Ad

வியாழன், 16 ஜூலை, 2020

விற்ற நாள் முதல்! - ரொமாண்டிக் சிறுகதை #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு ஜனவரியின் பனிக்காலைப் பொழுதில்தான் என்னை நான் விற்றேன்.

செப்டம்பர் 11-க்கு முன், பின் என வரலாறை இரண்டாகப் பிரித்தது போல், என்னை விற்பதற்கு முன், பின் என என் வாழ்வும் இரண்டாகப் பிரிந்துபோனது.

அன்று விமானதளத்தைப் பனிமூட்டம் மூடியிருந்தது. கருஞ்சாம்பல் ரன்வேயின் பனிப்போர்வையை இளங்காலை சூரியனின் ஆரஞ்சு கதிர்கள் மெள்ள விலக்கிக்கொண்டிருந்தன.

இந்தப் பொழுது எனக்கு மிகவும் உகந்த பொழுது. பூமியில் இருப்பதைவிட, ஆகாயத்தில் இந்தக் கணங்கள் இன்னும் ரம்மியமாக இருக்கும்.

Representational Image

ஹாங்கரில் நின்றிருக்கும் இரண்டு செஸ்னா விமானங்களையும் ஏக்கத்துடன் பார்த்தேன். நினைத்த பொழுதில் அவற்றை எடுத்துச் செல்ல எனக்கு உரிமையில்லை. ஒவ்வொரு முறையும் விமானத்தை எடுப்பதற்கு 1,000 வரையரைகள் உள்ளன. வரையறைகள் இன்றி, கார் ஓட்டுவதைப்போல் விமானம் ஓட்ட, சொந்தமாக விமானம் வைத்திருக்க வேண்டும். என்னைப் போல் ஃப்ளையிங் க்ளப்பில் விமானம் ஓட்டப் பயிற்சி பெறுபவனுக்கு அது கனவில்கூட சாத்தியமில்லை.

“குட் மார்னிங், பரம்”.

என் சூப்பர்வைசர் ரங்கநாதனின் குரல் கேட்டுத் திரும்பினேன்.

“குட் மார்னிங், சார்”.

“க்ரேட் மார்னிங் ஃபார் ஃப்ளையிங், இல்லை?”

“ஆமாம்”.

உண்மையிலேயே அது மிகச் சிறந்த காலையாகத்தான் இருந்தது. பனிமூட்டம் விலகி, தெளிந்த நீல வானம் குளிர்ச்சியாய் அழைத்தது.

“என்ன பரம், ஒரு சுற்று போவோமா?”

தலையாட்டினேன்.

இப்படி சந்தர்ப்பங்கள் அபூர்வம். என்றைக்கும் ரங்கசாமி சரியாக 9 மணிக்குத்தான் வருவார். என் இரண்டு வருட பயிற்சிக் காலத்தில், அவர் 7 மணிக்கு ஹாங்கருக்கு வந்து இன்றுதான் பார்க்கிறேன்.

“நான் லாக்கில் என்ட்ரி போட்டுவிட்டு வருகிறேன். நீ ஏ.டி.சி-யிடம் செக்-இன் செய்.”

சொல்லிவிட்டுச் சென்றார்.

சந்தோஷமாகப் போனேன் என் செஸ்னாவை நோக்கி. இந்த கோயம்புத்தூர் ஃப்ளையிங் க்ளப்பில் இருந்தது, இரண்டு செஸ்னாக்கள்தான். இரண்டுமே இரண்டு பேர் உட்காரக்கூடிய ஒரே ரகத்தைச் சேர்ந்தவை. இரண்டுமே அநேகமாக ஒரே நேரத்தில், அடுத்தடுத்துதான் உருப்பெற்றிருக்க வேண்டும். கண்ணை மூடிக்கொண்டு தொட்டுப் பார்த்தால், எது எந்த செஸ்னா என்று வித்தியாசம் காண முடியாது. கண்களைத் திறந்தால் தெரியும் ஒரே வித்தியாசம் - ஒன்று வெள்ளை; ஒன்று மஞ்சள். இந்த இரண்டு வருடங்களில் அந்த வெள்ளை செஸ்னா என்னில் ஒரு பகுதியாகிவிட்டது. மஞ்சள் செஸ்னாவில் நான் ஏறியதே இல்லை.

cessna aircraft

ஆர்வமாய் எதிர்கொண்டது என் செஸ்னா. கழுத்தின் கீழ் தடவும் போது கண் சொருகும் பூனை போல், சுகமாக என்னை சுத்தம் செய்ய அனுமதித்தது.

என் செஸ்னாவுக்கும் எனக்கும் இடையே இருந்த உறவு, அந்த ஃப்ளையிங் க்ளப் முழுவதும் பிரசித்தம். என்னைத் தவிர, அங்கே பயிற்சி பெறுபவர்கள் இன்னும் ஆறு பேர் இருந்தனர். எங்கள் உறவைப் பற்றிய கேலியிலும் கும்மாளத்திலும் ஹாங்கர் எப்போதும் நிறைந்திருக்கும்.

“நல்லவேளை, பரம். உனக்குத் திருமணம் ஆகவில்லை. ஆகியிருந்தால் உன் மனைவி அவள் மாங்கல்யத்தை இந்த செஸ்னாவுக்குக் கட்டிவிட்டுவிட்டு ஓடியிருப்பாள்” என்பதே அவர்களின் ஏகோபித்த கேலியாக இருக்கும்.

அந்த வார்த்தைகளின் நிதர்சன நிஜம் என்னை புன்னகைக்க வைக்கும். அந்த நிஜத்தின் சுகத்துக்கு நான் என் பெற்றோருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

“உனக்கென்று எந்த கடமைகளும் இல்லை, பரமேஷ்வர். உன் உழைப்பில் நாங்கள் ஜீவிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. சகோதரக் கடமைகள் எதுவும் இல்லாத ஒரே மகன் நீ. எல்லோருக்கும் கடவுள் இப்படி ஒரு வாழ்க்கையையோ, வாழ்க்கையை அமைக்கும் வாய்ப்பையோ தருவதில்லை. அவசியங்களும், அவசரங்களும் அற்ற வாழ்க்கையை நீ தெரிவு செய்துகொள்”.

Representational Image

பெற்றோர் இருவரும் பொள்ளாச்சியில் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றவர்கள். வாழ்நாள் முழுவதும் ஓய்வு ஊதியம் உண்டு; சொந்தமாக வீடும் உண்டு. அவர்கள் வார்த்தையில் இருந்த நியாயமும் அவர்கள் ஆசி கொடுத்த பலமும்தான் நான் இப்போது இங்கிருப்பது.

மூன்று வருட ‘ஏர் க்ராஃப்ட் மெயின்டனன்ஸ் இன்ஜினீயரிங்’ முடித்த கையுடன், கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் வாங்க இந்த க்ளப்பில் சேர்ந்து இதோ இரண்டு வருடங்கள் முடியப்போகின்றன. அடுத்து எங்கே என் கால் பதியப்போகிறது என்று இன்னும் நான் யோசிக்கவில்லை.

“செஸ்னா 180, யூ ஆர் க்ளியர்ட் ஃபார் டேக்-ஆஃப்”.

ஏ.டி.சி யின் அனுமதி.

ரங்கசாமி கதவு திறந்து பைலட் சீட்டில் ஏறிக்கொண்டார்.

ஹாங்கரை விட்டு ஆர்வமாக வெளியேறியது செஸ்னா. தங்கத் தகடு போல் ஜொலித்துக்கொண்டிருந்தது ரன்வே. சரசரவென்று சரிந்து ஓடிய ரன்வேயை எட்டி உதைத்து எழும்பியது செஸ்னா.

“இன்று நீ சோலோ செல், பரம். நான் வெறும் பயணி மட்டுமே”.

ரங்கசாமி விலகிக்கொண்டார்.

சட்டென்று ஒரு கவசம் சூழ்ந்தது. என் செஸ்னாவையும் என்னையும் தவிர அந்த அகண்ட அண்ட சராசரத்தில் வேறு யாரும் இல்லை. என் கைகள் கட்டளைகள் பிறப்பிக்கும் முன்பே என் செஸ்னா நான் நினைத்த வேலைகளை முடித்தது.

வட்டங்களும், எட்டுகளும், லூப்புகளும் அனாயசமாயின. பறவைகள் இப்படித்தான் பறக்குமோ? இருக்காது. பறவைகள் காற்றின் ஊடே குழைந்து குடைந்து சதிராடும். இப்படிக் கண்ணாடியும் உலோகமுமான பெட்டிக்குள் இருந்துகொண்டு ஏங்காது. இப்போது நான் பறவையாய்ப் போனால் என்ன? அது சாத்தியமில்லை. ஆனால், நான் என் செஸ்னாவாக முடியும்.

காற்றின் கருவில் புகுந்து பாய முடியும். பூமியைப் பார்த்து அழகு காட்ட முடியும். எல்லைகள் மெள்ள மறைந்தன. நான், என் செஸ்னா, ரங்கசாமி - எல்லாமும் ஒன்றானோம்.

சூரியன் எங்களை நோக்கிக் கைநீட்ட, தகிப்புடன் அவனை அணைத்தோம். காற்றும் சற்றே இடம் கேட்க, சந்தோஷமாய் கைவிரித்தோம். அத்தனையும் கலந்து ஒன்றான ஒரு கணத்தில் எல்லாம் கரைந்து நிர்மலமானோம்.

Representational Image

“தரையிறங்குவோம்,பரம்”.

ரங்கசாமியின் வார்த்தைகள் ரணமாய் அறுக்க, சட்டென்று அனைத்தும் துண்டிக்கப்பட்டு தனித்தனிப் பிண்டங்களானோம்.

யோகம் கலைந்த கோபத்தில் மௌனமாய் தரையிறங்கினோம்.

சீட் பெல்ட் கழற்றிய ரங்கசாமி தோளில் கை வைத்தார்.

“தேங்க் யூ”.

ஒற்றை வார்த்தை சொல்லி விலகிப்போனார்.

செஸ்னாவை ஹாங்கருக்குள் நிறுத்தினேன். விமானத்தை, காரைப் பூட்டுவதைப்போல் பூட்டிவிட்டுப் போகமுடியாது. சுமந்து வந்த குதிரைக்குக் கடிவாளம் கழற்றி, ஆசுவாசப்படுத்தி, சிஷ்ருஷைகள் செய்வது போல் விமானத்திற்கும் ஏகமாகப் பணிகள் உள்ள்ன.

முடிக்கும் தறுவாயில் ரங்கசாமி அழைப்பதாக வாட்ச்மேன் வந்து சொன்னார்.

லேசான ஆச்சர்யத்துடன் கதவு தட்டி உள்ளே நுழைந்தேன்.

ரங்கசாமியின் எதிரே ஒரு பெண் அமர்ந்திருந்தாள். என் வயதுதான் இருந்திருக்கும் அவளுக்கும். ஆனால், அவளைப் பார்த்தவுடன் நொடியில் முதியவனானது போல் உணர்ந்தேன். வெள்ளையில் கால்சராயும் முழுக்கை சட்டையும் ஷூக்களும் அணிந்திருந்தாள். வேறு எந்த அணிகலன்களும் பொட்டுகூட அவளிடத்தில் இல்லை. ரங்கசாமியின் மேஜை மேல் ஒரு வெள்ளை கைப்பை இருந்தது. அது அவளுடையதாகத்தான் இருக்க வேண்டும்.

“இந்த மாதத்துடன் உங்கள் பயிற்சி முடிவடைகிறதென்று உங்கள் பயிற்சியாளர் தெரிவித்தார்”.

சரளமான ஆங்கிலத்தில் எந்தவித முகமனும் இன்றி என் வாழ்வில் நுழைந்தாள்.

தலையாட்டினேன்.

“உங்களுக்கு எதிர்காலத் திட்டங்கள் ஏதாவது உண்டா?”

ரங்கசாமியைப் பார்த்தேன். ‘எனக்கு எதுவும் தெரியாது’ என்ற பாவனையில் தோள்களைக் குலுக்கினார்.

“இன்னும் முடிவெடுக்கவில்லை”.

“நான் ஒரு யோசனை சொல்லலாமா?”

தலையாட்டினேன்.

Representational Image

“இந்த ஃப்ளையிங் க்ளப்பில் விமானங்களை விற்பதில்லை என்று உங்கள் மேலாளர் கூறினார். ஆகையால், இங்கிருக்கும் விமானங்களில் ஒன்றை நான் குத்தகைக்கு எடுக்கிறேன். இந்த விமானம் எனக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் - நான் சொல்லும் வேளையில், நான் சொல்லும் வகையில். இந்த விமானத்துக்கு ஒரு விமானி வேண்டும். உங்களுக்குச் சம்மதமா?”

“என் வேலை என்னவென்று தெரியாமல் என் சம்மதத்தைக் கூற முடியாது”.

“பறப்பதும், என் விமானத்தைப் பாதுகாப்பதும் மட்டுமே உங்கள் வேலை. நீங்கள் விரும்பும் தொகையும் போனஸும் உங்களுக்கு ஊதியமாக வழங்கப்படும். இந்த விமானத்தைப் பராமரிப்பதற்கான அத்தனை செலவுகளையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். அத்துடன் அதற்கு ஆகும் எரிபொருள் செலவையும் கொடுத்துவிடுகிறேன். நான் சொல்லும் வேளையில் நீங்கள் பறந்தால் மட்டும் போதும்”.

ஒரு கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்தேன்.

“இத்தனை செலவுகள் செய்வதற்கு நீங்கள் ஏதாவது ஏர்லைன்ஸில் பயணம் செய்துவிடலாமே?” என்றேன்.

“என் காரணங்கள் என்னுடன்”, என்றாள்.

“யோசிக்க வேண்டும்”, என்றேன் நான்.

“யோசியுங்கள்”, என்று கூறிவிட்டு கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு அமைதியாக என்னைப் பார்க்க ஆரம்பித்தாள்.

குழப்பத்துடன் ரங்கசாமியைப் பார்த்தேன்.

“நாங்கள் சற்றே கலந்தாலோசிக்கலாமா?” என்றார்.

“தாராளமாக”.

கால் மேல் கால் போட்டு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்தாள்.

ரங்கசாமி என்னை வெளியே வரும்படி சைகை செய்தார்.

குழப்பத்துடன் அவரை பின்தொடர்ந்தேன்.

“என்ன பரம், என்ன யோசிக்கிறாய்?”

“ஒன்றும் புரியவில்லை” என்றேன்.

“புரிய வேண்டிய அவசியம் இல்லை. நீ கேட்கும் தொகையைத் தருவதற்கு அவள் தயாராக இருக்கிறாள். நீ கேட்கும் போனஸும் தருவதாகச் சொல்கிறாள். பிறகு என்ன? வேலையும் அதிகமிருக்கும் என்று தோணவில்லை” என்றார்.

“முதலில் இவள் யார் என்றே தெரியவில்லையே” என்று தயங்கினேன்.

“இவள் யார் என்று தெரியவேண்டிய அவசியம் நமக்கில்லை. ஒழுங்காக உன் ஊதியம் வந்து சேருமா என்று பார்த்தால் போதும். அது வரும்”.

“எப்படி உறுதியாகச் சொல்கிறீர்கள்?”

Representational Image

“உள்ளே நுழைந்ததுமே அவள் கொடுத்தது சிட்டிபேங்க் அக்கவுன்ட் நம்பரைத்தான். அந்த நம்பரைக் கொடுத்து, அந்த அக்கவுன்ட்டைப் பற்றி என்னைத் தொலைபேசியில் கேட்கச் சொன்னாள். அது சிட்டி பேங்க்கின் பிளாட்டினம் அக்கவுன்ட்டாம்”.

“அவள் பெயர்?”

“கேட்கக்கூடாது என்று சொல்லிவிட்டாள்”.

“பெயர்கூடத் தெரியாதவளிடம் நான் எப்படி வேலை செய்வது?”

“பரம், பெயர் ஒரு பெரிய விஷயமே இல்லை. அவளை நீ மறுமுறை சந்திக்கும்போது கேட்டால் போகிறது”.

“ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்களா?”

“யோசிக்காமல்”.

அப்புறமும் நான் தயங்குவதைப் பார்த்துவிட்டு, “பார் பரம், உனக்கு ஒத்துவரவில்லையெனில் எப்போது வேண்டுமானாலும் நீ விலகிக்கொள்ளலாம் இல்லையா?” என்றார்.

அவர் சொன்னது சரி என்று பட்டதால், வேறு வார்த்தைகளின்றி அமைதியாக அறைக்குள் நுழைந்தோம்.

தயாராக ஒரு காகிதம் நீட்டினாள்.

“பி. பரமேஷ்வர் என்ற நான் கீழ்கண்ட நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டு இன்று முதல் ‘தி அசோசியேட்ஸ்’ என்ற நிறுவனத்துக்கு விமானியாகப் பணிபுரிய சம்மதிக்கிறேன்.

1. நிறுவனத்தின் விமானத்தை பறப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2. ஒரு வாரத்தில் குறைந்தபட்சம் 21 மணி நேரங்கள் விமானம் பறந்திருக்க வேண்டும்.

3. விமானத்தில் ஏற்படும் பழுதுகளை முடிந்தவரை விமானியே பழுதுபார்க்க வேண்டும்.

4. விமானம் பறக்கும் பொழுது விபத்து ஏற்பட்டு விமானி உயிரிழக்க நேர்ந்தால், நிறுவனம் அவர் குடும்பத்துக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்டஈடாக வழங்கும்.

5. ஒப்பந்தம் கையெப்பமிட்ட தேதியிலிருந்து ஏழு வருடங்கள் கழிந்த பின் ஒப்பந்தம் மறுபரிசீலனை செய்யப்படும். அதுவரை பணியிலிருந்து விமானி விலக முடியாது.

6. நிறுவனத்துக்கு உபயோகிக்கப்படும் நேரங்கள் தவிர, மற்ற நேரங்களில் விமானத்தை விமானி பறப்பதற்கு மட்டும் பயன்படுத்தலாம். விருப்பப்பட்டால் அவர் பயணிகளை ஏற்றிச் செல்லலாம். அப்படிச் செய்வதற்கு அவர் கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது.

இந்த நிபந்தனைகளுக்கு நான் சுயநினைவுடனும், முழு மனதுடனும் சம்மதிக்கிறேன்.

கையொப்பம்

(மு. மெய்யப்பன்)

மேனேஜிங் டைரக்டர்

‘தி அஸோசியேட்ஸ்’ சார்பாக

தேதி

கையொப்பம்

(பி. பரமேஷ்வர்)

தேதி

கையொப்பம்

(சாட்சி)

தேதி

Representational Image

சட்ட மேதாவித்தனம் கலக்காத, தெளிவான எளிய ஆங்கிலத்தில் அந்த ஒப்பந்தம் இருந்தது.

“ஒரு விஷயம் தெளிவுபடுத்த முடியுமா?” என்று அவளிடம் கேட்டேன்.

“தாராளமாக”.

“பறப்பதற்கல்லாமல் விமானத்தை வேறு எதற்கு பயன்படுத்தமுடியும்?” என்றேன் சற்றே கேலியான குரலில்.

“ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குச் செல்ல” என்றாள் அமைதியாக.

உச்சந்தலையில் உறைபனி கவிழ்ந்தது. ஒரு கணம் ஆழமாக அவள் கண்களைப் பார்த்தேன். நிர்மலமான தெளிந்த குளத்தில் என் பிம்பத்தைப் பார்ப்பதுபோல் இருந்தது.

ரங்கசாமியிடம் பேனா வாங்கி, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். நிறுவனத்தின் சார்பாக மு. மெய்யப்பன் ஏற்கெனவே கையெழுத்திட்டிருந்தார். சாட்சியாக ரங்கசாமி கையெழுத்திட்டார்.

“எந்த விமானம் வேண்டும் என்று பார்க்கிறீர்களா?” ரங்கசாமி கேட்டார்.

சின்னதொரு தலையசைப்புடன் கைப்பையை எடுத்துக்கொண்டு எழுந்தாள். ரங்கசாமி வழிகாட்ட அவளை நான் தொடர்ந்தேன்.

ஹாங்கருக்கு வந்ததும் நேரே என் வெள்ளை செஸ்னாவிடம் சென்றாள். மஞ்சள் செஸ்னாவை அவள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை.

ஒருமுறை விமானத்தைச் சுற்றி வந்தாள். அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, சின்ன பொறாமைத் தீ சுட ஆரம்பித்தது. என் வெள்ளை செஸ்னா, என்னுடன் கலந்த என் வெள்ளை தேவதை, நான் இருப்பதையே மறந்து அவள் மேல் லயித்துவிட்டது. விமானத்தைத் தொடுவதற்கு அவள் கை நீட்டியதும் என் விமானம் ஆசையாய் மூக்கு நீட்டி அவள் ஸ்பரிசம் ஏற்றது. உள்ளே ஏறி விமானியின் சீட்டில் அமர்ந்தாள். கன்ட்ரோல்கள் ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்தாள். என் விமானமும் அவளும் ஏதோ ரகசிய சதி தீட்டியது வெளியே நின்றுகொண்டிருந்த எனக்கு சத்தியமாகத் தெரிந்தது.

“இந்த விமானம்தான்”- கீழே இறங்கி முடிவு சொன்னாள்.

“அவசியமான படிவங்களை என் நிறுவனத்துக்கு அனுப்புங்கள். கையெப்பமிட்டு திரும்ப வரும்” என்று ரங்கசாமியிடம் கூறினாள்.

“என் விமானம் பத்திரம்” என்று என்னிடம் கூறிவிட்டு திரும்பிப் பார்க்காமல் சென்றுவிட்டாள்.

Representational Image

நான் கையெப்பமிட்ட ஒப்பந்தத்தின் நகலை என் சக பயிற்சியாளர்களிடம் காட்டியபோது, அவர்கள்தான் சுட்டிக்காட்டினார்கள் - கிட்டத்தட்ட நான் வாங்கப்பட்டிருக்கிறேன் என்பதை.

இது நடந்து இன்றுடன் நான்கு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரை ஒருமுறைகூட அவளோ, அவள் நிறுவனமோ விமானத்தைப் பயன்படுத்தவில்லை. நான் வாங்கப்பட்டேன் என்று எண்ணி ஆரம்பத்தில் அடிமைபோல் உணர்ந்த நான், நிர்பந்தங்கள் இன்றி, கட்டுப்பாடுகள் இன்றி நினைத்த நேரம் பறக்கும் சுதந்திரத்தை அனுபவிக்க ஆரம்பித்தபொழுதுதான் உணர்ந்தேன், வேடனிடம் கூண்டில் சிக்கியிருக்கும் பறவையை விலைக்கு வாங்கி வானில் பறக்கவிடுவதைப்போல், அவள் என்னை பறக்கவிட்டிருப்பதை.

அதிகாலை, நண்பகல், அந்தி, நள்ளிரவு என்று நினைத்த நேரம் வெள்ளை செஸ்னாவில் என் விருப்பம் போல் பறந்துகொண்டிருக்கிறேன்.

விளையாட்டாக ஓரிரு முறை வானில் பறக்க ஆசைப்பட்ட சிறுவர்களை ஏற்றிச்செல்ல, இப்போது பறக்க ஆசைப்பட்டு பலரும் தேடி வருகிறார்கள். நிபந்தனைக்குட்பட்டு எல்லோரையும் கட்டணமின்றி அழைத்துச்செல்கிறேன். என் ஊதியமும் செஸ்னாவின் செலவுகளுக்கான தொகையும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் என்னைத் தேடி வருகின்றன.

எனக்கென்று எந்தக் கவலையும் இப்போதில்லை - ஒன்றைத் தவிர.

இப்போதெல்லாம் வெள்ளை செஸ்னா என்னிடம் முன்புபோல் இருப்பதில்லை. அது இப்போது அவளுக்குச் சொந்தம் என்று அதற்கும் தெரிந்திருந்தது.

“ஏன் மாறிவிட்டாய்?” அதனிடம் கேட்டேன்.

“உன்னை அவள் ஸ்பரிசித்திருந்தால் நீயும் கூடத்தான் மாறியிருப்பாய்” என்றது.

Representational Image

உண்மையாயிருக்கும் என்று தோன்றியது. ஒருவருக்கொருவர் இணைந்திருந்த நிலை மாறி, இப்போது அவள்தான் எங்களை பிணைக்கும் சங்கிலியாகிவிட்டாள்.

ஒருநாள் அதனிடம், 'அவள் பெயர் தெரியுமா' என்று கேட்டேன்.

‘உனக்குத் தெரிந்தால் எனக்குச் சொல்’ என்றது.

மறுமுறை அவளைப் பார்க்கும்போது கேள்விகள் கேட்க வேண்டும்.

“நீ யார்?”

“என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய்?”

“என்னை எப்படி தேர்ந்தெடுத்தாய்?”

“உன் பெயர் என்ன?”

என் எஜமானியின் பெயர் தெரியக் காத்திருக்கிறேன்.

ஒரு வாழ்நாள் இருக்கிறதே!

--------------------

கா. தாஸ்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/short-story-about-a-pilot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக