Ad

திங்கள், 20 ஜூலை, 2020

நீலகிரி: `இலக்கு 7,000 சோலை மரக்கன்றுகள்!' - வனங்களை மீட்டெடுக்கும் தோடர்கள்

நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து கூடலூர் செல்லும் சாலையில் சில கிலோமீட்டர்கள் பயணித்தால் அழகிய புல்வெளிகள் நிறைந்த பசுமைப் பரப்பாக காணப்படுகிறது ஷூட்டிங் மட்டம். எப்போதுமே இந்தப் பகுதியில் சினிமா படப்பிடிப்பு நடைபெற்று வந்த காரணத்தால் இந்தப் பெயர் பெற்றது.

ஷூட்டிங் மட்டம்

பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்கு உரிய இந்தப் பகுதியில் `பகல்கோடு மந்து சூழல் மேம்பாட்டுக் குழு' என்ற பெயரில் வனத்துறை ஒத்துழைப்புடன் தோடர் பழங்குடியினர் சூழல் சுற்றுலாவை நிர்வகித்து வந்தனர்.

கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட ஆக்கபூர்வ நடவடிக்கையாக ஷூட்டிங் மட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆக்கிரமித்திருந்த செஸ்ட்ரம் உள்ளிட்ட அந்நிய களைத் தாவரங்களை அகற்றினர்.

செஸ்ட்ரம்

நீலகிரியைப் பூர்வீகமாக கொண்ட சோலை மரக்கன்றுகளையும் புல்வெளிகளையும் மீட்டெடுக்கும் முயற்சியில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்தும் வருகின்றனர்.

Also Read: `அவலாஞ்சியில் பெய்த மழை, ஊட்டியில் பெய்திருந்தால்!'- சோலை மரங்களின் அழிவால் அச்சப்படும் ஆய்வாளர்கள்

தற்போது சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் பகுதியின் சூழலியலை மீட்டெடுப்பதற்காகக் களமிறங்கியுள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சூழல் மேம்பாட்டுக் குழுவினர், ``இங்கு பெரும் பிரச்னையாக இருப்பது செஸ்ட்ரம் எனும் அந்நிய களைத் தாவரத்தின் பரவல். எனவே, இதனை அகற்றி வருகிறோம். அகற்றிய இடங்களில் மரக்கன்றுகளை நட முடிவு செய்து நீலகிரிக்கே உரித்தான பூர்வீக மர வகைகளான விக்கி, நாவல் உள்ளிட்ட மரக்கன்றுகளை உருவாக்கி வருகிறோம். இதற்காகப் புதிதாக நாற்றங்கால் ஒன்றை உருவாக்கி உள்ளோம்.

நாற்றங்கால்

எங்கள் இலக்கு 7,000 சோலை மரங்கள். 3,000 நாற்றுகளை உற்பத்தி செய்துள்ளோம். மேலும், புல்வெளிகளை மீட்கும் வகையில் புற்களையும் கொண்டுவந்து நடவு செய்கிறோம். இதன் மூலம் எங்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கிறது. சூழலியலும் மேம்படுகிறது" என்றார்.

சுற்றுலா தடைபட்டாலும், தடைபடாமல் சூழலை மீட்டெடுக்கக் களமிறங்கியுள்ள இந்தப் பழங்குடிகளுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.



source https://www.vikatan.com/news/environment/toda-tribes-making-tree-saplings-near-ooty

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக