Ad

புதன், 15 ஜூலை, 2020

கல்வி தொலைக்காட்சி: தினமும் 2.30 மணி நேரம்! அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால், பள்ளிகளைத் திறக்க முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே, பெரும்பான்மையான மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது எனலாம். எனினும், தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக வகுப்புகளை நடத்தி வருகின்றன. மத்திய, மாநில அரசுகளும் மாணவர்களின் கல்வி சார்ந்த நலன்களைப் பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில், தமிழக அரசானது மாணவர்களுக்கு தொலைக்காட்சி வழியாகப் பாடம் நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ளது.

கல்வி தொலைக்காட்சி

தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கல்வி தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பாகும் கல்வி நிகழ்ச்சியை நேற்று தொடங்கி வைத்துள்ளார். பத்தாம் வகுப்பு மற்றும் பிற வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை தினமும் சுமார் 2.30 மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியானது கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. போட்டித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு வழிகாட்டுதல் உள்ளிட்ட பல விஷயங்களையும் மாணவர்களிடம் எடுத்து செல்ல இந்த கல்வி தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளைத் தமிழக அரசு நடத்தி வருகிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

Also Read: ஆன்லைன் (அ) தொலைக்காட்சி வழி வகுப்புகள்... அமைச்சருக்கு சில கோரிக்கைகள்!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதன்படி, பல்வேறு பள்ளிகளிலும் தனிமனித இடைவெளியுடன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச மடிக்கணினிகளில் கல்வி கற்க பயன்படும் வகையில் வீடியோ பாடங்களை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலமாகத் தரவிறக்கம் செய்யும் திட்டத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார்.

செங்கோட்டையன்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் சண்முகம், பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக்கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Also Read: விரைவில் தமிழக அரசின் புதிய கல்வி தொலைக்காட்சி சேனல்... இனி வீட்டிலேயே நீட் பயிற்சி!



source https://www.vikatan.com/government-and-politics/education/cm-eps-launched-tv-based-education-programme-for-school-students

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக