வீட்டு வாடகை
கொரோனா ஊரடங்கு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானமின்றி பொது மக்கள் தவித்து வருகின்றனர். வேலையை இழந்த பலர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர். இந்தச் சூழலில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் வீட்டின் உரிமையாளர்கள் வாடகைப் பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்தச் சமயத்தில் வாடகை பணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் சென்னையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். சென்னை குன்றத்தூர், பண்டார தெருவில் குடியிருந்தவர் குணசேகரன் (50). இவர் வங்கியில் வேலைபார்த்து ஓய்வு பெற்றவர். தன்னுடைய வீட்டில் மாடி பகுதியை அஜித் என்பவருக்கு மாதம் 4,000 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டிருந்தார். அதில் அஜித் குடும்பத்துடன் குடியிருந்தார். ஊரடங்கு காரணமாக அஜித், வேலைக்குச் செல்லவில்லை. அதனால் 4 மாதங்களாக வாடகையையும் கொடுக்கவில்லை.
இந்தநிலையில் குணசேகரன், நேற்று காலை அஜித் குடும்பத்தினரிடம் வாடகை பணம் கேட்டுள்ளார். அதனால் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அஜித் வீட்டில் இல்லை. இதையடுத்து இன்று அதிகாலையில் வீடு திரும்பிய அஜித்திடம், குணசேகரன் வாடகை பணம் கேட்டு தகராறு செய்த தகவலை குடும்பத்தினர் கூறியுள்ளனர். ஏற்கெனவே வேலையை இழந்த அஜித், அரசே வாடகையை வசூலிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. அதையும் மீறி எப்படி நீங்கள் வாடகை பணத்தை நான் இல்லாத நேரத்தில் கேட்கலாம் எனக் குணசேகரனிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். உடனே வாடகை கொடுக்க வழியில்லை என்றால் வீட்டை காலிபண்ணு என்று குணசேகரன் கூறியுள்ளார்.
அதனால் அஜித்துக்கும் குணசேகரனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அஜித், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குணசேகரனைக் குத்தியுள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த குணசேகரன், அங்கிருந்து தப்பி தெருவில் ஓடியுள்ளார். ஆனால், அவரை விரட்டிச் சென்ற அஜித், குணசேகரனை சரமாரியாகக் குத்தினார். அதனால் தெரு முழுவதும் ரத்தம் கொட்டியது. குணசேகரனின் அலறல் சத்தம் கேட்டு அந்தத் தெருவில் உள்ளவர்கள் வெளியில் வந்தனர். அதைப்பார்த்த அஜித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த குணசேகரனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் குணசேகரன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர். இதுகுறித்து குன்றத்தூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிந்ததும் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து குணசேகரனின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் கூறுகையில், ``குணசேகரனின் குடும்பம் திருவல்லிக்கேணியில் உள்ளது. வங்கியில் வேலைபார்த்த இவர், விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் குன்றத்தூர் பண்டார தெருவில் சொந்தமாக வீடு கட்டினார். அந்த வீட்டில் குணசேகரன் கீழ்த்தளத்தில் தனியாகக் குடியிருந்து வந்தார். குணசேகரனின் வீட்டின் மாடியில் அஜித் என்ற இளைஞர், அவருடன் தாய் மஞ்சுளா, சகோதரிகளுடன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகக் குடியிருந்து வருகிறார்.
ஊரடங்கு காரணமாக 4 மாதங்களாக வாடகையை அஜித் கொடுக்கவில்லை. அதனால் குணசேகரனுக்கும் அஜித் குடும்பத்தினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இன்று அதிகாலை 1.30 மணியளவில் குணசேகரனின் வீட்டுக்குச் சென்ற அஜித், எப்படி என் அம்மாவிடம் நீ வாடகை கேட்கலாம் எனத் தகராறு செய்துள்ளார். அப்போது அஜித் மதுபோதையில் இருந்துள்ளார்.
Also Read: `30 கி.மீ சைக்கிள் பயணம்; 200 கேமராக்கள் ஆய்வு' - மனைவி, மகன் கொலை வழக்கில் சிக்கிய சென்னை ஊழியர்
பின்னர் கத்தியால் குணசேகரனின் கழுத்தை அறுத்துள்ளார். தலையில் இடது பக்கத்திலும் குத்தியுள்ளார். அஜித்திடமிருந்து தப்பிச் சென்ற குணசேகரன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தெருவில் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டபடியே ஓடியுள்ளார். தூங்கிக்கொண்டிருந்த பொதுமக்கள் வெளியில் வந்ததும் அஜித் அங்கிருந்து தப்பி ஓடி வில்லிவாக்கம் முருகன் கோயில் ரோடு வழியாகச் சென்றார். அப்போது இரவு பணியிலிருந்த வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டினிடம் அஜித் சிக்கினார். இதையடுத்து குன்றத்தூர் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார். அஜித், டிரைவராக வேலைபார்த்து வருகிறார். அஜித் மீது சங்கர் நகர் காவல் நிலையத்தில் ஏற்கெனவே வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றனர்.
இந்தக் கொலை சம்பவம் குன்றத்தூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/chennai-house-owner-murdered-in-kunnathur
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக