Ad

வெள்ளி, 3 ஜூலை, 2020

கரூர்: `இனி, சிறப்பா விவசாயம் செய்வேன்!' -உதவியால் நெகிழ்ந்த பெண் இயற்கை விவசாயி

'விகடன் செய்தியால் எனக்கு மோட்டார் பொருத்திய தானியங்கி வீடர் கிடைத்திருக்கிறது. இனி, நான் எளிதாக இயற்கை விவசாயத்தை மேற்கொள்வேன்' என்று மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார், குளித்தலை பகுதியைச் சேர்ந்த பெண் இயற்கை விவசாயி, அன்னலட்சுமி.

அன்னலட்சுமிக்கு தானியங்கி வீடர் உதவி

கரூர் மாவட்டம், தோகமலை ஒன்றியத்தில் உள்ள முதலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், அன்னலட்சுமி. பூ மற்றும் நெல் விவசாயத்தை மேற்கொண்டுவருகிறார். இந்த நிலையில், சகாயம் ஐஏஎஸ்-ஐ தலைமையாகக் கொண்ட மக்கள் பாதை அமைப்பினர், தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை செழிப்படைய வைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அதற்கு, 'கலப்பைத் திட்டம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

'மருந்தில்லா விவசாயம்' திட்டம்

அதாவது, முதல்கட்டமாக தமிழகம் முழுக்க மாவட்டத்துக்கு ஒரு விவசாயியை, 'மருந்தில்லா விவசாயம்' என்ற பெயரில் இயற்கை விவசாயியாக மாற்றுவது என்ற உன்னத முயற்சியில், தங்களது வலதுகாலை எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், தமிழகத்திலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் இந்த முயற்சியைத் தொடங்கினார்கள்.

Also Read: 'மாவட்டத்துக்கு ஒரு விவசாயி; மருந்தில்லா விவசாயம்!' -சகாயம் ஐஏஎஸ் முன்னெடுக்கும் 'கலப்பைத் திட்டம்'

அப்படித்தான், முதலைப்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமியை இயற்கை விவசாயியாக மாற்றினார்கள். அவரின் ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில், 20 கிலோ பூங்கார் என்ற நமது பாரம்பர்ய நெல் ரகத்தைக் கொடுத்து, நடவுசெய்ய வைத்திருக்கிறார்கள். இந்த முயற்சியை, விகடன் இணையதளத்தில் கடந்த மே மாதம் 19 - ம் தேதி, 'மாவட்டத்துக்கு ஒரு விவசாயி; மருந்தில்லா விவசாயம்!' - சகாயம் ஐஏஎஸ் முன்னெடுக்கும் 'கலப்பைத் திட்டம்' என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டோம்.

பூங்கார் நெல் சாகுபடி

அந்தக் கட்டுரை வாசகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அந்தக் கட்டுரையைப் படித்த சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்து நாட்டில் உள்ள பலரும் உதவ, ரூ. 25,200 ரூபாய் மதிப்பீட்டில் மோட்டாருடன்கூடிய களை வெட்டும் தானியங்கி வீடர் வாங்கி, அன்னலட்சுமியின் கைகளில் ஒப்படைத்திருக்கிறார்கள்.

இதுகுறித்து, இயற்கை விவசாயியாக அவதாரம் எடுத்திருக்கும் அன்னலட்சிமியிடம் பேசினோம்.

"நான், செயற்கை விவசாயம்தான் இதுநாள்வரை செஞ்சுக்கிட்டு இருந்தேன். என்னை மக்கள் பாதை இயக்கத்தினர், இயற்கை விவசாயியாக மாற்றினர். மக்கள் பாதை நீதி திட்ட மாநில பொறுப்பாளர் தங்கவேல், திருச்சி மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் எனக்கு அதுசம்பந்தமான அத்தனை ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

என் வயலில் பூங்கார் நெல் ரகம் பயிடப்பட்டது. இந்த நிலையில்தான், விகடன் செய்தி மூலமா எனக்கு உதவி கிடைத்து, தானியங்கி வீடர் கிடைத்திருக்கிறது. உற்பத்தியை இரட்டிப்பாக்கும் திருந்திய நெல் சாகுபடி முறையில், சாகுபடி செய்யும் நெல் வயலில் களைகளை அகற்றி, ஒரு நெல் நாற்றின் வேரை 40 முதல் 50 கிளைகள் வரை கிளைத்து வளர உறுதிசெய்ய இந்த மோட்டார் பொருத்திய தானியங்கி வீடர் பயன்படும்.

அன்னலட்சுமி

இதனால், என்னோட விவசாய வேலைகளின் பளு குறையும். அதோட, இதனால் என்னோட இயற்கை விவசாய ஆர்வம் இரட்டிப்பாகியிருக்கிறது. இனி, தொடர்ந்து இயற்கை விவசாயத்தையே செய்வேன். 'நஞ்சில்லாத உணவு; நலமான வாழ்வு' என்று இனி என் குடும்பத்தினர் நலனையும் நலமாக்குவேன். இந்த மாற்றத்தை எனக்குள் ஏற்படுத்திய மக்கள் பாதை இயக்கத்துக்கு நன்றி. எனக்கு உதவிகள் கிடைக்கவைத்து, எனக்கு இன்னும் ஊக்கம் கிடைக்கக் காரணமாக இருந்த விகடனுக்கும் நன்றி" என்றார் மகிழ்ச்சியாக!



source https://www.vikatan.com/news/agriculture/karur-women-farmer-organic-farming

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக