Ad

வியாழன், 23 ஜூலை, 2020

``அஜித்தோட அந்தத் திறமைக்கு அவர் வில்லனாதான் நடிக்கணும்... ஏன்னா?!''- பார்த்திபன் தொடர் - 8

''நான் ஒரு தீவிர கமல் ரசிகன். அவரின் படைப்புகளை திரும்பத்திரும்ப விரும்புவது போல் உங்களின் படைப்புகளையும் பார்ப்பேன், படிப்பேன், ரசிப்பேன். உங்களை கறுப்பு கமலாகவே நினைப்பதாலும் நீங்களும் அவரோடு பல விஷயங்களில் ஒத்துப் போவதாலும் இந்தக் கேள்வி. வாழ்க்கைத் துணை இல்லாத வெற்றிடத்தை எப்படி நிரப்புகிறீர்கள்?''

- நசீர் மொஹமது, சேலம்.

''கமல் சாரையும் என்னையும் இணைக்கிற நிறைய இணைப்புப்பாலங்கள் இருக்கு. ஆனா, நீங்க புத்திசாலித்தனமான ஒரு கேள்வி கேட்குறீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் வாழ்க்கையே ஒரு துணைதான். ஒரு வழித்துணைதான். இந்த வாழ்க்கை என்னன்னு புரிஞ்சிக்கிறதுக்கே ஒரு வாழ்க்கை, ஒரு வாழ்நாள் தேவைப்படுது. இந்த வாழ்க்கையோட நமக்கு ஏற்படுற புரிதல், அது மேல நாம கொள்ற காதல், அதை எப்படி கையாளுறோம்ன்றதெல்லாம் புரிஞ்சிக்கவே முடியாதது. நாம ஒரு விதமா நினைக்கும்போது வாழ்க்கை வேற விதமா நினைக்கும். அதோட போக்குல போக முடியாம ஊடல் ஏற்படுத்தும். வாழ்க்கையோட வாழ்க்கை நடத்துறதே கஷ்டம்தான். 'நான் வாழ்க்கையை முழுசா புரிஞ்சிக்கிட்டேன்னு நினைச்சிட்டிருந்தேன். ஆனா, நடுவயசு ஆகும்போதுதான் தெரிஞ்சது நான் வாழ்க்கையை பாதிதான் புரிஞ்சிட்டிருக்கேன்னு. அப்புறம் வயசான பிறகுதான் தெரிஞ்சது நான் வாழ்க்கையை புரிஞ்சிக்கவேயில்லைன்னு. இனிமேலாவது வாழ்க்கையை புரிஞ்சிக்கணும்னு தோணுது'னு சாக்ரடீஸ் சொல்லியிருப்பார்.

வாழ்க்கைத்துணைக்குன்னு ஒரு உருவத்தைக் கொடுக்குறோம். அது நண்பனா இருக்கலாம். அழகான மனைவியா இருக்கலாம். அழகான மனைவின்னா அந்த ஸ்தானம். அதுக்குப் பின்னாடி இருக்கிற தியாகம். அதுதான் அழகான மனைவின்னு சொல்றேன். அதன்பிறகு மகனாவோ, மகளாவோகூட மாறலாம். எல்லாமே போய் கடைசியா கைத்தடியாவும் இருக்கலாம். நான் அதை வெற்றிடமாவே பார்க்கல. நம்ம வாழ்க்கைக்குள்ள சில பேர் வர்றாங்க. சில பேர் போறாங்க. பூமி மாதிரியேதான், வாழ்க்கையிலயும் யாருமே இங்க நிரந்தரமாத் தங்குறதில்ல. என்னோட அப்பா இறக்கும்போது, அவரை ஆம்புலன்ஸ்ல எடுத்துட்டுப் போகும்போது நான் 'இனிமேல் உயிரோடவே இருக்க மாட்டேன்'னு நினைச்சேன். எனக்கு அவரை அவ்ளோ பிடிக்கும். அவர் போனதுக்கு அப்புறம் நான் எப்படி இருப்பேன், இனிமேல் வாழ்க்கையே இல்லையேன்னு நினைச்சேன். அப்புறம் கடைசி காரியங்கள்லாம் முடிஞ்சா, பசி எடுக்குது சாப்பிடுறேன். அழுகை குறையுது. விசும்பல் அதிகமாகுது. அப்புறம் விசும்பலும் குறையுது. எம் மேலயே எனக்கு கோபம் வருது. இவ்ளோதானா நீ அவர் மேல வெச்சிருந்த அன்புனு தோணுது. அவர் கூடவே போயிடணும்னு சொன்னியேன்னு என்னையே நான் கேட்டுக்குறேன். நிறைய உறவுகள் நம்ம வாழ்க்கையில வந்துட்டு வந்துட்டு கடந்து போயிட்டே இருக்கு.

கமல்ஹாசன்

என்னோட மகனையோ, மகளையோ கொஞ்சம்கூட பிரியறதுக்கு என்னால முடியவே முடியாதுனு நினைச்சிருக்கேன். இப்போ பார்த்தீங்கன்னா ரெண்டு மகளுக்கும் திருமணமாகிடுச்சு. ரெண்டு பேரும் அவங்கவங்க வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்காங்க. தினந்தோறும் நான் அவங்களை சந்திக்கிறதில்ல. ஒரு மணி நேரம் கூட பிரியமாட்டோம்னு நினைச்சவங்களை எப்போவாவது, வாரத்துக்கு ஒருமுறைன்னு பார்க்குற மாதிரி மாறிடுச்சு. அவங்களுக்கு வாழ்க்கைத்துணை வந்துடுச்சு. நமக்குத்துணையா இருந்த விஷயங்கள் மிஸ் ஆகுது. என்னைப் பொறுத்தவரை வெற்றியின் இடத்தில் என்னுடைய வெற்றிடத்தை நிரப்புகிறேன். நண்பர் ஒருவர் பேசும்போது சொன்ன விஷயம், 'நீங்க 15 படம் பண்ணியிருக்கீங்க. எங்கிருந்தும் காப்பிடியக்கல, எல்லாமே ஒரிஜினல்'னு சொன்னார். அதைத்தான் நான் வெற்றியா நினைக்கிறேன். நமக்கு எல்லோருக்குமே வழிநெடுக வரப்போற துணை நாம மட்டும்தான். நமக்குள்ள இருக்கிற எண்ணங்களை, நல்ல விஷயங்களைப் பாதுகாத்துட்டு வரணும்னு தோணுது. இப்ப என்னோட வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுதான் உண்மை.''

''நீங்கள் முதல்முதலாக எழுதிய காதல் (கிறுக்கல்) கவிதை ஞாபகம் இருக்கிறதா சார்?''

தன்ராஜ்.ஆர், சென்னை

''முதல்ல அதை கவிதைன்னு சொல்லவே பெருந்தன்மை வேணும். எனக்கு அந்தப் பெருந்தன்மை நிறையவே இருக்கு. பாக்யராஜ் சார்கிட்ட சேர்ந்த புதுசுல நான் ரெண்டு கவிதைகளை எழுதி அவர்கிட்ட நீட்டினேன். 'நான் எவ்ளோ பெரிய டேலன்ட்டடான ஆள் பாருங்க சார்'னு காட்டிக்கிறதுக்காக கொடுத்தேன். அவரும் அதை வாங்கிப் பார்த்து சிரிச்சிட்டு, அவர் பக்கத்துலயே இருந்த பேடை எடுத்து கிடுகிடுனு நாலு கவிதைகளை எழுதி என்கிட்ட நீட்டினார். 'எனக்கும் கவிதை எழுதத் தெரியும். கவிதைன்றது ஒரு போதை. இதுக்குள்ள நீ போயிட்டனா மீண்டு வர்றது ரொம்ப கஷ்டம். நீ டைரக்ஷன் கத்துக்குறதுக்காக வந்திருக்க. முதல்ல அந்த வேலையை ஒழுங்காப்பாரு. அதுக்கு அப்புறம் கவிதைலாம் எழதலாம்'னு சொன்னார். அதோட கவிதை எழுதறதையே விட்டுட்டேன். கிட்டத்தட்ட 10 வருஷம் கழிச்சு 2000-லதான் என் முதல் புத்தகம் வந்தது. அதில் நான் எழுதின முதல் கவிதையும் சேர்த்திருந்தேன்.

பார்த்திபன்
'திருப்பதிக்கு மொட்டைப்போட வேண்டுதல். பஸ்ஸில் ஏறி டிக்கெட் வாங்கப் பர்ஸைத்தேடினேன். யாரோ உள்ளூரிலேய என் வேண்டுதலை முடித்துவிட்டார்கள்.'

இப்படி எழுத ஆரம்பிச்சவன்தான் நான். நல்ல கவிதைகள் படிக்கும்போதுலாம் என்னால நல்ல கவிதைகள் எழுத முடியாதான்னு ஆதங்கப்பட்டிருக்கேன். இப்பதான் மெதுவா மெதுவாதான் கத்துக்கிட்டிருக்கேன். இதுல மெதுவான்றது ஒரு மெதுவாதான் கடந்திருக்கேன்... அதை கடக்குறதையே கவிதையாத்தான் கடக்குறதா நான் நம்புறேன்.''

''என்னைப் பொறுத்தவரை நான் பார்த்த மிகவும் ரொமான்டிக் ஆன காட்சிகளில் ஒன்று சுஹாசினி அவர்களின் 'பெண்' தொலைக்காட்சித் தொடரில் வந்த உங்கள் தியாகு கதாபாத்திரம். கணவனும் மனைவியும் பாரதியார் கவிதை படிக்கும் காட்சி. அது ஓர் அழகிய கவிதை. அந்த எபிசோடில் நடித்தது பற்றி எதேனும் பகிர்ந்துகொள்ள முடியுமா?''

- லலிதா, சென்னை

பார்த்திபன்

''முதல்ல லலிதா அவர்களுக்கு நன்றி. என்னோட ஞாபகத்துக்குள்ள 'பெண்' என்ற சீரியலைக் கொண்டுவந்ததற்கு. படங்களை எவ்ளோ ரசிச்சு பண்ணேனோ அதே மாதிரி பண்ண தொடர் அது. உண்மையிலேயே ஒரு அழகான கவிதை மாதிரியிருக்கும். அப்போ 'புதிய பாதை' வந்த பரபரப்புல நான் இருக்கேன். ஹாசினி போன் பண்ணி இப்படி ஒரு விஷயம் கேட்குறாங்க. நான் அவங்ககிட்ட மிகப்பெரிய சம்பளம் கேட்குறேன். அந்த சம்பளம் என்னென்னா மணிரத்னம் அவர்கள் இந்த சீரியலை டைரக்ட் பண்ணா நான் ஃபீரியா நடிக்கிறேன் என்பதுதான். நான் இது நடக்காதுன்னு நினைச்சேன். பார்த்தா, மணி சார் ஒத்துக்கிட்டார்னு சொன்னாங்க. நானும் மணி சார் இயக்கத்துல படம் பண்ணியிருக்கேன்றதுல அலாதியான சந்தோஷம். ஒரு படிப்பினையா இருந்தது. அமைதியான, சலனமேயில்லாமல் நீரோடையைப்போல அவரோட பார்வையும், கையாளுதலும் இருந்தது. இப்பக்கூட ஞாபகம் இருக்கு. ஈஸி சேர்ல நான் உட்கார்ந்திருப்பேன், என் கால் மாட்ல என் மனைவியா நடிச்சிருந்த சுஹாசினி அவர்கள் உட்கார்ந்திருப்பாங்க. பாரதியாரோட ஒரு கவிதையை படிப்பேன். படிச்சவுடனே நிமிர்ந்து பார்ப்பாங்க. 'சந்தோஷமா இருக்கா'னு கேட்பேன். 'செத்துடலாம்போல இருக்கு'ன்னு சொல்லுவாங்க. அப்பதான் கத்துக்கிட்டேன் அந்த டயலாக்கை. சந்தோஷத்தோட உச்சம் செத்துடறதான்னு தோணுச்சு. அதெல்லாமே அழகழகான கவிதைகளா இருந்தது. ரொம்ப பொயட்டிக்கா இருந்தது.''

'' 'ஆடுகளம்' பேட்டைக்காரன் கேரக்டரில் உங்களைத்தான் முதலில் நடிக்க வைப்பதாக இருந்தேன். ஆனால், நீங்கள் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்காக மிகத் தீவிரமாக இருந்ததால் அது முடியாமல் போனது' என்று வெற்றிமாறன் கூறியிருந்தார். அந்த பேட்டைக்காரன் கேரக்டரில் நடித்த கவிஞருக்கு தேசிய விருது கிடைத்தது. அதை எப்படி பார்க்கிறீர்கள்? எப்போது வெற்றிமாறன் - பார்த்திபன் கூட்டணி அமையும்?''

- யுவராசு, கரூர்

ஆடுகளம்

''ஆடுகளம் படத்தின் அந்தக் கேரக்டருக்காக வெற்றிமாறன் வந்து சொன்னார். அந்த நேரத்துல 'ஆயிரத்தில் ஒருவன்' படம் நடந்துட்டு இருந்தது ஒரு முக்கியமான விஷயம். ஆனா, இன்னொரு விஷயமும் இருக்கு. வெற்றிமாறன் பெருந்தன்மையோட அதை வெளில சொல்லலைன்னு நினைக்கிறேன். அது என்னென்னா மிஸ்டர் தனுஷ்கூட சேர்ந்து நான் ஒரு படம் பண்றதுக்காக ஒரு கதை ரெடி பண்ணி வெச்சிருந்தேன். அந்தக் கதை இன்னும் அப்படியே இருக்கு. எப்பவாவது பண்ணலாம்கிற நம்பிக்கையும் இருக்கு. அந்தக் கதையை பார்க் ஷெரட்டன்ல வெச்சு மிஸ்டர் தனுஷ்கிட்ட சொன்னேன். அவர் கதை நல்லாயிருக்குன்னு சொன்னார். ஆனா, என்னவோ காரணம் அது நடக்கல.

தனுஷோட ஏதாவது ஒரு படம் பண்ணணும். 'ஒண்ணு என்னோட படம் பண்ணணும், இல்லைன்னா இந்தப் படம்'னு நான் யோசிக்கும்போது வெற்றிமாறன் அவர்கள்கிட்டப்போய் 'நான் என்படத்தை பண்ணணும்னு ஆசைப்படுறேன் சார்'னு நேர்லபோய் சொல்லிட்டு வந்தேன். அவர் நல்லா புரிஞ்சிக்கிட்டு, 'சரி, பரவாயில்லைங்க'ன்னு சொன்னார். 'ஆடுகளம்' படத்துல நடிச்ச நண்பருக்கு தேசிய விருது கிடைச்சது மகிழ்ச்சியான விஷயம். நான் நடிச்சிருந்தா அது எனக்கு மூணாவது தேசியவிருதா கூட இருந்திருக்கும். ஆனா, அதுக்குப் பிறகு மிஸ்டர் வெற்றிமாறன் இயக்கத்துல 'சூதாடி'னு ஒருபடம். தனுஷும் நானும் நடிக்கிறதா இருந்த படம். 5 - 6 நாள் படப்பிடிப்பு நடந்தது. என்னோட கேரக்டரை மட்டும் ஷூட் பண்ணிட்டே இருந்தார். அவரோட வொர்க் பண்ணது ரொம்ப சந்தோஷமா இருந்தது. அடிக்கடி கூப்பிட்டு அந்தக் காட்சிகளைப் போட்டுக்காட்டி, 'எவ்ளோ அழகா இருக்குப்பாருங்க'ன்னு சொல்லுவார். சமீபத்துல அவரை சந்திக்கும்போதுகூட அந்தப் படம் என்னாச்சுன்னு கேட்பேன். இல்லை என் காட்சிகளைத் தர முடியுமான்னு கேட்டிருக்கேன். 'யோசிச்சி சொல்றேன்'னு சொல்லியிருக்கார். நிச்சயம் திரும்ப ஒண்ணு சேருவோம். அவரோட நட்பு தொடர்ந்துகிட்டுதான் இருக்கு.''

''அண்ணா, நீங்க அஜித்சார் கூட இரண்டு படங்கள் நடித்து இருக்கும் வேலையில் மீண்டும் நடிக்க ஆசைப்படுகிறேன். ஏன் என்றால் எனக்கு உங்கள் இருவரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுவும் நீங்கள் 'தல'க்கு வில்லனாக நடித்தால் அருமையான படமாக இருக்கும்.

- ஆசைப்படுவது உங்கள் தம்பி ராஜபாளையம் கருப்பசாமி...''

அஜித்

''தம்பி கருப்பசாமி எப்படியிருக்கீங்க? அஜித் சாரோட இணைஞ்சி பணிபுரியறது ரொம்ப அலாதியான, மகிழ்ச்சியான விஷயம். ரொம்ப ஆரம்பகாலத்துல எனக்கு ஏற்பட்ட அனுபவம். 'நீ வருவாய் என', 'உன்னைக்கொடு என்னைத் தருவேன்'னு ரெண்டு படத்துல அவர்கூட நான் நடிச்சிருக்கேன். மறுபடியும் சேர்ந்து பணிபுரியலாம். அவருக்கு வில்லனா நடிக்கலாம். நான் ஏன் வில்லனாக நடிக்கணும், அவரேகூட வில்லனா நடிக்கலாம். உடனே நான் ஹீரோவா நடிச்சு, அதுல அவர் வில்லனா நடிக்கணுமானுலாம் யோசிக்காதீங்க. அதைப்பத்தி நான் பேசல.

ஒருத்தர் ஹீரோவா நடிக்கிறதுக்குப் பின்னாடி பெரிய ஸ்கிரிப்ட் இருக்கு. நிறைய வேலைபாடுகள் இருக்கு. அதை கதாசிரியர் செய்யணும், டைரக்டர் செய்யணும், ஸ்டன்ட் மாஸ்டர், டான்ஸ் மாஸ்டர்னு எல்லோரும் சேர்ந்து செய்யணும். அவர் நடக்கும்போது புழுதி கிளப்பிவிடணும்னு பொதுவா ஒரு ஹீரோவாவுக்கு இவ்ளோ பில்ட்அப் பண்ணணும். ஆனா, ஒரு வில்லனா நடிக்கிறதுக்கு முக்கியமான விஷயம் நடிக்கணும். நடிக்கத்தெரியணும். அதனாலதான் மிஸ்டர் அஜித்துக்கு வில்லனாக்கூட நடிக்கலாம். அவரின் அபரிவிதமான நடிப்பு அப்படி. 'வாலி'ன்ற படத்துல நிறைய வித்தியாசம் பண்ணியிருந்தார். அப்படியே 'வில்லன்'. இதுல அப்படியே வேற ஒரு பரிமாணம்.

இப்ப 'ஜோக்கர்' மாதிரி ஒரு படத்துல அஜித் நடிக்கிறார்னு வெச்சிக்கோங்க. எப்படியிருக்கும்? பின்னிப்பெடல் எடுத்துடுவார். அப்படியான ஒரு பர்ஃபாமன்ஸ் இருக்கும். ஜோக்கரை நீங்க ஹீரோன்னு சொல்லுவீங்களா, வில்லன்னு சொல்லுவீங்களா. அத்தனை கொலைகள் பண்ணிட்டு நடந்துபோகும்போது அவ்ளோ விசில் கேட்கும். அந்த மாதிரி ஒரு ரோல் அஜித் பண்ணார்னா தியேட்டர்ல பட்டையைக் கிளப்பும். அதனாலதான் மிஸ்டர் அஜித் ஹீரோவா மட்டுமல்லாம, வில்லனாவும் நடிக்கக்கூடிய அபரிவிதமான திறமை படைத்தவர். அவர் படத்துல நான் வில்லனா நடிக்கலாம். அவர் ஹீரோவா நடிக்கும்போது அவர் வில்லனாவும் நடிக்கலாம்னு சொல்றேன். அஜித் ஒரு சகலகலாவல்லவர். நம்மகிட்ட இருக்கிற அபரிவிதமான நடிகர்.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Also Read: குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/parthiban-talks-about-ajith-acting-skills-q-and-a-series

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக