Ad

வியாழன், 9 ஜூலை, 2020

உ.பி போலீஸார் கொலை ; `கடைக்காரரின் தகவல்; போலி ஐடி கார்டு!’ - ரவுடி விகாஸ் தூபே கைது

உத்தப்பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான ரவுடியாக இருந்து வந்தவர் விகாஸ் தூபே. இவர் மீது கொலை, கொள்ளை, மிரட்டல் என 60-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. இவர் அடிக்கடி போலீஸாரால் கைது செய்யப்படுவதும் பின்னர் விடுவிக்கப்படுவதுமாகவே இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், சமீபத்தில் தூபே மீது பதிவான ஒரு கொலை முயற்சி வழக்குத் தொடர்பாக அவரை கைது செய்வதற்காக ஒரு தனிப்படை போலீஸார், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு தூபே பதுங்கிருந்த கான்பூரின் பிக்ரூ கிராமத்துக்குச் சென்றுள்ளனர்.

ரவுடி விகாஸ் தூபே கைது

போலீஸார் தன்னைக் கைது செய்வதை முன்னரே அறிந்த விகாஸ் துபே, கிராமம் முழுவதும் தடுப்புகளை அமைத்துள்ளார். அதையும் மீறி கிராமத்துக்குள் சென்ற காவலர்களை, போலீஸாரிடம் இருந்து திருடிய துப்பாக்கிகளாலேயே சரமாரியாகச் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதில் 8 போலீஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பின்னர், ரவுடி விகாஸ் தூபே மற்றும் அவரின் கூட்டாளிகளைப் பிடிக்க 25 சிறப்புப் படை அமைக்கப்பட்டு, உத்தரப்பிரதேசம் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாநிலங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

இந்தச் சிறப்புப் படை போலீஸார் நடத்திய தேடுதலில் கடந்த ஒரு வாரமாக விகாஸ் தூபே, அவரின் கூட்டாளிகள் ஒவ்வொருவராகக் கைது செய்யப்பட்டும் என்கவுன்டர் செய்யப்பட்டும் வந்துள்ளனர். அப்போதும் ரவுடி இருக்கும் இடம் தெரியாமல் இருந்துள்ளது. தூபே இருக்கும் இடத்தைப் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 2 லட்சம் வரை சன்மானம் வழங்கப்படும் எனச் சிறப்புப் படை போலீஸார் அறிவித்தனர். இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் தூபேவை இன்று காலை 8 அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர்.

ரவுடி விகாஸ் தூபே கைது

மத்தியப்பிரதேசம், உஜ்ஜைனி மகா காளி கோயிலில் இன்று காலை 8 மணிக்கு விகாஸ் தூபே, இருப்பதை உள்ளூர் கடைக்காரர் ஒருவர் பார்த்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், சம்பவ இடத்துக்கு விரைந்து பதுங்கியிருந்துள்ளனர் ம.பி போலீஸார். விகாஸ் தூபே வெளியில் வரும்போது பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இருவர் மட்டும், தூபேவிடம் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தன்னிடம் இருந்த போலி அடையாள அட்டையைக் காட்டி அங்கிருந்து தப்ப முயன்றுள்ளார். அப்போது ஒரு சிறிய சண்டை நடந்து, அதைத்தொடர்ந்து மத்தியப்பிரதேச போலீஸாரால் ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read: உ.பி: `போலீஸ் துப்பாக்கியால் கொல்லப்பட்ட 8 காவலர்கள்!’ - பிரேதப் பரிசோதனை அதிர்ச்சி

மாஸ்க் அணிந்தபடி இருக்கும் தூபே, கைது செய்யப்பட்டு போலீஸாரால் அழைத்துச் செல்லப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. கைது செய்யப்பட்ட தூபேவை உத்தரப்பிரதேச போலீஸில் ஒப்படைக்கும் நடைமுறைகள் தொடங்கியுள்ளன. விரைவில், அவரிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரவுடி கைதுக்குப் பிறகு மத்தியப்பிரதேச முதல்வரும் உத்தரப்பிரதேச முதல்வரும் போனில் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சிவராஜ் சிங் சவுகான்

இந்த விவகாரம் பற்றி பேசியுள்ள மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்,``ரவுடி விகாஸ் தூபேவை கைது செய்ய மத்தியப்பிரதேச போலீஸாருக்கு என் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ரவுடி மாயமானது முதல் தற்போது வரை நான் உ.பி முதல்வரிடமும் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருந்து வருகிறேன். அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு ரவுடி தூபே, உ.பி போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார். இரு மாநிலங்களின் ஒருங்கிணைப்பில் இந்தப் பணி நடைபெறும்” எனத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/news/crime/vikas-dubey-the-main-accused-in-kanpur-encounter-case-has-been-arrested

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக