Ad

புதன், 22 ஜூலை, 2020

கேரளா: ஒரேநாளில் 1,038 பேர்; மீண்டும் முழு லாக்டெளன்! - அதிர்ச்சி கொடுத்த நுழைவுத்தேர்வு

கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. தினமும் 100, 200 என கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், கடந்த சில தினங்களாக 700, 800 எனத் தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. இந்தநிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்தது. இப்போது கேரளத்தில் 8,818 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6,164 பேர் கொரோனா குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த நாராயணன் என்பவர் நேற்று கொரோனாவால் இறந்தார். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 397 பகுதிகள் ஹாட் ஸ்பாட்டுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. திருவனந்தபுரம், கொச்சி உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும், கேரள அரசு நடத்திய பொறியியல் நுழைவுத்தேர்வில் கலந்துகொண்ட மாணவர்களுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கேரளத்தில் மீண்டும் முழு லாக்டெளன் பிறப்பிப்பது குறித்து ஆலோசித்துவருவதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

தமிழக கேரள எல்லையில் கொரோனா சோதனை

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், ``கொரோனா தொடங்கியதற்கு பிறகு ஒரேநாளில் 1,000 நோயாளிகள் கடந்த தினம் இது. ஒரே நாளில் 1,038 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில் 785 பேருக்கு தொடர்பு மூலம் கொரோனா பரவியுள்ளது. 57 பேருக்கு யார் மூலம் கொரோனா பரவியது என்பதைக் கண்டறிய முடியவில்லை. அதே சமயம் 272 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். கேரளத்தில் இதுவரை 15,032 பேருக்கு கொரோனாவால் பாதித்துள்ளனர். 1,59,777 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

Also Read: துபாயிலிருந்து திரும்பிய 29வது நாளில் இளைஞருக்குக் கொரோனா பாசிட்டிவ்! - அதிர்ச்சியில் கேரளா

நடந்து முடிந்த பொறியியல் நுழைவுத் தேர்வை எழுதிவிட்டு மாணவர்கள் கூட்டமாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. இதை தடுக்க முனெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதில் மாணவர்கள் மீது குற்றம் எதுவும் இல்லை. கேரளத்தில் பாதிப்பு அதிகரிப்பதால் முழு லாக்டெளன் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எனவே, மீண்டும் முழு லாக்டெளன் பிறப்பிப்பது பற்றி ஆலோசித்து வருகிறோம். அதே சமயம் சாதாரண மக்கள் அடையும் பாதிப்புகள் குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.

பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் ஓணப் பண்டிகை முக்கிய விழாவாகும். ஓணப் பண்டிகையை முன்னிட்டு மாநிலத்தில் 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் உணவு பொருள்கள் அடங்கிய இலவச கிட்டுகள் வழங்கப்படும். அதில், சர்க்கரை, எண்ணை, மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, பயிறு உள்ளிட்ட 11 வகையான சமையல் பொருள்கள் அடங்கியிருக்கும். மேலும், ஒரு கிலோ 15 ரூபாய் வீதம் 10 கிலோ அரிசியும் வழங்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-positive-cases-increased-in-kerala

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக