Ad

வியாழன், 23 ஜூலை, 2020

சென்னை: `அரிசி என்ன விலை... என்ன ரகம்?' - நடிகர் வடிவேலு பாணியில் நடந்த நூதனத் திருட்டு

சென்னை தரமணியைச் சேர்ந்தவர் சந்திரன். இவர் தரமணி-வேளச்சேரி பிரதான சாலையில் அரிசிக் கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையை கடந்த பிப்ரவரி மாதம்தான் அவர் தொடங்கியுள்ளார். அதன்பிறகு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடையில் சிசிடிவி கேமரா பொருத்தவில்லை. இந்தநிலையில் இவரின் கடைக்கு அரிசி வாங்க வந்த 2 பேர் கடையின் முன்பகுதியிலிருந்த அரிசியின் விலைகளைக் கேட்டுள்ளனர்.

அரிசி கடை

கடையின் உரிமையாளர் சந்திரனும் அரிசியின் விலையை தெரிவித்துள்ளார். கடையின் முன்பகுதியிலிருந்த அரிசிகளை எல்லாம் விசாரித்த அந்த 2 பேர், வேற என்ன விலையில் என்ன வகை அரிசி உள்ளது, நல்ல அரிசியாக வேண்டும். அதனால்தான் கேட்கிறோம் என்று கூறியுள்ளனர். அதற்கு, சந்திரன் கடைக்குள் இன்னும் சில வகை அரிசி உள்ளது என்று கூறியதோடு அதை எடுத்து வந்து காட்டுவதற்காகக் கடைக்குள் சென்றுள்ளார்.

இந்தச் சமயத்தில் வாடிக்கையாளர் போல வந்த 2 பேர், கல்லா பெட்டியிலிருந்த பணத்தை திருடியுள்ளனர். அதன்பிறகு அரிசியை வாங்கிய அந்த 2 பேரும், கடையில் கார்டு போட முடியுமா என்று சந்திரனிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், நீங்கள் பணமாகக் கொடுத்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார். அப்படியென்றால் பணத்தை ஏடிஎம்மில் எடுத்துவருகிறேன் என்று கூறிவிட்டு ஒருவர் சென்றுள்ளார். அவர் சென்று நீண்ட நேரமானதால் கடையிலிருந்த மற்றவரும் சந்திரனிடம் கூறிவிட்டு அவரும் சென்றுவிட்டார்.

Also Read: சாப்பாட்டில் மயக்க மருந்து, சங்கேத பாஷை மெசேஜ், 2 கோடி மதிப்பு... கோவையில் நடந்த நூதன நகைத் திருட்டு!

இதையடுத்து சந்திரன் அடுத்த வாடிக்கையாளருக்காக காத்திருந்தார். அப்போது கல்லா பெட்டியைத் திறந்து பார்த்த சந்திரனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிலிருந்த 75,000 ரூபாய் திருட்டு போயிருந்தது. பல இடங்களில் பணத்தைத் தேடிப் பார்த்த சந்திரனுக்கு அப்போதுதான் கடைக்கு வந்து அரிசி விலையை விசாரித்துவிட்டு அதை வாங்காமல் சென்ற 2 பேர் மீது சந்தேகம் வந்தது.

அதனால் பணம் திருட்டு போனது குறித்து தரமணி காவல் நிலையத்தில் சந்திரன் புகாரளித்துள்ளார். அதன்பேரில் தரமணி போலீஸார் வழக்கு பதிவு செய்து வாடிக்கையாளர் போல நடித்து கடையின் உரிமையாளரின் கவனத்தைத் திசைதிருப்பி பணத்தைத் திருடிய 2 பேரை தேடிவருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சந்திரனின் கடையில் சிசிடிவி கேமரா பொருத்தப்படவில்லை. அதை நோட்டமிட்ட 2 பேர், வாடிக்கையாளர் போல நடித்து பணத்தைத் திருடி சென்றுள்ளனர்.

திருட்டு

Also Read: `3 பெண்களுடன் நட்பு; காதல் பரிசாகத் திருட்டு பைக்குகள்!' - சென்னையில் சிக்கிய இன்ஜினீயர்

இருப்பினும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துவருகிறோம். அதனடிப்படையில் நூதன திருடர்களைத் தேடிவருகிறோம்" என்றனர்.

கருப்புசாமி குத்தகைதாரர் படத்தில் நடிகர் வடிவேல், தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து அரிசி கடையின் உரிமையாளரின் கவனத்தைத் திசைதிருப்பி திருடுவார். அதைப் போல ஒரு நிஜ சம்பவம் சென்னை தரமணியில் நடந்துள்ளது.



source https://www.vikatan.com/news/crime/shocking-theft-happened-in-chennai-rice-shop

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக