Ad

வியாழன், 16 ஜூலை, 2020

வேலூர்: மிரட்டல் விடுத்த ரவுடி ஜானி! - போலீஸ் பாதுகாப்பில் டெல்லி முரளி

வேலூரை நடுங்கவைக்கும் பிரபல ரவுடிகளான ஜானி, வசூர் ராஜா இருவரும் மிரட்டிப் பணம் பறிப்பது குறித்து 5.7.2020 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் `குழந்தைகளைக் குறிவைக்கும் ஜானி... பணத்தைக் கறக்கும் காதல் மனைவி ஷாலினி... சிறையிலிருந்து மிரட்டும் வசூர் ராஜா... குலைநடுங்க வைக்கும் வேலூர் ரவுடிகள்!’ என்ற தலைப்பில் கட்டுரை வெளிவந்தது. தொடர்ந்து, இரு ரவுடிகளுக்குமான அரசியல் தொடர்புகள் குறித்தும் `கேங்ஸ்டர்களை உருவாக்கிய பால்கார் ரவுடி... வேலூரின் க்ரைம் சரித்திரம்!’ என்ற தலைப்பில், ஜூ.வி-யில் ஃபாலோ-அப் கட்டுரையும் வெளியானது.

ஜூ.வி கட்டுரை

``காட்பாடி வன்றந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஜானி மீது ஆறு கொலை, எட்டு ஆள்கடத்தல் உட்பட 45-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. புகார் பதியப்படாத குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 100-ஐ கடந்திருக்கும். `என்கவுன்டர்’ லிஸ்ட்டிலுள்ள ஜானி, பல ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்தபடியே தன் அடியாட்கள் மூலம் காரியங்களைக் கச்சிதமாக முடிக்கிறார். வீடியோ போன்கால் மூலம் தொழிலதிபர்களுக்கு உயிர் பயத்தை ஏற்படுத்தி லட்சக்கணக்கில் பணத்தைக் கறந்துவிடுகிறார்’’ என்று விலாவரியாகச் சுட்டிக்காட்டியிருந்தது, வேலூர் காவல்துறை.

கட்டுரைகள் வெளியான நிலையில், தலைமறைவாக இருந்த ஜானியின் காதல் மனைவி ஷாலினி வழக்கறிஞர் படையுடன் சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் ஆஜரானார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு தன் மகளுடன் வீட்டுக்குச் சென்றார் ஷாலினி. இந்த நிலையில், அடுத்த பரபரப்பாக டெல்லி அரசியலுடன் தொடர்புடைய டெல்லி முரளியை ஜானி மிரட்டியிருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. `டெல்லியார்’ என்ற புனைபெயர் கொண்ட முரளிதரன், மத்திய அரசுடன் இருக்கும் தன் செல்வாக்கு மூலம் பவர் பாலிக்டிக்ஸில் வலுவான மீடியேட்டராக பலவற்றைச் சாதித்துவருகிறார்.

ரவுடி ஜானி

ரவுடி ஜானி இவரிடமும் கைவரிசை காட்ட முயல்வதாகத் தகவல் வெளியாகி உள்ளதால், காட்பாடியை அடுத்த கிறிஸ்டியான்பேட்டை கல்புதூரில் உள்ள டெல்லி முரளியின் வீட்டுக்கும், அவரின் உதவியாளர் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, காவல்துறை வட்டாரத்தில் டெல்லி முரளிக்குச் செல்வாக்கு இருப்பதால், ரவுடியின் மிரட்டலைத் தொடர்ந்து சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ``ரவுடி ஜானியால் டெல்லி முரளியை நெருங்க முடியாது என்றாலும் மிகுந்த கவனமுடன் இருக்குமாறு அவரிடம் அறிவுறுத்தியிருக்கிறோம்" என்கிறது காவல்துறை.

இது தொடர்பாக டெல்லி முரளி தரப்பில் விசாரித்தபோது, ``ரவுடி ஜானி சில தினங்களுக்கு முன் தொழில் அதிபர் ஒருவரை மிரட்டி பணம் கேட்டான். அப்போது, அந்த நபர் எங்களின் பெயரைச் சொல்லி பணம் தர மறுத்துள்ளார். `யார் பெயரைச் சொன்னாலும், எனக்குப் பயம் இல்லை. நான், கேட்ட பணத்தை எடுத்து வை’ என்று ஜானி மிரட்டல் விடுத்துள்ளான். அதைத்தொடர்ந்து, போலீஸார் எங்களைக் கவனமாக இருக்கச் சொன்னார்கள். மற்றபடி, ஜானிக்கும் எங்களுக்கும் நேரடியாக மோதல் எதுவும் கிடையாது. அவன் எங்களை மிரட்டவில்லை’’ என்றனர்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/is-rowdy-johnny-threatened-delhi-murali

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக