கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்த காசி என்ற சுஜி மீதான பாலியல் வழக்கில், நாள்தோறும் அதிரடியான தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
பெண்களைக் காதலித்து, அவர்களைத் தவறாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பதும், பணம் கொடுக்காத பெண்களின் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து மிரட்டல் விடுப்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது என்கின்றனர் போலீஸார்.
சென்னை பெண் மருத்துவர் ஒருவருக்கு காசி இதுபோன்று மிரட்டல் விடுத்ததால் அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காசி மற்றும் அவரது நண்பர் டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து, காசி மீது 5 பாலியல் மோசடி வழக்குகள் மற்றும் ஒரு கந்துவட்டி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த வழக்கை சிபிசிஐடி விசாராணை நடத்திவரும் நிலையில், கந்துவட்டி புகாரில் காசிக்கு உதவியதாக அவரது அப்பா தங்கபாண்டியன் கைதுசெய்யப்படுள்ளார். கந்துவட்டிக்குப் பணம் வாங்கியவரின் ஹார்லி டேவிட்சன், பைக்கை காசி பெயருக்கு மாற்றம் செய்ததில் தங்கபாண்டியனின் பங்கு உள்ளதாகவும், காசி வழக்கில் முக்கியத் தடயங்களான ஹார்ட் டிஸ்க், மெமரி கார்டுகளில் இருந்து பல ஆவணங்களை அழித்ததாகவும் தங்கபாண்டியன் மீது குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில், போலீஸார் தங்களை மிரட்டுவதாக காசியின் தங்கை பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார்.
காசியின் தங்கை அன்ன சுதா கூறுகையில், "காசி வழக்கு சம்பந்தமாக என் தந்தை தங்கபாண்டியன் அதிகாரிகளுக்கு பல மனுக்கள் கொடுத்ததால் போலீஸார் பிரச்னை செய்கின்றனர். அப்பாவுக்கு சளி பிரச்னை இருந்ததால், 2 நாட்களாக தனிமையில் வைத்திருந்தோம். நான்கைந்து சிபிசிஐடி போலீஸார் அங்கு வந்து, என் தந்தை தனிமையில் இருப்பது தெரிந்தும் தரதரவென இழுத்துட்டு போனாங்க.
இதனை என் அம்மா எதிர்த்துக் கேட்டதால், அவங்கள தள்ளிவிட்டாங்க. அதுல அவங்க மயக்கமாயிட்டாங்க. அவங்களாகவே கையில் ஒரு செக் கொண்டுவந்து, அதை அறையில வச்சிட்டு, அப்புறம் அப்பாகிட்ட எடுக்கச் சொன்னாங்க. அதுபற்றி கேட்டதுக்கு துப்பாக்கியை தலையில வச்சு மிரட்டி உக்கார வச்சாங்க.
இதுபற்றி வெளியே சொன்னால், சாத்தன்குளம் மாதிரி காசியையும் அப்பாவையும் காலி பண்ணிருவோம்னு சொன்னாங்க. எங்க உயிருக்கு பாதுகாப்பு கிடையாது. எங்க எல்லாரையும் மிரட்டிகிட்டு இருக்கிறாங்க. எங்க அப்பா உயிருக்கு அரசாங்கம் உத்தரவாதம் தரணும். இந்த டார்ச்சரால் நாங்க தற்கொலை செய்யும் நிலைதான் ஏற்படும்" என்றார்.
Also Read: `அரசியல் தொடர்பு.. பாதிக்கப்பட்ட 90 பெண்கள்..!' - சுஜி வழக்கின் விசாரணையால் கொதிக்கும் சி.பி.எம்
காசியின் வீட்டுக்குச் சென்றபோது வி.ஏ.ஓ, ஆர்.ஐ போன்ற வருவாய்த்துறை அதிகாரிகளுடன் சென்றுதான் விசாரணை நடத்தியதாகவும், காசியின் தங்கை கூறுவதில் உண்மை இல்லை எனவும் சிபிசிஐடி போலீஸார் கூறுகின்றனர்.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸ் அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறுகையில், "விசாரணைக்கு, முறைப்படி ஒரு டீமாக காசி வீட்டுக்குப் போனோம். அங்கு யாரும் மயங்கி விழவில்லை. சிபிசிஐடி-க்கு துப்பாக்கியே கிடையாது. குற்றவாளிகளை கோர்ட்டுக்கு அழைத்துச்செல்ல ஆயுதப்படை போலீஸாரை கேட்டு வாங்குவோம். அப்பா மேல உள்ள பாசத்தினால அவர் அப்படிச் சொல்கிறார் என நினைக்கிறோம்.
சும்மா யாரையும் கைதுசெய்ய மாட்டோம். காசியின் தந்தை ஏகப்பட்ட தடையங்களை அழித்திருக்கிறார். எனவே, சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதைத்தான் எடுத்திருக்கிறோம். அவர்கள் வீட்டில் இருந்து எடுத்த லேப்டாப்பில் ஆபாசப் படங்களாக இருந்தன. அங்கு வைத்து ஓப்பன் செய்தபோது, அதைப் பார்த்து அவர்களே ஒருமாதிரியா இருந்தாங்க. எப்படியாவது போலீஸை பிளேம் செய்யலாம் என இப்படிக் கூறியிருக்கலாம்" என்றார்.
source https://www.vikatan.com/news/crime/cbcid-police-condemns-engineer-suji-sisters-charges
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக