Ad

வெள்ளி, 17 ஜூலை, 2020

சென்னை: அறைக்கு வெளியே கிடந்த 6 வேளை உணவு; மர்ம மரணம்! - அதிர்ச்சி கொடுத்த 5 நட்சத்திர ஹோட்டல்

கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்திருக்கும் நிதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேல். இவருக்கு சந்திரா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் ஒரு குழந்தையும் இருக்கிறார்கள். சிங்கப்பூரில் வேலை செய்துவந்த இவர் கொரோனா தொற்று தீவிரமடைந்ததையடுத்து நாடு திரும்புவதற்கு முடிவெடுத்தார். அதன்படி சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து மனைவிக்கு போன் செய்த சுந்தரவேல், தான் ஊருக்கு வருவதாக சந்தோஷமாக தெரிவித்திருக்கிறார். மேலும், சென்னையில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்ததுடன் சென்னையில் இறங்கியதும் போன் செய்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

உயிரிழந்த சுந்தரவேல்

அதன்படி கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி விமானம் மூலம் இந்தியா திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இறங்கிய அவர் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அண்ணா சாலையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். இதுகுறித்து எந்த விபரமும் சந்திராவுக்கு தெரியவில்லை. சிங்கப்பூரில் விமான நிலையத்தில் இருந்து பேசிய கணவர் சென்னை திரும்பி பேசவில்லையே என்று கலக்கமடைந்தார் இந்திரா. அன்று இரவே ’கொரோனா பரிசோதனை முடித்துவிட்டு சுந்தரவேல் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து சந்திராவுக்கு எஸ்.எம்.எஸ் வந்ததும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கிறார்.

தனியார் ஹோட்டல் நிர்வாகத்தின் அலட்சியம்:

தன் கணவரின் மர்மமான மரணம் குறித்து அவர் பேசி வெளியிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் வீடியோவில், ``கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி நிதிநத்தம் கிராமத்துல இருந்து பேசறேன். என் வீட்டுக்காரரு 25-ம் தேதி சிங்கப்பூர்ல இருந்து சில்க் ஏர்ல வந்தாரு. அதுக்கு முன்னாடி ‘போர்டிங் போட்டுட்டேன். சென்னை ஏர்போர்ட் வந்துட்டு உனக்கு போன் பண்றேன்னு மெசேஜ் போட்டாரு. அன்னைக்கு ஃபுல்லா எனக்கு அவரு கால் பண்ணல. அன்னைக்கு நைட்டே என் வீட்டுக்காருக்கு கொரானா டெஸ்ட் எடுத்துட்டு தங்க வச்சிருக்கறதா ஹோட்டல் ஹையாத்ல இருந்து எனக்கு எஸ்.எம்.எஸ் வந்துச்சு.

தாயுடன் சந்திரா

பரவால்ல நம்ம வீட்டுக்காரரு பாதுகாப்பா இருக்காருனு எனக்கு நிம்மதியா இருந்துச்சு. அதுக்கப்புறமும் அவருகிட்ட இருந்து போன் வராததால எனக்கு பயமாயிடுச்சு. நெட்ல நம்பர் எடுத்து என் அண்ணன் ஹோட்டலுக்கு போன் பண்ணி கேட்டாரு. அதுக்கு, நேத்துலருந்து அவரை நாங்க தேடிக்கிட்டு இருக்கோம். ஒன்றரை நாளா அவரைக் காணோம்னு சொன்னாங்க. உங்க ஹோட்டல்ல தங்கி இருந்தவரை காணோம்னு இவ்ளோ அசால்டா சொல்றீங்களேனு அண்ணன் கேட்டதுக்கு, 5 நிமிசத்துல மேனேஜர் பேசுவார்னு சொல்லி போனை வச்சிட்டாங்க.

மறுபடியும் நான் போன் செய்து, காண்டாக்ட் நம்பர்னு அவர் என் நம்பர்தானே கொடுத்திருக்காரு. அவரை காணோம்னு எங்ககிட்டதானே நீங்க சொல்லணும். அவரு வெளிய போயிட்டு கொரோனா பரவுச்சினா என்ன பண்றது. நான் போலீஸ் ஸ்டேஷன் போறேன்னு சொன்னேன். அதுக்கும் 5 நிமிஷத்துல மேனேஜர் பேசுவார்னு போனை கட் பண்ணிட்டாங்க.

`என் புருஷன் வருவாருனு ஆசையா இருந்தேனே...’

அடுத்த 5 நிமிஷத்துல ஹோட்டல்காரங்க என் அண்ணன் நம்பருக்கு போன் பண்ணி, `சுந்தரவேல் இறந்துட்டாரு. வயிரு வலின்னு சொன்னாரு. ரெண்டு நாளா அவரு சாப்பாடு எடுக்கல. கதவ திறந்து பாத்தா சேர்ல உக்காந்துகிட்டே அவரு இறந்துட்டாரு’னு சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டாங்க. அடுத்த 10 நிமிஷத்துல தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து என் அண்ணனுக்கே மறுபடியும் போன் பண்ணி, செத்துட்டாருனு சொல்லிருக்காங்க. இது எந்த விதத்துல நியாயம்? கொரோனா டெஸ்ட் எடுத்துட்டு தனிமைப்படுத்துனா அவங்களுக்கு யாரு பாதுகாப்பு கொடுக்கணும்? கவருமெண்டும், அந்த ஹோட்டலும்தானே பாதுகாப்பு கொடுக்கணும்.

உடம்பு சரியில்லைன்னு சொன்னவரை ஏன் கவனிக்காம இருந்தாங்க? ஒன்றரை வயசுப் புள்ளையை வச்சிக்கிட்டு நான் தனியா நிக்கிறேனே.. என் புருஷன் சிங்கப்பூர்ல இருந்து வருவாருனு ஆசையா இருந்தேனே... இப்போ அவரு பொணத்தை தூக்க வச்சிட்டாங்களே... கொரோனா டெஸ்ட் எடுக்கறேன்னு சொல்லிட்டு என் புருஷனை கூட்டிட்டுப் போயி கொன்னுப்புட்டாங்களே... எனக்கு நியாயம் கிடைக்கணும். எனக்கு அப்பா, அண்ணன், தம்பி யாரும் இல்லை. இப்போ புருஷனும் இல்ல.

ஹோட்டல் ஹையாத்

சிங்கப்பூர்ல கொரோனா இல்லைனு டெஸ்ட் பண்ணிட்டுதான் ஃப்ளைட்ல ஏத்தியிருக்காங்க. இப்போ ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாருனு பாடியை வாங்கிக்கங்கன்னு சொல்றாங்க” என்று கதறுகிறார். சுந்தரவேலின் உடல் இறுதிச் சடங்கு முடிந்தபின் இன்னொரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் சுந்தரவேலுவின் படத்துக்கு படையல் போடப்பட்டிருக்கிறது. அதில் பேசும் இந்திரா, “ஏற்கெனவே நான் ஒரு வீடியோ போட்டிருந்தேன். ஊருல இருந்து நல்லா வந்தவருக்கு இன்னைக்கு படையல் போட வச்சிட்டாங்க. ஒரு வயசுக் குழந்தையை வெச்சிருக்கற என் தாலியை அறுத்துட்டாங்க.

`என் புருஷன் சாவுக்கு தமிழக அரசு பதில் சொல்ல வேண்டும்’

இதுக்கு முழுக்க முழுக்கக் காரணம் தமிழக அரசும், ஹோட்டல் ஹையாத் நிர்வாகத்தின் அலட்சியமும்தான். என் புருஷன் சாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி ஐயாவும், ஹோட்டல் ஹையாத் நிர்வாகமும் கண்டிப்பா பதில் சொல்லியே ஆகணும். என் வீடியோவை பாத்துட்டு யார் யாரோ எங்கிருந்தெல்லாம் போன் செய்து, அழுவாதீங்கம்மா.. உன் வீட்டுக்காரு நல்லா இருப்பாருனுலாம் சொன்னாங்க.

ஊரடங்கு போட்டதும் 3 மாசம் ஃப்ரீயா இன்டர்நெட், சாப்பாடு, மருத்துவம் பார்த்து சிங்கப்பூருல இருந்து நல்லபடியா அனுப்பி வச்சவரை, இந்தியா வந்ததும் 4 நாள்ல கொன்னுருக்கீங்க. என்ன சார் உங்க ஆட்சி நடக்குது? இதுதான் ஏழைங்களுக்கு நீங்க நடத்துற ஆட்சியா? இதுதான் நீங்க நியாயமா நடத்துற ஆட்சியா ? வெளிநாட்டுல இருந்து திரும்பறவங்களை தனிமைப்படுத்தி எந்த அளவுக்கு நீங்க பாதுகாப்பு கொடுக்கறீங்க ?

சுந்தரவேல் தன் குழந்தையுடன்

ஹோட்டல்ல தங்க வச்சீங்க இல்ல. அவங்க குடும்பத்துல ஒருத்தங்களுக்கு தெரியப்படுத்துனீங்களா ? செத்துப்போயி நாலு நாள் என் வீட்டுக்காரு உடம்பு பாத்ரூம்ல கெடந்திருக்கு. ஒரு பொண்டாட்டியா என் புருஷன் முகத்தை என்னால பார்க்க முடியல. எனக்கும் என் புள்ளைக்கும் நடந்த கொடுமை இனி யாருக்கும் நடக்கக் கூடாது. பணக்காரர்களுக்கு மட்டும்தான் இந்த ஆட்சி நடக்கிறது. ஏழைகளுக்கானது இல்லை” என்று குமுறுகிறார்.

அடுக்கடுக்காக எழும் கேள்விகள்:

“5 நட்சத்திர ஹோட்டல் என்று கூறிக்கொள்ளும் நிர்வாகம், சுந்தரவேல் தங்கியிருந்த அறைக்கு வெளியிலேயே உணவுகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறது. சுந்தரவேலு இறந்த பிறகு இரண்டு நாள்களாக வைக்கப்பட்ட 6 வேளை உணவுகள் அப்படியே இருக்கின்றன. உடல் நிலை சரியில்லை என்று சொன்ன சுந்தரவேலுக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறும் ஹோட்டல் நிர்வாகம், அவர் இரண்டு வேளை உணவு எடுக்கவில்லை என்றபோதுகூட, அதுகுறித்து ஆய்வு செய்யாமல் அடுத்தடுத்த வேளை உணவுகளை வீசிச் சென்றிருக்கிறது.

Also Read: `போராடினோம்... செல்வாக்கால் தடுத்துவிட்டனர்' - உன்னாவ் இளம்பெண் மரணத்தில் கதறும் தந்தை!

அறைக்குள் இருந்து வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் ஹோட்டலில், அவர் தப்பிச் சென்றுவிட்டதாகச் சொன்னது ஏன்? சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லையா? சுந்தரவேலுவின் மனைவி சந்திரா போன் செய்யும் வரை, அவருக்கு உடல் நிலை சரி இல்லாததையும், அவர் உயிரிழந்தது குறித்தும் மனைவிக்கு தெரிவிக்காதது ஏன்?” என்று அடுக்கடுக்காக எழும் கேள்விகளுக்கு தமிழக அரசும், ஹோட்டல் நிர்வாகமும்தான் பதிலளிக்க வேண்டும்.

இதுகுறித்து விளக்கம் கேட்பதற்காக ஹோட்டல் ஹையாத்தை தொடர்பு கொண்டபோது இணை மேலாளர் என்று கூறிய விஜய் என்பவர், “ஏற்கெனவே இந்தப் பிரச்னை எழுந்தபோது எங்களது பாதுகாப்புப் பிரிவு மேலாளர் ஏழுமலை என்பவர்தான் கையாண்டார். உங்களின் பெயரும், போன் எண்ணையும் கொடுங்கள். உடனே அவரை உங்களிடம் பேசச் சொல்கிறேன்” என்று கூறினார். ஆனால் அதன்பிறகு அவர்களிடம் இருந்து எந்த போனும் நமக்கு வரவில்லை.



source https://www.vikatan.com/news/controversy/cuddalore-man-suspected-death-in-chennai-star-hotel

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக