Ad

புதன், 1 ஜூலை, 2020

G4 இன்ஃபுளுயன்ஸா வைரஸ்... கொரோனாவைப்போல் பரவுமா?

லகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவது உலகத்திற்கே பெரும் சவாலாக இருந்துவரும் நிலையில், தற்போது 'G4' என்றொரு புதிய வகை இன்ஃபுளுயென்ஸா வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

virus

2011 முதல் 2018 வரை பன்றிகளின் மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் இருந்து 179 வகையான பன்றிக் காய்ச்சல் வைரஸ்கள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவற்றில் ஆதிக்கம் செலுத்திய புதிய வகை G4 வைரஸ், ஃபெர்ரெட்டுகள் எனப்படும் விலங்கினங்களில் செலுத்தி சோதிக்கப்பட்டபோது, மனிதர்களைப் போன்றே காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் சீனாவில் பன்றிகளிடையே தற்போது பரவிவருவது கண்டறியப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய உயிர்க்கொல்லி வைரஸான H1N1 வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்த வைரஸுக்கு G4 EA H1N1 எனப் பெயரிட்டுள்ளனர்.

மருத்துவர் அரவிந்த ராஜ்

2009-ம் ஆண்டில் தொற்றுநோயை ஏற்படுத்திய H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸின் மரபணுத் தொடரைக் கொண்டுள்ள இந்த வைரஸால் உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்றாலும், வருங்காலத்தில் கொரோனா வைரஸைப் போல இதுவும் மனிதர்களுக்கு மத்தியில் பரவுவதற்கான ஆபத்து அதிகம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இன்ஃபுளுயன்ஸா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இந்தப் புதிய G4 ஃபுளு வைரஸ் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பொது மருத்துவர் அரவிந்த ராஜிடம் கேட்டோம்.

G4 ஃபுளூ வைரஸ்

G4 ஃபுளு வைரஸ்

"ஏதாவது ஒரு புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்படும்போது, அதன் மரபணு ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ள மற்ற வைரஸ் ஏதாவது ஒன்றின் மரபணுத் தொடரோடு குறிப்பிட்ட சதவிகிதம் ஒத்துப்போவது இயல்புதான். அந்த வகையில், தற்போது சீனாவில் கண்டறியப்பட்டுள்ள G4 வைரஸ், ஏற்கெனவே மனிதர்களிடையே தொற்றை ஏற்படுத்திய H1N1 பன்றிக்காய்ச்சல் வைரஸின் மரபணுவுடன் ஏறக்குறைய 10% அளவிற்கு ஒத்துப்போவதாகத் தெரியவந்துள்ளது. இதை மட்டும் வைத்து H1N1 வைரஸ்போலவே G4 வைரஸும் மனிதர்களிடையே பரவி தொற்றை ஏற்படுத்தும் என்று கூறிவிட முடியாது.

G4 வைரஸ் குறித்து முழுமையான ஆராய்ச்சி விளக்கங்கள் வெளியிடப்பட்டால் மட்டுமே அது வீரியமான வைரஸா அல்லது வீரியம் குறைந்த ஒன்றா என்பதைக் கூற முடியும். ஒவ்வொரு வருடமும் சுமார் 6 லட்சம் பேர் இன்ஃபுளூயென்ஸா வைரஸால் உயிரிழப்பதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே ஃபுளூ வைரஸ் என்றாலே ஒருவித பயம் நம்மை தொற்றிக்கொள்கிறது.

Also Read: COVAXIN: இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசி! -மனிதச் சோதனைக்கு ஒப்புதல்

இன்ஃபுளூயென்ஸா வைரஸ்

கொரோனா வைரஸ்

பொதுவாக வைரஸால் ஏற்படும் காய்ச்சலை 'ஃபுளூ' என்று குறிப்பிடுவோம். பனிக்காலம், மழைக்காலத்தில் நமக்கு ஏற்படும் வைரஸ் காய்ச்சலுக்கு 'காமன் ஃபுளு (common flu)' என்று பெயர். பலவகையான வைரஸால் இந்த காமன் ஃபுளூ ஏற்படலாம். கொரோனாவைப் போன்றே இன்ஃபுளூயென்ஸா வைரஸும் காற்றின் மூலம் பரவக்கூடியது. ஃபுளூவினால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும் வெளிப்படும் வைரஸ்கள் காற்றில் பரவியிருக்கும். அந்தக் காற்றை சுவாசிப்பவர்களின் மூக்கு, தொண்டை, நுரையீரலுக்குள் செல்லும் வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்துகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள், ஏற்கெனவே வேறு ஏதேனும் நோயால் பாதிக்கப்பட்டவர்களை இன்ஃபுளுயென்ஸா வைரஸ்கள் எளிதில் தொற்றிக்கொள்ளும். காய்ச்சல், அதீத இருமல், உடல்வலி, மூட்டுவலி, உடல் சோர்வு இவைதான் காமன் ஃபுளுவின் பொதுவான அறிகுறிகள். வைரஸ் உடலுக்குள் சென்ற 4-5 நாள்களிலேயே அறிகுறிகள் தென்பட்டுவிடும்.

Also Read: `பதஞ்சலியின் Coronil-ல் கொரோனா என்ற வார்த்தையே இல்லை!' - தடைக்கான காரணம்

யாரை எளிதில் தாக்கும்?

தடுப்பூசி

* இன்ஃபுளுயென்ஸா வைரஸ் தொற்று யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். குறிப்பாக நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் போன்று ஏற்கெனவே உடல் உபாதைகள் உள்ளவர்களை இது எளிதில் தொற்றிக்கொள்ளும்.

* உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கும், மது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கும் ஃபுளு வைரஸ் தொற்று ஏற்படலாம்.

* சிறு வயதிலிருந்தே முறையாகத் தடுப்பூசி எதுவும் எடுத்துக்கொள்ளாதவர்கள் இன்ஃபுளுயென்ஸா வைரஸால் பாதிக்கப்படலாம்.

Also Read: இந்தியாவில் கொரோனவைவிடக் காசநோய் உயிரிழப்புகளே அதிகம்... ஓர் அலெர்ட்!

தற்காத்துக்கொள்வது எப்படி?

Food

* கொரோனாவைப்போலவே இன்ஃபுளுயென்ஸா வைரஸும் நோயால் பாதிக்கப்பட்டவர் இருமும்போதும், தும்மும்போதும் பிறருக்குப் பரவுவதால் எப்போதும்போல சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

* குழந்தை பிறந்ததிலிருந்து போட வேண்டிய தடுப்பூசிகள் தடையில்லாமல் வழங்கப்பட வேண்டும்.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுப் பொருள்களை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* கொரோனா தொற்று பரவிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் காய்ச்சல், இருமல் ஏற்படும் பட்சத்தில் அலட்சியப்படுத்தாமல் உடனடியாகப் பரிசோதனை மேற்கொண்டு, அதன் முடிவுக்கேற்ப மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார் மருத்துவர் அரவிந்த ராஜ்.



source https://www.vikatan.com/health/healthy/g4-type-new-influenza-virus-found-in-china

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக