறக்கினால் அடுத்தடுத்து பெரிய படங்களும் OTTயில் ரிலீஸாகும். கேம் இப்போது OTT தளங்களின் கையில்!
source https://cinema.vikatan.com/tamil-cinema/dhanushs-jagamey-thanthiram-and-suriyas-soorarai-pottru-heading-for-a-ott-release
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக