ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்த் தொற்றின் பிடியில் பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகரும் சிக்கியிருப்பது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில் இருந்து வந்த கொரோனா நோய்த் தொற்று கடந்த மாதத்தின் இறுதியில் நாள்தோறும் மூன்றிலக்க எண்ணிக்கையில் அதிகரித்து வந்துள்ளது. ஆரம்பகட்ட நாள்களில் நோய்ப் பரவுதலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர் மற்றும் காவல்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், தீவிர கவனம் செலுத்திவந்தனர். இதனால் நோய்த் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்துவந்தது. நாளாக நாளாக நோய்த் தடுப்புப் பணிகளின் வேகம் குறைந்ததால், நோய்ப் பரவலின் வேகம் அதிகரித்தது.
மாவட்டத்தில், நேற்று ஒரே நாளில் 111 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினரான அ.தி.மு.க-வைச் சேர்ந்த சதன் பிரபாகரும் ஒருவர். கொரோனா ஊரடங்கின்போது, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பரமக்குடி தொகுதிக்குட்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதில் எம்.எல்.ஏ சதன்பிரபாகர் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.
Also Read: தஞ்சாவூர்: பெண் ஊழியருக்கு கொரோனா; அதிகாரிகள் அலட்சியத்தால் பதறும் அறநிலையத்துறை
மாவட்டத்தில் உள்ள மற்ற சட்டமன்ற உறுப்பினர்களான, முதுகுளத்தூர் பாண்டி, திருவாடானை கருணாஸ் ஆகியோர் தொகுதி பக்கம் எட்டிப் பார்க்காத நிலையில், மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமியுடன் இணைந்து பரமக்குடி தொகுதியின் கடைக்கோடி பகுதிகள் வரை நிவாரண உதவிகளை வழங்கிவந்தார். இதனிடையே, கொரோனாவின் தாக்கம் அதிகரித்ததால் அவ்வப்போது தாமாகவே முன்வந்து கொரோனோ நோய்த் தொற்று பரிசோதனைக்கு தன்னை ஆட்படுத்திவந்தார். 3 முறை செய்யப்பட்ட பரிசோதனையிலும் அவருக்கு நோய்த் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு வெளியானது.
இந்நிலையில் கடந்த 4 நாள்களுக்கு முன், சதன் பிரபாகருடன் இருந்துவந்த ஆதரவாளர் ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து, சதன் பிரபாகருக்கு 4-வது முறையாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, ராமநாதபுரம் மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டில் எம்.எல்.ஏ சதன் பிரபாகர் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சதன் பிரபாகரனின் மகன் மற்றும் உதவியாளர் ஒருவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்கள் இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்குநாள் கொரோனா தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், தற்போது ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வும் நோய்த் தொற்றில் சிக்கியிருப்பது மாவட்ட மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/healthy/paramakudi-admk-mla-tested-corona-positive
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக