Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2020

சென்னையில் கண்துடைப்பு டாஸ்மாக் மூடலும், கள்ள விற்பனையும்! - ஜூ.வி. ஆக்‌ஷன்

ஊரடங்கு காரணமாக மது விற்பனைக்குத் தடா போட்டுவிட்டது அரசு. ஆனால், குடிமகன்களை குஷிப்படுத்த சென்னையில் பல இடங்களில் திருட்டுத்தனமாக விற்பனை படு ஜோராக நடந்து கொண்டுதானிருக்கிறது. அப்படி ஓர் இடம் பற்றிய தகவல் ஜூனியர் விகடன் க்ரைம் டீமுக்கு வர ஸ்பாட்டுக்கு விசிட் அடித்தோம். ஜூன் 25-ம் தேதி சம்பவ இடத்தில் ரகசிய கேமரா சகிதம் நாம் ஸ்டிங் ஆபரேஷனில் இறங்கினோம்.

Alapakkam

சென்னையை அடுத்த மதுரவாயல் பைபாஸ் அருகே... ஆலப்பாக்கம் ஏரிக்கரை ரோடு போரூரில் போய் முடிகிறது. பிஸியான ரோடு. ஆனால், கொரோனா ஊரடங்கு இருப்பதால், தற்போது வெறிச்சோடி இருக்கிறது. பூந்தமல்லி ரோட்டில் இருந்து பிரிந்தால், முனையில் உயரமான கட்டடங்கள் இருக்கும். அதன் உச்சியில் இருந்தபடி ரோட்டில் வருவோர் போவோரை சில ஆசாமிகள் கண்காணிக்கிறார்கள். அருகில் உள்ள மருத்துவமனை, பெட்ரோல் பங்க். இங்கெல்லாம் அவர்கள் கண்கொத்திப் பாம்பு போல போவோர் வருவோரைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள். சிறிது தூரத்தில் போலீஸ் ரோந்து வண்டி. யாராவது வாலாட்டினால் நாலு சாத்து சாத்தி அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். `ரௌடிகள்... அவர்களுக்கு ஆதரவாக போலீஸார், உள்ளூர் அரசியல்புள்ளிகள் ஆதரவு வேறு இருக்கிறது’ என்கிற பீடிகையை நம்மிடம் போட்ட குடிமகன் ஒருவர், சரக்கு வாங்க ரூட் சொன்னார்...

கொஞ்சம் தூரத்தில் அரசு மதுபானக் கடை. மேலே தளபதி ஒயின்ஸ் என்ற பெயர் - பழைய விசுவாசத்துடன் தெரிந்தது. அதற்கு கொஞ்சம் தள்ளி சைடு ரோட்டில் இருக்கும் பார் ஒன்றின் பின்பக்கம் ரகசியமாகப் போனால், தேவைப்படும் மதுபானம் கூடுதல் விலைக்குக் கிடைக்கும். அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை மது விற்பனை நடக்கிறது. ஆனால், புதியவர்களை ஸ்கேன் செய்துதான் மது வாங்க சந்துக்குள் அனுப்புவார்கள் என்றார்கள்.

டாஸ்மாக்

நம்மிடம் உள்ளே நுழையும்போதே இரண்டு நபர்கள் ``என்ன சரக்கு?” என்று விசாரிக்கிறார்கள். ஒரு முறையான குடிமகனாகச் சட்டென்று பல பிராண்டுகளின் பெயர்களை நாம் சொல்லவில்லை என்றால் நமக்கு தடாதான். நாம் சொன்னதும் ``வாங்கிட்டுப் போய்டணும்... இங்க நின்னு அடிச்சா போலீஸ் பிடிச்சுக்கும்” என்றார்கள். ``திருட்டுத்தனமா விக்கறவங்களையா...” என்று கேட்க, ``அவங்களை ஏன் பிடிக்குது? அதெல்லாம் முறையா மாமூலோடத்தான் நடக்குது. உங்களைத்தான் பிடிச்சுட்டுப் போவாங்க. பேசாம உள்ளே நடங்க” என்று மிரட்டி அனுப்பினார்கள்.

உள்ளே போகிற வழியில் ஆங்காங்கே சிந்திச் சிதறி கிடக்கும் பாட்டில்களும் பாக்கெட்களும் மது விற்பனை கனஜோராக நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தியது. நடக்க நடக்க பல கண்கள் நம்மை சந்தேகப் பார்வை பார்த்தன. ஒரு சின்னத் தடுப்பு வைத்து, டிக்கெட் கவுன்டர் போன்ற திறப்பு. உள்ளே டேபிளில் என்னென்ன மதுவகைகள் இருக்கின்றன என்று சாம்பிளுக்கு வைத்திருந்தார்கள். நாம் சர்வ சாதாரணமாக வாங்கி வர முடிந்தது. சில போலீஸ் அதிகாரிகளிடம் இது குறித்துப் பேச, இதெல்லாம் சர்வ சாதாரணம் என்ற தொனியில் பதில்கள் வந்தன. ஜூன் 29-ம் தேதியன்று விகடன் யூடியூப் சேனலில் ``போலீஸ் ஒத்துழைப்போடு நடக்கும் டாஸ்மாக் கொள்ளை... பிளாக் மார்க்கெட் ராஜ்ஜியம்” என்கிற தலைப்பில் நாம் மது வாங்கிய சம்பவத்தை வெளியிட்டோம்.

அதன் பிறகு, பேருக்கு அங்கு மது விற்ற நபர்களில் இருவரை போலீஸார் பிடித்துப்போய், வழக்கு போட்டதாகத் தகவல் கிடைத்தது. ஜூன் 4-ம் தேதியன்று ஃபாலோ அப்புக்காக அதே இடத்துக்கு மீண்டும் சென்றோம். இந்த முறை பார் பின்புறம் நடக்கவில்லை. அதை மூடியிருந்தார்கள். ஆனால், சந்து நுழைவாயிலில் கனஜோராக மது விற்பனை நடந்துகொண்டிருந்தது. நாம் அன்று கடையில் பார்த்த அதே இருவர், ஒரு தள்ளுவண்டியில் படுத்துக்கொண்டு கேட்ட மதுவை, தள்ளுவண்டியில் கீழ் சாக்கு மூட்டையில் இருந்து எடுத்துக் கொடுத்தார்கள். விலை இரண்டு, மூன்று மடங்கு கூடுதலாகப் பெற்றுக்கொண்டார்கள்.

Also Read: மக்களிடம் மது வாங்க மட்டும் எங்கிருந்து வருகிறது கோடிகள்? - கணக்கும் அரசியலும் - ஓர் அலசல்!

நேற்று (ஜூலை 5) நடந்ததை நம் சோர்ஸ் ஒருவரிடம் கவலையோடு பகிர்ந்துகொள்ள அவர் இன்னொரு முகவரி சொன்னார். சென்னை சென்ட்ரல் அருகேயுள்ள பாடிகாட் முனீஸ்வரன் கோயில் அருகே குறிப்பிட்ட ஏரியாவில் சின்னக் குழந்தையிடம் கேட்டால் கூட வழிகாட்டுகிறார்கள். மது, பவுடர் எல்லாம் கிடைக்கும். மது கொஞ்சம் ஈஸி. பவுடர் வேண்டுமென்றால் அவர்களின் முந்தைய கஸ்டமர் ஒருவரை அழைத்துவர வேண்டுமாம். நிறைய இளம் வயதினர் அலைபாயும் கண்களுடன் அங்கே சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்க்க வேதனையாக இருந்தது.

Tasmac Black Market

கொரோனா நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் விதமாக மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள சென்னை பெருநகர காவல் எல்லையில் 900 டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படவில்லை. இது அரசு சொல்லும் கணக்கு. ஆனால், குடிமகன்களைக் கேட்டால், சுமார் ஒரு லட்சம் நடமாடும் சரக்கு விற்கும் இடங்கள் சென்னையிலுள்ள மதுபானக் கடைகள் சுற்று வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஒவ்வொரு மதுபான சரக்கின் ஒரிஜினல் விலையை விட, ரூ.500 வரை கூடுதல் விலைக்கு விற்கிறார்கள். அவை அசலா டூப்ளிகேட், சரக்கா என்பது இன்னொரு பகீர். ஆனால், அரசு முத்திரை உள்ள சரக்கு பாட்டில்கள்தாம் விற்கப்படுகின்றன. இதெல்லாம் போலீஸ், ரௌடிகள், உள்ளூர் அரசியல் புள்ளிகள் என அனைத்து அதிகார மையங்களுக்கும் நன்றாகவே தெரியும். சென்னையில் கடந்த 100 நாள்களாக நடந்து வரும் இந்த சட்டவிரோத மது பாட்டில் விற்பனை மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சமூக விரோதிகளின் பாக்கெட்டுகளுக்குப் போகின்றன.

Also Read: E Pass: களத்தில் இறங்கிய ஜூனியர் விகடன்; சிக்கிய போலி E Pass கும்பல்! #VikatanExclusive

மதுவிலக்குப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை போனில் அழைத்து ஆலப்பாக்கம் ரோட்டில் நடக்கும் கூத்துக்களை சொன்னோம். விசாரித்துவிட்டு மீண்டும் லைனில் வந்தவர், ``ஏரியா போலீஸ் ஏ.சி-ட்ட சொன்னேன். மத்தியானம் கூட ரோந்து போனாராமே. சரக்கு விற்பனை ஏதும் இல்லைன்னாறே?” என்றார்.

``சார்.. இப்ப சரக்கு வாங்கிட்டிருக்கோம். வேணும்னா.. சரக்கு போட்டோவை அனுப்பட்டுமா? '' என்று கேட்டதும், அதிர்ந்துபோய்விட்டார். எதிர்முனையில், சிறிது நேரம் மௌனம். நடவடிக்கை எடுப்பதாகச் சொன்னார்.

கடைசியாக, சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் பேசினோம். விஷயங்களை பொறுமையாகக் கேட்டுக்கொண்டவர் ``நான் இப்பத்தான் புதுசா வந்திருக்கிறேன். அந்த லோகேஷனை உடனே அனுப்புங்க'' என்றார். நம் எடுத்த வீடியோ பதிவுகளை அவருக்கு உடனே அனுப்பி வைத்தோம்.

இந்தக் கண்துடைப்பு டாஸ்மாக் மூடலும், கள்ளத்தன விற்பனையும் கொரோனாவைவிட அதிகமாக சென்னையைச் சீரழித்துக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.



source https://www.vikatan.com/government-and-politics/crime/vikatan-sting-operation-reveals-illegal-liquor-sales-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக