சென்னை புறநகர் பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்புச் சம்பவங்கள் நடந்தன. கொரட்டூர் காவல் நிலையத்தில் கோயிலுக்குச் சென்றுவிட்டு வரும்போது கழுத்தில் அணிந்திருந்த செயினை பறித்து சென்றுவிட்டதாகப் பெண் ஒருவர் புகாரளித்தார். அதன்பேரில் அம்பத்தூர் துணை கமிஷனர் ஈஸ்வரன் உத்தரவின்பேரில் உதவி கமிஷனர் கண்ணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது ரேஸ் பைக் ஒன்றில் வரும் 2 இளைஞர்கள் செயினைப் பறிக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. பைக்கின் பதிவு நம்பரைக் கொண்டு போலீஸார் விசாரித்தபோது அது திருட்டு வண்டி எனத் தெரியவந்தது. தொடர்ந்து போலீஸார் விசாரித்தபோது செயின் பறிப்புக் கொள்ளையர்கள் குறித்த தகவல் தெரியவந்தது. இந்தச் சமயத்தில் கொரட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் எஸ்.ஐ ரமேஷ், தலைமைக் காவலர்கள் பலராமன், பீட்டர் ஆகியோர் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது வேகமாக பைக்கில் வந்த 2 இளைஞர்களைப் போலீஸார் பிடித்தனர்.
விசாரணையில் அந்த இளைஞர்கள்தான் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், `வாகனச் சோதனையில் சிக்கிய இளைஞர்களின் பெயர்கள் பாலு என்கிற பூபாலன் (21), பாபு எனத் தெரியவந்தது. பாலு செங்குன்றத்தை சேர்ந்தவர். மெக்கானிக் வேலை செய்துவருகிறார். பாபு வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர். பெயின்டிங் வேலை செய்து வருகிறார்.
இவர்கள் இருவரும் செல்போன் பறிப்பு, செயின்பறிப்புச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். ஜெயலில் இருந்தபோதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகியுள்ளனர். முதலில் பைக்கைத் திருடும் இவர்கள் அதில் சென்று செயின், செல்போன்களைப் பறிப்பார்கள். பின்னர் போலீஸாரிடம் சிக்காமலிருக்க பெயின்டர் பாபு, உடனடியாக பைக்கின் நிறத்தை மாற்றிவிடுவார். மேலும் எந்த பைக் என்றாலும் அதன் லாக்கை பாலு உடைத்துவிடுவார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஊரடங்கு நேரத்தில் செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை டார்கெட்!
இவர்கள் செயின் பறிப்பதற்கு முன் முதலில் நோட்டமிடுவார்கள். குறிப்பாக, வெள்ளிக்கிழமைகளில் கோயில்களுக்குச் செல்லும் பெண்களைக் குறித்து வைத்து செயின்பறிப்பில் ஈடுபட்டுவந்துள்ளனர். தற்போது ஊரடங்கு என்பதால் கோயில்கள் திறக்கப்படவில்லை. மக்களின் நடமாட்டமும் குறைந்துள்ளதால் பைக்குகளைத் திருடி வந்துள்ளனர். அயனாவரம், பட்டாபிராம் பகுதிகளில் 2 விலை உயர்ந்த பைக்குகளைத் திருடியுள்ளனர்.
Also Read: 90 நாள் போராடி உயிர்விட்ட பெண் எஸ்.ஐ. ! செயின்பறிப்பு அட்டூழியம்
திருடிய நகைகளை ஆன்லைனிலேயே விற்றுள்ளனர். செயின் பறிக்கும்போது அது அறுந்துவிடும் என்பதாலும் ஊரடங்கு நேரத்தில் கடைகள் திறக்காததாலும் ஆன் லைன் மூலம் ஒரே நிமிடத்தில் செயின்களை விற்று பணமாக்கி வந்துள்ளனர். சிசிடிவியில் சிக்காமலிருக்க இன்னொரு யுக்தியையும் இந்தக் கும்பல் பயன்படுத்தியுள்ளனர். அதாவது, செயின் பறிக்க செல்வதற்கு முன் டீ சர்ட்டுக்கு மேல் சட்டை அணிந்துக் கொண்டு செல்வார்கள். செயின் பறித்த பிறகு சட்டையை கழற்றிவிடுவார்கள். மேலும் பைக்கின் பெயின்ட்டையும் மாற்றிவிடுவார்கள். சுமார் 65-க்கும் மேற்பட்ட சிசிடிவிக்களை ஆய்வு செய்து, பாலு, பாபுவை கைது செய்தோம். இவர்களிடமிருந்து 10 சவரன் எடையுள்ள செயின்கள், 3 பைக்குகள் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-2-thieves-using-cctv-footage
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக