Ad

புதன், 22 ஜூலை, 2020

`சுருக்குமடி வலைன்னா என்னங்க?' - மீன்பிடித்தலும் வலைகளின் வகைகளும் #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

"விடுப்போ விடுமுறையோ கிட்டாத ஒரே தொழில் அவனுடையது... துடுப்பு வீட்டில் இருந்தாலும் வாழ்க்கையில் அவன் மூழ்கிக்கொண்டிருக்கிறான் - மீனவன்" - எனும் வரி அவர்களின் வாழ்வியலை சொல்லும் வரிகள். அன்றாடம் உயிரைப் பணயம் வைத்து மீன் பிடித்துவந்து விற்பதுதான் அவர்களின் வாழ்வாதாராம்.

காசிமேடு

ஆரம்ப காலங்களில் மீனவர்கள் கட்டுமரங்கள் மூலமாக மீன்பிடித்து வந்தனர். அதன் பின்னர் கட்டுமரம் சிறிய படகுகளானது. இதைத்தான் நாட்டுப் படகுகள் அல்லது வள்ளம் என்று அழைக்கிறார்கள். பிறகு இப்படகுகளில் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டது. பின்னர், பெரிய அளவு சக்திகளைக் கொண்ட மோட்டார்கள் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் வந்தன. இந்த விசைப்படகுகள் 120 மீட்டர் நீளம் வரை இப்போது அமைக்கப்படுகின்றன.

#மீன் பிடித்தல்

இந்தியாவில் 7,516 கி.மீ நீளத்துக்கு கடற்கரை அமைந்துள்ளது. மீன்பிடித்தல் நம் நாட்டின் முக்கியத் தொழிலாகும். தூண்டில் மீன் பிடித்தல், ஆழ்கடலில் தூண்டில் மீன்பிடித்தல், வலைகள் மூலம் கரைப் பகுதியிலும் ஆழ்கடலிலும் மீன் பிடித்தல் எனப் பலவகை மீன்பிடித்தல்கள் நம் நாட்டில் உள்ளன. வலைகள் மூலம் மீன் பிடித்தலிலே பல வகைகள் உள்ளன. வலைகளின் வகைகளை பொறுத்து ஆயிரத்தில் தொடங்கி பல லட்சம் விலையுள்ள வலைகள் உள்ளன. அதில் குறிப்பிட்ட சில வகைகளை இங்கு பார்க்கலாம்.

* டிப் நெட் எனப்படும் நீரில் அமிழ்த்தும் வலை

கைப்பிடியுடன் ஒரு சட்டகம் இருக்கும். இது முக்கோண, செவ்வக அல்லது சதுர வடிவமாக இருக்கும். சிறிய வலையை படகில் இருந்து கையால் கடலில் வீசி மீன் பிடிக்கப்படும். கடலின் மேற்பரப்பில் உள்ள மீன்களைப் பிடிக்க இந்த வலை உதவும்.

படகு

*எறிதல் வகை

குடை போல தோற்றமளிக்கும் இவ்வலை வட்ட வடிவில் இருக்கும். உச்சியில் வலுவான கயிறு இணைக்கப்பட்டிருக்கும். வலை தண்ணீரில் அமிழ்ந்து செல்வதற்காக ஓரங்களில் இரும்பு அல்லது ஈயம் பொருத்தப்பட்டிருக்கும். மீனவர் படகில் இருந்து தண்ணீருக்கு மேல் இந்த வலையை வீசுவார். வலையானது நீரின் மேல் முழுமையாக விரிந்து, விளிம்பில் உள்ள எடை காரணமாக படிப்படியாக கீழே மூழ்கும். சிறிய மீன்களும் இறால்களும் அதில் சிக்கிக் கொண்டவுடன் தன் கையில் உள்ள கயிறு மூலம் வலையை இழுத்து மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இதை உள்ளூர் மீனவர்கள் வீசு வலை எனவும் கூறுகிறார்கள்.

#முடிப்பு வலை

இடம் பெயர்ந்த சிலவகை மீன்களைப் பிடிக்க இந்த வகை வலைகள் பயன்படுகிறது. முடிப்பு போன்ற செவ்வக வடிவில் வாய் போல் பிணைக்கப்பட்டிருக்கும். இவ்வகை வலைகள் வளையத்தின் மூலம் இணைக்கப்பட்டிருப்பதால் மீன் வலையின் வாயை திறக்கவோ மூடவோ முடியும். தண்ணீருக்கு மேல்பகுதிகளில் நகரும் மீன்களை இந்த வலை மூலம் எளிதாக பிடிக்கலாம்.

மீனவர்

#செவுள் வலை

செவுள் வலை என்பது தண்ணீரில் பெரிய சுவர் போல் 25மீ முதல் 30மீ வரை அமைக்கப்படும். இந்த வலைகள் மீன்களுக்குத் தெரியாது. மீன்கள் நகரும் பாதையில் வலைகள் அமைக்கப்படும். வலை இருப்பது தெரியாமல் நீந்திச் செல்லும் மீன்கள் இந்த வலையில் மாட்டிக்கொள்ளும். இவ்வகை வலையை மாலையில் கடலில் போட்டுவிட்டு, மறுநாள் காலையில் எடுக்கின்றனர். ஒரு வலையை நேராக சுவர் போலவும் அல்லது வலையின் பாதி உள்நோக்கி ஒரு பொறி போலவும் அமைக்கப்படுகிறது. இதை சிலபகுதி மீனவர்கள் தத்துவலை என்கிறார்கள். இந்த வகையில் வலைகள் நீளம் அதிகம் என்பதால் மீன் சிக்கிய பிறகு இழுத்து எடுக்க பல மணி நேரம் ஆகும்.

#வட்ட வலை

இவ்வலையை இரண்டு படகுகள் மீன்பிடிப் பகுதிக்கு கொண்டு செல்கின்றன. அங்கு படகுகள் அரை வட்டத்தில் வலையை கடலில் விரித்தபடி எதிர்த் திசைகளில் நகரும். அவ்வலையின் இறக்கையுடன் இணைக்கப்பட்ட கயிறுகள் படகுகளில் கட்டப்பட்டு இழுத்துச் செல்கின்றன. இரண்டு முனைகளும் சுமார் 100 மீ இடைவெளியில் இருக்கும்போது இழுப்பது நிறுத்தப்படும். வலையால் சுற்றப்பட்ட மீன்கள் தப்ப முடியாது. இதை சில பகுதி மீனவர்கள் தட்டுமடி வலை என்கிறார்கள். இந்தவகை வலைகளில் வாளை, நெத்திலி மீன்கள் அதிகமாக சிக்கும்.

மீனவர்

#இழுவை வலை

இழுவை வலைகள் கூம்பு அல்லது பை வடிவில் வடிகட்டி போல செயல்படுகின்றன. பெரிய பையில் அகன்ற வாய் மற்றும் கீழே குறுகிய முனை போல் இருக்கும். இழுவை வலை சுமார் 30 மீ நீளமும், இறக்கைகள் 100 மீ நீளமும் கொண்டது. இந்த வலை ஒன்று அல்லது இரண்டு படகுகள் மூலமாகவோ, மீன்பிடிக் கப்பல்களிலோதான் பயன்படுத்தப்படுகிறது. நெய் மீன், கணவாய், இறால் போன்ற பலவகை மீன்கள் இந்த வலையில் சிக்கும். கடலின் அடி ஆழம் வரை உள்ள மீன்களைப் பிடிக்க இந்த வலை உதவுகிறது.

#மடிவலை

15 மீட்டர் முதல் 100 மீட்டர் நீளமுள்ள பெரிய கூம்பு வடிவத்தில் அமைந்துள்ளது மடிவலை. பெரிய வகை மீன்கள் மற்றும் இறால்களைப் பிடிக்க இவ்வலை பயன்படுத்தப்படுகிறது. இதில் செம்மீன், இறால், கணவாய் போன்ற மீன்கள் சிக்கும். தரை மட்டத்தில் மண்ணுடன் சேர்த்து குஞ்சு மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை அள்ளிக்கொண்டு வரும்.

#சுருக்கு மடி வலை

கரையிலிருந்து இழுக்கும் கரைமடி வலையின் அடுத்த பரிணாமம்தான் இது. கடலில் உள்ள நீரோட்டங்களுக்கு தகுந்த வகையில் இவ்வலை வீசப்படுகிறது. இவ்வலையின் விலை மிக அதிகம். சாதாரண மரப்படகில் இதனை கொண்டு செல்ல முடியாது. ஃபைபர் படகு போன்ற விலையுயர்ந்த படகுதான் சரிப்பட்டுவரும். ஏனென்றால் ஒரு வலையின் எடை 10 டன் வரை இருக்கும்.

மீனவர்

இந்த வலையை சுமார் 40 பேர் வரை கூட்டாக சேர்ந்துதான் மீன்பிடிக்க முடியும். ஒருமுறை வலையை வீசி அதிக மீன்களை அள்ளி வருகின்றனர் மீனவர்கள். இவ்வகை வலைகளில் மீன் பிடித்தால் அதிக லாபம் கிடைப்பதால் மீனவர்கள் இதை அதிகம் பயன்படுத்த முன் வருகின்றனர். சாளை, அயிலை, வேளா மீன்கள் அதிகமாக சிக்கும். கூட்டமாக சுற்றும் மீன்களில் ஒன்று கூட மிஸ் ஆகாமல் பிடிக்க இந்த வலை பயன்படுகிறது.

சுருக்கு பை போன்று வட்ட வடிவில் இறுகிக்கொண்டே செல்லும் என்பதால் இதற்கு சுருக்குமடி வலை என பெயர். கடலின் அடியில் 500 மீட்டர் வரை கீழே செல்லும். பெரிய சுருக்கு மடிவலையை வீசினால் எல்லா மீன்களும் மாட்டிக்கொள்ளும். ஒரு வேளை மீன்கள் இவ்வலையை கிழிக்க முயன்றால் உடனடியாக அதற்கு இணையாய் மற்றொரு வலையை போட்டு மீன்களை லாவகமாக பிடிக்க முடியும்.

மீனவர்

சுருக்குமடி வலை மற்றும் படகு வாங்க ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு தேவைப்படும். சுருக்கு வலை படகில் சுறா வலை, மத்தி வலை என இருவகை வலைகள் பயன்படுத்தப்படுகிறது. மத்தி வலையில் சிறிய மீன்களான அயிலை, கானாங்கத்த, நெய்மீன், வேளா போன்ற மீன்கள் சிக்கும். ஒரு வலையின் மதிப்பு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரையில் ஆகும்.

#வலைகளால் மீனவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள்

*சுருக்குமடி வலை பயன்படுத்துவதால் அதிக மீன்கள் கிடைக்கும். இதனால் அதிக லாபம் ஈட்ட முடியும். ஆனால், சாதாரண வலை பயன்படுத்தும் நாட்டுப்படகு மற்றும் பாரம்பர்ய படகு மீனவர்களுக்கு குறைந்த லாபமே கிடைக்கிறது. இதனால் இருதரப்பு மீனவர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும் நிலை உள்ளது.

மீனவர்

* சுருக்கு மடிவலையில் குஞ்சு மீன், முட்டைகள் தொடங்கி பெரிய வகை மீன்கள் வரை மாட்டிக்கொள்ளும் என்பதால் மீன்வளம் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாரம்பர்ய மீனவர்களின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு 2007-ம் ஆண்டு தடை விதித்தது. இந்தத் தடையை 2018-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அனுமதியின்றி இவ்வலையின் மூலம் மீன் பிடித்தால் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன்படி நடவடிக்கை எடுக்க முடியும்.

* அதே சமயம் அதிக வட்டிக்கு கடன் வாங்கி சுருக்குமடி வலை வாங்கியதாகவும். இந்த வலைக்கு தடை விதித்ததால் கடனை அடைக்க வழி தெரியவில்லை எனவும் மீனவர்கள் ஆதங்கப்படுகின்றனர். எனவே, மானிய விலையில் மாற்று வலை வழங்க அரசு முன்வர வேண்டும்.

- மணிகண்டபிரபு

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://www.vikatan.com/oddities/miscellaneous/a-story-about-fishing-net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக