,கொரோனா தாக்கம் ஒருபுறம் சாமான்ய மக்களை அச்சுறுத்தி வந்தது. இப்போது, அரசியல்வாதிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டதால், ஆளும் தரப்பினர் கடும் கலக்கத்தில் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 4,343 என்கிற இலக்கத்தை நேற்று எட்டியுள்ளது கொரோனா தாக்கம். அதேபோல், இறப்பு விகிதமும் கடந்த 15 நாட்களாக சராசரியாக 50 என்கிற இலக்கத்தைக் கடந்துசெல்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. தமிழக அரசோ, இதுவரை கொரோனா சமூக தொற்றாக மாறவில்லை என்கிற கருத்தில் உறுதியாக இருந்துவருகிறது.
ஒருபுறம், அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களை கொரோனா தடுப்புப் பணிகளுக்கு முழுவீச்சில் அரசு பயன்படுத்திவருகிறது. மற்றொரு புறம், அமைச்சர்களையும் களத்தில் இறக்கியது. சட்டமன்றத் தொகுதியிலும் அந்தந்தத் தொகுதி உறுப்பினர்கள் கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுவந்தனர். ஆனால், தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கொரோனா பாதித்து மரணம் அடைந்த பிறகு, களத்தில் இறங்கிப் பணியாற்றிவந்த பல அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சம்கொள்ள ஆரம்பித்தனர். அன்பழகனைத் தொடர்ந்து தி.மு.க-வில் அடுத்தடுத்து இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அதேபோல், அ.தி.மு.க-வில் முதலில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னையில் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமைச்சர் அன்பழகனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில், நேற்று ஒரே நாளில் அ.தி.மு.க-வை சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது, அந்த கட்சியினர் மத்தியில் கலகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன், கடந்த இரண்டு மாதமாகவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார். கடந்த வாரம், அவருடன் பயணிக்கும் அ.தி.முக பிரமுகர் ஒருவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. அதனைத் தொடர்ந்து சதன்பிராபகரனுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால், எந்த அறிகுறியும் இல்லாமலே கொரோனா தொற்று இவருக்கு வந்துள்ளது. தற்போது, ராமநாதபுரம் மருத்துவமனையில் அவர் சிகிச்சைபெற்றுவருகிறார்.
Also Read: கொரோனா கொசுவை அடிக்கும் கோடாரி... பலன் அளித்துள்ளதா 100 நாள் ஊரடங்கு?
அதேபோல், உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. முதல்வரின் நெருக்கமான நண்பர் குமரகுரு. இவர், அடிக்கடி சென்னை வந்துசென்றுள்ளார். இவருக்கு தொற்று எப்படி வந்தது என்கிற விசாரணையிலும் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளார்கள். சில மாதங்களுக்கு முன்புதான் உடல்நிலை சரியில்லாமல், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார் குமரகுரு. இப்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதால், முதல்வரும் கவலையடைந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களையும் தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் நலம் விசாரித்துள்ளார். மேலும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் கவனமுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார். சட்டமன்ற உறுப்பினர் என்பதைத் தாண்டி தனது நண்பருக்கு கொரோனா வந்ததில் முதல்வர் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறார்.
ஏற்கெனவே ஐந்து அமைச்சர்களின் உதவியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கொரோனா தொற்று பாதிப்பில் இருக்கிறார்கள். அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனின் ஓட்டுநருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், நடுவழியில் காரை நிறுத்தி இறங்கிவிட்டு, வேறு வாகனத்தில் பயணித்த பரிதாபமும் நடந்துள்ளது. அமைச்சர் பெஞ்சமினுக்கும் கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதனால் ஆளும்கட்சி பிரமுகர்கள் உதவியாளர்கள் மற்றும் கட்சியினரை உடன் அழைத்துச்செல்ல அஞ்சும் நிலை உருவாகிவிட்டது. அமைச்சர்களின் இல்லங்களுக்கு தினமும் கிருமிநாசினி தெளிக்கும் வேலையும் ஜரூராக நடக்கிறது.
அதேபோல், தி.மு.க-வில் 'ஒன்றிணைவோம் வா' திட்டம் ஆரம்பத்தில் வேகமாகச் செயல்பட்டது. ஆனால், அன்பழகன் மறைவுக்குப் பிறகு பலரும் பொதுநிகழ்வுகளில் பங்கேற்பதைத் தவிர்த்துவிட்டனர். தி.மு.க தலைவர் ஸ்டாலினையே அவருடைய மருத்துவர்கள் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தியுள்ளனர்.
அ.தி.மு.க-வில் தற்போது உள்ள அமைச்சர்கள் பலரும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை எடுத்துள்ளார்கள். தங்களது உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளையும் கொரோனா பரிசோதனை முடிந்து ரிசல்ட் வந்தபிறகே பணிக்கு வாருங்கள் என்று அன்புக் கட்டளை போட்டுவருகிறார்களாம்!
source https://www.vikatan.com/government-and-politics/healthy/corona-affects-ruling-party-members-in-tn
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக