மோடியின் லடாக் விசிட்:
இந்தியா - சீனாவுக்கு இடையே நடக்கும் எல்லை பதற்றத்துக்கு நடுவே நேற்று திடீரென லடாக்கிற்கு சென்ற இந்தியப் பிரதமர் மோடி, எல்லை விவகாரம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். பிறகு இது தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். இதையடுத்து கல்வான் பகுதியில் நடந்த தாக்குதலில் காயமடைந்த ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரதமரின் நேற்றைய உரையில், ‘ எல்லை விரிவாக்கத்துக்கான வயது முடிந்துவிட்டது. இது நம் நாட்டின் வளர்ச்சிக்கான நேரம். எல்லை விரிவாக்கம் சக்தி இழந்துவிட்டன அல்லது அதற்காகப் போர் தொடுத்தவர்கள் திரும்பிச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்பதற்கு வரலாறு சாட்சி’ எனப் பேசியிருந்தார். பிரதமர் மோடியின் பேச்சு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. அதே நேரத்தில் மோடியின் பேச்சுக்கு சீனா பதில் கருத்துகளையும் முன்வைத்துள்ளது.
சீனாவின் ரியாக்ஷன்:
டெல்லியில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் தன் ட்விட்டர் பக்கத்தில், “சீனா தனது 14 அண்டை நாடுகளில் 12 உடன் அமைதியான பேச்சுவார்த்தைகளின் மூலம் எல்லைகளை நிர்ணயித்துள்ளது. நில எல்லைகளை நட்பு ரீதியிலான ஒற்றுமைக்கான பிணைப்புகளாக மாற்றியுள்ளது. சீனாவை விரிவாக்கவாதியாகப் பார்ப்பது ஆதாரமற்றது. அண்டை நாடுகளுடனான மோதலை மிகைப்படுத்தி இட்டுக்கட்டுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் மோடியின் லடாக் வருகை தொடர்பாக பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் (zhao lijian), “இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் ராணுவம் மற்றும் அரசாங்கம் மூலம் தொடர்பில் இருக்கும் நாடுகள். எனவே, இரு தரப்பினரும் எல்லை நிலைமையைச் சிக்கலாக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.
Also Read: IndiaChinaFaceOff: `எல்லை விரிவாக்கத்தின் வயது முடிந்துவிட்டது’ - பிரதமர் மோடி
மேலும் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய அரசியல் தலைவர்களின் செயலை விமர்சித்துள்ள லிஜியன், “சமீபத்திய நாள்களில் இந்தியாவில் சில அரசியல்வாதிகள் இந்தியா - சீனா உறவுகளுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையில் பொறுப்பற்ற கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். இந்தியா - சீனா உறவுகளைப் பேணுவதற்கு இரு தரப்பிலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை.
நமது இருதரப்பு உறவுகளும் ஒட்டுமொத்த நலன்களை நிலைநிறுத்த வேண்டும். சீனாவின் 59 செயலிகளைத் தடுக்கும் இந்தியாவின் முடிவு உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு முரணானது. இந்தத் தடை இந்தியாவின் சொந்த நலன்களையும் பாதிக்கும்” எனப் பேசியுள்ளார்.
source https://www.vikatan.com/government-and-politics/international/china-comment-about-modis-ladakh-visit
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக