Ad

வெள்ளி, 24 ஜூலை, 2020

தஞ்சை: பெரிய இடத்து சம்பந்தம்; சிக்னல் கொடுத்த சசிகலா! - உற்சாகத்தில் தினகரன் குடும்பம்

அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மகளுக்கும் தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சிப் பிரமுகரின் மகன் ஒருவருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டுள்ளது. சிறையிலிருந்தபடியே சசிகலா இந்தத் திருமணத்தை பேசி முடித்திருப்பதாக அவரது உறவுகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தினகரன்

டி.டி.வி தினகரன் மகள் ஜெயஹரிணிக்கும் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் மகன் ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் செய்து வைக்க பெரியோர்களால் பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சசிகலா உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ``தஞ்சாவூரில் பாரம்பர்யமிக்க குடும்பம் என அனைவராலும் அறியப்பட்டது பூண்டி துளசி அய்யா வாண்டையார் குடும்பம். இவர் மகன் கிருஷ்ணசாமி வாண்டையார், காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தற்போது தெற்கு மாவட்டத் தலைவராகவும் உள்ளார்.

கிருஷ்ணசாமி வாண்டையார்

இவருடைய மகன் ராமநாதன் துளசிஅய்யா தற்போது இளைஞர் காங்கிரஸ் கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தினகரன்-அனுராதா மகளான ஜெயஹரிணிக்கும் ராமநாதன் துளசிஅய்யாவுக்கும் திருமணம் செய்வதற்கு பேசி முடிக்கப்பட்டுள்ளது. சசிகலா சிறையிலிருந்தபடியே தன் உறவுகள் மூலம் இந்தத் திருமணத்தை பேசி முடித்திருக்கிறார்.

துளசி அய்யா வாண்டையார் குடும்பத்தின் மீது சசிகலா பெரும் மதிப்பு கொண்டவர். அவர்கள் கல்லூரியான பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்த பலர் இன்றைக்கு தமிழகத்தை தாண்டியும் பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். பெரிய அளவில் கல்வி சேவை புரிந்ததுடன், பாரம்பர்யமிக்க குடும்பம் என்பதால் மாப்பிள்ளை வீட்டார் கேட்ட உடனேயே சசிகலா சம்மதம் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன்

சசிகலா எப்போதும் ஜாதகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர். அந்த வகையில் இருவருக்கும் ஜாதக பொருத்தமும் ஏகபோகமாக இருக்கிறது என்பதால் சசிகலாவுக்கு இரட்டிப்பு சந்தோஷம். இதையடுத்து பாண்டிச்சேரியில் உள்ள தினகரனின் பண்ணை வீட்டுக்கு கிருஷ்ணசாமி வாண்டையார் குடும்பத்தினர் சிலர் சென்றனர். அத்துடன் திருமணம் செய்வதை உறுதி செய்யும்விதமாகப் பெண்ணுக்கு பொட்டு, பூ வைக்கும் நிகழ்ச்சியும் மிக எளிய முறையில் நடைபெற்றது.

அப்போது சித்தி சசிகலா முன்னிலையில்தான் இந்த நல்ல நிகழ்வு நடைபெற வேண்டும். அவர் வரும் வரை காத்திருங்கள். அவர்தான் எல்லாவற்றையும் முடிவு செய்வார் எனத் தினகரன் தரப்பில் கூறியிருக்கின்றனர். மாப்பிள்ளை வீட்டாரும் இப்போது உறுதி மட்டும் செய்துகொள்வோம், மற்றபடி சின்னம்மா வந்த பிறகு நடத்திக் கொள்ளலாம் எனச் சம்மதம் தெரிவித்துவிட்டு வந்துள்ளனர்.

சசிகலா

செப்டம்பர் மாதத்தில் சசிகலா சிறையிலிருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு நிச்சயதார்ததமும், 2021-ம் ஆண்டு தை மாதத்தில் தஞ்சையில் பிரமாண்ட முறையில் சசிகலா தலைமையில் திருமணம் செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.

இரண்டு பெரிய குடும்பங்கள் இணையும்போது அவை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா எனப் போகப்போகத்தான் தெரியும். ஏற்கனவே, டெல்டாவில் சசிகலா குடும்பம் செல்வாக்குமிக்கதாக உள்ள நிலையில் இந்தத் திருமணத்தின் மூலம் மேலும் பலம் பெறும்" என்றனர்.

Also Read: மிஸ்டர் கழுகு: சசிகலா விடுதலை ட்வீட்... ‘ஸ்மைலி’ போட்ட ஓ.பி.எஸ்

சசிகலா காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல தொடர்புடையவர் என்பது அவர் அருகில் இருந்த பலரும் அறிந்ததே. தினகரனும் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் நல்ல நட்பில் இருக்கிறார். இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வர இருக்கும் நிலையில் இரண்டு பெரிய குடும்பங்கள் திருமணத்தின் மூலம் இணைவது கூட்டணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற விவாதமும் மன்னார்குடியில் நடந்துகொண்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/sasikala-gave-clearance-on-dinakaran-daughters-marriage

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக