கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மார்ச் மாதத்தின் கடைசி வாரம் முதல் லாக்டௌன் நடைமுறைகள் அமலில் இருக்கின்றன. ஜூன் மாதத்துக்குப் பிறகு இதில் பல்வேறு தளர்வுகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,85,522 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 48,661 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 705 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,063 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,85,577 ஆகவும் உயர்ந்துள்ளது.
Also Read: ஆகஸ்ட் 1 முதல் ஊரடங்கு தளர்வு? முதல்வர் எடுத்த முக்கிய முடிவு... பின்னணி தகவல்கள்!
அன்லாக் 3.0!
கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் அன்லாக் 3.0 நடைமுறைகள் தொடர்பான அறிவிப்புகளை அதைக் கருத்தில்கொண்டே மத்திய அரசு கவனமாக பரிசீலித்து வருவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், பள்ளிகள், மெட்ரோ ரயில்கள் இயக்கம் போன்றவற்றுக்கான தடை தொடரவே உள்துறை அமைச்சகம் விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
பள்ளிகள் திறப்பு தொடர்பாகப் பெற்றோர்களிடம் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கருத்துக் கேட்டிருந்தது. ஆனால், பள்ளிகள் திறப்புக்கு பெரும்பாலான பெற்றோர்கள் எதிரான மனநிலையிலேயே இருக்கிறார்கள். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயாராக இல்லை என்ற கருத்தையே பதிவு செய்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையே மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலும் தெரிவித்திருந்தார்.
Also Read: "பொருளாதாரம் முக்கியம்!"- கர்நாடக ஊரடங்கு நீக்கம்... தமிழகத்திலும் செய்யலாமா? #VikatanPollResults
ஆகஸ்ட் 1-ம் தேதிக்குப் பிறகு சினிமா தியேட்டர்கள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதுதொடர்பாக சினிமா தியேட்டர் அதிபர்களுடன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதன் பின்னரே, தனிமனித இடவெளி, 50 சதவிகித பார்வையாளர்கள் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சினிமா தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பரிந்துரை செய்திருக்கிறது.
முன்னதாக, 25 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கலாம் என அமைச்சகம் பரிந்துரை செய்திருந்தது. அதேபோல், உடற்பயிற்சிக் கூடங்களுக்கும் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம், கொரோனா பரவல் அதிகரிக்கும் வேகம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் ஊரடங்கில் கட்டுப்பாடுகள், தளர்வுகள் விதிக்க மாநில அரசுகளுக்கே அதிக அதிகாரம் அன்லாக் 3.0-வில் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
source https://www.vikatan.com/news/india/theaters-may-allowed-to-open-in-unlock-30-says-sources
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக