சாத்தான்குளம் காவல் நிலையத்தில் கொடூரமாகத் தாக்குதலுக்கு உள்ளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
சிபிசிஐடி போலீஸ் ஐஜி-யான சங்கர் தலைமையில், நேற்று (ஜூலை 1-ம் தேதி) முதல் விசாரணை நடந்து வருகிறது. 12 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில், தனித்தனி குழுக்களாக விசாரணை நடக்கிறது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடந்துவருகிறது.
Also Read: சாத்தான்குளம்: `வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் போலீஸ் ஸ்டேஷன்!’ - இனி என்ன நடக்கும்?
ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு தொடர்பாக நீதிமன்ற கணகாணிப்பின் கீழ் விசாரணை நடந்துவரும் நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் நேற்று இரவு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
தன்மீது சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்யக்கூடும் என ஏற்கெனவே ஸ்ரீதருக்கு அச்சம் இருந்துள்ளது. அதனால் தனக்கு நெருக்கமான ஆளும்கட்சி முக்கியப் பிரமுகரின் உதவியை நாடியிருக்கிறார். அவரது ஆசியுடன் வழக்கிலிருந்து விடுபட்டுவிடலாம் என நினைத்திருந்தார். ஆனால், உயர் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை நடப்பதால், சிபிசிஐடி போலீஸார் அவரையும் வழக்கில் சேர்த்துவிட்டார்கள்.
வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஸ்ரீதர், அந்தப் பிரமுகரின் உதவியுடன் நெல்லையில் உள்ள ஆளுங்கட்சிப் பிரமுகரின் பாதுகாப்பில் இருந்திருக்கிறார். ஆனால், சிபிசிஐடி பிரிவு போலீஸார் நெருங்குவதை உணர்ந்ததும், சொந்த மாவட்டமான தேனிக்குச் சென்று சட்டப் பாதுகாப்பு தேடிக்கொள்ள முடிவெடுத்துள்ளார்.
அதன் காரணமாக, தேனி மாவட்டத்துக்குச் சென்ற அவரது காரை கங்கைகொண்டான் செக்-போஸ்ட்டில் இருந்தவர்கள் மறித்துள்ளனர். இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லையைக் கடக்க அனுமதிக்க முடியாது என போலீஸார் தெரிவித்ததற்கு, தன்னுடைய இன்ஸ்பெக்டர் ஐடி கார்டைக் காட்டி, அவசரமாகச் செல்ல வேண்டுமெனக் கூறி தப்பிச் சென்றிருக்கிறார்.
இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் இருப்பிடம் பற்றி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸாருக்கு, அவர் சில நிமிடங்களுக்கு முன்பு காரில் கிளம்பிச் சென்ற தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் சோதனைச் சாவடிகளை அலர்ட் செய்த நிலையில், அவர் கங்கைகொண்டான் சோதனைச் சாவடியைக் கடந்து சென்றுகொண்டிருக்கும் தகவல் வந்திருக்கிறது.
Also Read: `சாத்தான்குளம் வழக்கும், தமிழக அரசின் தந்திரங்களும்..!' - விளக்கும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி
அதனால் அவரை விரட்டிச்சென்று, கோவில்பட்டி அருகே மடக்கிப் பிடித்திருக்கிறார்கள். தன்னை அமைச்சருக்கு நெருக்கமானவர் எனச் சொன்னபோதிலும், சிபிசிஐடி போலீஸார் அவரைக் கைது செய்வதாகத் தெரிவித்து, தங்கள் வாகனத்தில் ஏற்றி தூத்துக்குடிக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.
source https://www.vikatan.com/news/general-news/inspector-sridhar-was-chased-by-cbcid-police-and-arrested
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக