கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இரான் நாட்டில் 745 இந்திய மீனவர்கள் தவித்து வந்தார்கள். இரானில் கொரோனா ஊரடங்கு காரணமாக மீன் பிடிக்கச் செல்லாமலும், அரபி முதலாளிகள் உதவாததாலும் தேவையான உணவு கிடைக்காமல் மீனவர்கள் படகிலேயே வசித்து வந்தனர். இரானில் தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் என்று பல்வேறு மீனவ அமைப்புகள் கோரிக்கை வைத்ததன் பலனாக மத்திய அரசு மீனவர்களை இந்தியா அழைத்துவர தனிக் கப்பலை இரானுக்கு அனுப்பியது.
இரானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலில் தமிழகம் செல்வதற்காக முன்பதிவு செய்த அனைத்து மீனவர்களின் விசாக்களையும் கேன்சல் செய்து, பாஸ்போர்ட்டில் எக்ஸிஸ்ட் அடித்து அவரவர்களது அரேபிய முதலாளியிடம் இருந்து கிளியரன்ஸ் பெற்று 24.6.2020 அன்று பந்தர் அப்பாஸ் கப்பல் துறைமுகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
சுமார் 50 மீனவர்களைத் தவிர மற்ற அனைத்து மீனவர்களும் தூதரக அதிகாரிகளின் அறிவுறுத்தலின்பேரில் தங்கள் விசாவை கேன்சல் செய்துவிட்டு பாஸ்போர்ட்டுக்கு எக்ஸிட் செய்துவிட்டு பந்தர் அப்பாஸ் கப்பல் துறைமுகத்திற்குச் சென்றுள்ளனர். அந்தக் கப்பலில் பயணிக்க தயாராக வந்த 43 தமிழக மீனவர்கள் மற்றும் 20 கேரள மீனவர்கள் உட்பட 63 மீனவர்களைக் கப்பலில் அனுமதிக்கவில்லை. கப்பலில் போதிய இடவசதி இல்லை என்று இந்திய தூதரக அதிகாரிகள் 63 மீனவர்களின் கப்பல் பயணத்திற்கு மறுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
எப்படியும் அவர்களைக் கப்பலில் பயணிக்க அனுமதிப்பார்கள் என நினைத்து துறைமுகத்திலேயே மூன்று நாள்கள் இருந்துள்ளனர். இந்தநிலையில் இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவர்கள் திரும்பி தங்கள் இருப்பிடம் சென்றுள்ளனர். மேலும், தூதரக அதிகாரிகள் இரான் முதலாளிகளிடம் பேசி இந்திய மீனவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொடுத்தனர். இந்த நிலையில் கப்பலில் மேலும் 90 பெட்டுகள் காலியாக இருந்தன. அப்படியிருந்தும் 63 மீனவர்களை அழைத்துவரவில்லை என இரானில் இருந்து கப்பலில் குமரி மாவட்டம் வந்த மீனவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மீனவர் ஷிபு கூறுகையில், "நாங்கள் நேற்று தூத்துக்குடி துறைமுகம் வந்து அங்கிருந்து குமரி மாவட்டம் வந்தோம். நாங்கள் பயணித்த கப்பலில் 687 பயணிகள் இருந்தோம். அதில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 535 மீனவர்கள் இருந்தோம். இதில் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் தவிர கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் அல்லாத சில குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். நாங்கள் பயணித்த கப்பலில் மேலும் சுமார் 90 பெட்டுகள் காலியாகத்தான் கிடந்தன. ஆனால், ஏன் 63 மீனவர்களைக் கப்பலில் பயணிக்க அனுமதிக்கவில்லை எனத் தெரியவில்லை" என்றார்.
ஊர் திரும்ப முடியாமல் இரானில் இருக்கும் மீனவர் செல்வராஜிடம் பேசினோம், "கப்பலில் 700 பேர்தான் பயணிக்க முடியும் என்றார்கள். நாங்கள் 63 மீனவர்களும் ஒரே இடத்தில் வசித்தவர்கள். எங்களில் 30 பேரை அழைத்துச் செல்வதாகக் கூறினார்கள். அப்படியானால் மீதமுள்ள 33 மீனவர்களுக்கும் இந்திய தூதரகம் பொறுப்பு ஏற்றால் 30 பேர் கப்பலில் பயணிக்கலாம் என்றோம். இந்திய தூதரகம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே, நாங்கள் துறைமுகத்தில் காத்திருந்துவிட்டு திரும்பி வந்துவிட்டோம். எங்களுக்கு விசா இல்லாததால் இப்போது இரானில் நாங்கள் தங்கியிருப்பது சட்டத்துக்கு புறம்பானது. எனவே, இந்திய தூதரகமும் அரசும் விரைந்து எங்களை மீட்க வேண்டும்" என்றார்.
இந்த நிலையில் இரானில் இருந்து மீனவர்களை அழைத்து வந்த கப்பலில் பயணித்தவர்களின் விபரங்களை வழங்க வேண்டும் எனத் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பின் பொதுச் செயலாளர் சர்ச்சில் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து சர்ச்சில் கூறுகையில், "இரானில் 63 மீனவர்களை விட்டுவிட்டு மீனவர் அல்லாதவர்களைக் கப்பலில் அழைத்து வந்துள்ளார்கள். எனவே, கப்பலில் பயணித்தவர்களின் முழு விபரங்களை மீன்வளத்துறையிடம் கேட்டுள்ளோம். இடம் இருந்தும் மீனவர்களை அழைத்து வராதது ஏன் என்றும் அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம்" என்றார்.
Also Read: `7 நாள்களுக்கான உணவுப் பொருள்கள் கிடைத்திருக்கிறது!’- இரானில் தவிக்கும் 721 இந்திய மீனவர்கள்
source https://www.vikatan.com/government-and-politics/controversy/kanniyakumari-fishermen-speaks-about-iran-issues
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக