Ad

வியாழன், 23 ஜூலை, 2020

தஞ்சை: `சைக்கிள், டீக்கடையைக்கூட விடுவதில்லை!' - இன்ஸ்பெக்டரின் மாமூலால் புலம்பும் வணிகர்கள்

கொரோனா பரவலால் வணிகர்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துவரும் நிலையில், தஞ்சாவூரில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் கட்டாய மாமூல் கேட்கிறார் என வேதனைப்படுகின்றனர் கடை உரிமையாளர்கள்.

கடைகள்

தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் செங்குட்டுவன் என்பவர் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வருகிறார். கொரோனாவால் வணிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அந்தக் காவல் நிலைய பகுதிக்குட்பட்ட கடைகளில் கட்டாய மாமூல் வசூலிப்பதாக கடை உரிமையாளர்கள் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம். ``மேற்கு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெட்டிக்கடை, டீக்கடை, மளிகை, துணிக்கடை என 500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கொரோனாவால் அனைத்து வணிகர்களுக்கும் வியாபாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காகக் கடைகளை நடத்தி வருகிறோம்.

மேற்கு காவல் நிலையம்

கொரோனா பாதிப்புக்கு முன்னதாக நடக்கும் வியாபாரத்தில் பாதியளவுகூட தற்போது நடப்பதில்லை. ஆனால், இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் கடைக்கு ஏற்றாற்போல் 5,000 ரூபாயில் தொடங்கி 15,000 வரை மாமூல் கேட்கிறார். சிலர் நொந்தபடி பணத்தைக் கொடுத்து விடுகின்றனர். போதிய வருமானம் இல்லாததால் பலரால் அவர் கேட்கும் பணத்தைக் கொடுக்க முடிவதில்லை. அப்படிப் பணம் கொடுக்காத கடையை மனதில் வைத்துக்கொண்டு வியாபார நேரத்தில் கூட்டம் நிற்கிறது எனக் கூறி எதாவது ஒரு வகையில் தொல்லைகளைக் கொடுக்கிறார்.

பணம் கொடுக்கவில்லை என்றால் அந்தக் கடையில் வேலை செய்யும் ஊழியர்களை, வாடா போடா எனவும் உரிமையாளர்களை வா போ என ஒருமையிலும் பேசி மரியாதைக் குறைச்சலாக நடத்துவார். எல்லோரிடமும் மிரட்டலாகவே நடந்து கொள்கிறார். தெற்கு வீதியில் உள்ள ஒரு கடையில் 10,000 ரூபாய் மாமூல் கேட்டுள்ளார். அந்தக் கடை உரிமையாளரால் கொடுக்க முடியவில்லை. இதனால் நன்றாக வியாபாரம் நடக்கும் நேரத்தில் கடைக்குமுன் நின்று சத்தம் போட்டார்.

இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன்

இதைப் பற்றி முக்கிய கட்சியின் பிரமுகர் ஒருவரிடமும் அந்தக் கடைக்காரர் கூறியிருக்கிறார். அந்தப் பிரமுகரும் இன்ஸ்பெக்டரிடம் பேசியிருக்கிறார். இதன்பிறகு மீண்டும் அந்தக் கடைக்காரரிடம் பணம் கேட்டுள்ளார்.

Also Read: சாத்தான்குளம்: மகேந்திரன் வழக்கு; விசாரணையைத் தொடங்கிய சி.பி.சி.ஐ.டி! கலக்கத்தில் போலீஸார்

டாஸ்மாக் கடைகளில் 50 பேர் நின்றாலும் கண்டுகொள்ள மாட்டார். ஆனால், ஒரு சின்னக் கடையில் 5 பேர் நின்றாலும் என்ன ஒரே கூட்டமாக இருக்கு... சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க மாட்டீங்களா என சத்தம் போடுவார். எல்லாவற்றிற்கும் மேலான கொடுமை என்னவென்றால், சைக்கிளில் டீ கேன் வைத்து டீ வியாபரம் செய்பவர்கள் ஒவ்வொருவரிடமும் 500 ரூபாய் வாங்கிவிடுகிறார். அதனைக் கொடுக்காதவர்களின் டீ கேனை எடுத்துக் கொண்டு ஸ்டேஷனுக்கு சென்றுவிடுவார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடைகள்

இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் செயலால் ஒவ்வொரு வியாபாரியும் சொல்ல முடியாத வேதனையில் இருக்கின்றனர். இவை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு செல்கிறதா எனவும் தெரியவில்லை. நாங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை. மாவட்ட எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதுடன், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என வேதனைப்பட்டனர்.

வணிகர்களின் குற்றச்சாட்டு குறித்து இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனிடம் பேசினோம். ``நான் சுத்தமான ஆள். எந்தக் கடையிலும் 5 பைசாகூட வாங்கியதில்லை. என்னுடைய போலீஸ் டீமும் கண்ணியமாக நடந்துகொள்கின்றனர். அரசு நல்ல சம்பளம் தருகிறது. என் பணியை சிறப்பாக செய்து வருகிறேன். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத கடைகளில் மக்களின் நலனுக்காகக் கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்வேன் அதனால் என்னை பற்றி தவறாகக் கூறலாம்" என்றதோடு முடித்துக் கொண்டார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/tanjore-police-inspectors-activity-create-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக