Ad

வியாழன், 2 ஜூலை, 2020

திருவாரூர்: மழையில் நனைந்த நெல் மூட்டைகள்! -அதிகாரிகளால் கலங்கும் விவசாயிகள்

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவுக்கு உள்பட்ட அரித்துவாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள வீதிகளில், ஆங்காங்கே நெல் மூட்டைகள் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. இங்குள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்துக்கு விவசாயிகள் கொண்டுவரும் நெல், கொள்முதல் செய்யப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால் இந்த அவலநிலை உருவாகியுள்ளது. கொள்முதலுக்காகக் காத்துக்கிடக்கும் நெல் மூட்டைகள், மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் இப்பகுதி விவசாயிகள் செய்வதறியாது கண்ணீர்விடுகிறார்கள்.

வீதிகளில் கிடக்கும் நெல் மூட்டைகள்

விவசாயிகளின் நலன் காப்பதற்காகவே, அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எதார்த்தமோ, மிகவும் வேதனையானது. கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு வரும் நெல், விரைவாகக் கொள்முதல் செய்யப்படுவதே இல்லை. நீண்டநாள் இழுத்தடிப்புகளால், பல்வேறுவிதமான பாதிப்புகளைச் சந்திக்கும் விவசாயிகள், மனம் உடைந்து போயுள்ளனர்.

அரித்துவாரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி சசிகுமார், ``இந்தப் பகுதியில கோடை நெல் சாகுபடியில நல்ல விளைச்சல் கிடைத்தது. ஏக்கருக்கு 35 மூட்டை வீதம் மகசூல் வந்தது. ஆனால், எங்களால் இந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியலை.

கொள்முதல் மையத்தில் உள்ள புது சாக்குகள்

காரணம், எங்க ஊர் கொள்முதல் நிலையத்துல ஒழுங்காவே கொள்முதல் நடக்கலை. அரித்துவாரமங்கலம் நேரடி கொள்முதல் நிலையத்துக்கு நான் கொண்டுபோன நெல் மூட்டைகள், மூணு நாள்களாக அங்கேயே திறந்தவெளியில காத்துக்கிடக்கு. மழையில் நனைஞ்சி, சில மூட்டைகள் சேதமாயிடுச்சி. எனக்கு மட்டுமல்ல, எங்க பகுதி விவசாயிகள் எல்லாருக்குமே இந்த நிலைமைதான்.

கோயில், பள்ளிக்கூடம், சாலைனு பொது இடங்கள்ல, திறந்தவெளியில ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில நனைஞ்சி கிடக்கு. சாக்குகள் இல்லாததால, இப்ப கொள்முதல் செய்ய முடியாதுனு கொள்முதல் நிலைய ஊழியர்கள் சொல்றாங்க. திருவாரூர்ல இருந்து பழைய சாக்குகள் வரணும்னு அவங்க சொல்றாங்க. இதுல என்ன கொடுமைனா, அரித்துவாரமங்கலம் கொள்முதல் நிலையத்துல, 50 ஆயிரம் புது சாக்குகள் இருக்கு. அவசரத்துக்கு அதைப் பயன்படுத்திக்கலாம். விவசாயிகளோட நலனுக்காகத்தானே கொள்முதல் நிலையம் செயல்படுது...

Also Read: `நெல் உற்பத்தி செய்ய எவ்வளவு செலவாகிறது தெரியுமா?' - அரசின் புதிய அறிவிப்பால் கொதிக்கும் விவசாயிகள்

நாங்க பாடுபட்டு விளைவிச்ச நெல், மழையில நனைஞ்சாலும்கூட கொள்முதல் நிலைய அலுவலர்கள் மனசு இறங்க மாட்டேங்குறாங்க. பழைய சாக்குகள்தான் வரணும்னா, அதை முன்கூட்டியே வரவழைச்சி, தயார் நிலையில வைக்கவேண்டியது இவங்களோட கடமைதானே. பக்கத்து ஊர்கள்ல உள்ள கொள்முதல் நிலையங்களுக்காவது, எங்களோட நெல்லை கொண்டுபோகலாம்னு விவசாயிகள் முயற்சி பண்ணினோம். அங்கேயும் இதே நிலைமை’’ என வேதனையுடன் தெரிவித்தார்.

தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகத்தின், திருவாரூர் முதுநிலை மண்ட மேலாளர் மணிவண்ணனிடம் பேச முயன்றோம். செல்போனில் பலமுறை முயன்றும் நம் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை. விவசாயிகளின் வேதனை குறித்து, வாட்ஸ் அப்பிலும் குறுஞ்செய்தியிலும் அவருக்கு நாம் தகவல் அனுப்பியுள்ளோம்.

நெல் மூட்டைகளோ, வெட்டவெளியில் காத்துக்கிடக்கின்றன. விவசாயிகளோ, கண்ணீரில் தவிக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/tiruvarur-farmers-slams-paddy-direct-purchase-stations-activity

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக