Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2020

‘இ-பாஸ் விதிமுறைகளைக் கடுமையாக்கிய கேரளம்’ - தவிக்கும் தேனி ஏலக்காய் விவசாயிகள்!

Also Read: `இ-பாஸ் தானே... பணத்த கொடுங்க, வாங்கித் தர்றேன்!’ -தேனியில் சிக்கிய கார் உரிமையாளர்

தேனி மாவட்டம் கம்பம், போடி பகுதிகளைச் சேர்ந்த ஏலக்காய் விவசாயிகள், தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய் தோட்டங்களை சொந்தமாக வைத்துள்ளனர். சிலர், குத்தகைக்கு எடுத்து ஏலக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக மாநில எல்லைகள் மூடப்பட்டதால், ஏலக்காய் விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்குச் செல்ல முடியாத நிலை உருவானது. பராமரிப்புப் பணிகள் ஏதும் செய்ய முடியாததால், ஏலக்காய் செடிகள் பாதிக்க தொடங்கின.

கேரள இ-பாஸ்

இந்த நிலையில், இடுக்கி, தேனி மாவட்ட நிர்வாகத்தின் பேச்சுவார்த்தையில் ஒரு நாள், ஆறு நாள்கள், ஒரு வருடம் என அளவில் இ-பாஸ் வழங்க இடுக்கி மாவட்ட நிர்வாகம் முன்வந்தது. இதில், இடுக்கி மாவட்டம் புத்தடியில் நடக்கும் ஏலக்காய் ஏலத்துக்குச் செல்லும் வியாபாரிகளுக்கு ஒரு நாள் பாஸ் பயனுள்ளதாகவே அமைந்தது. விவசாயிகள் தங்களது ஏலக்காய் தோட்டங்களுக்குச் செல்லவும் ஒரு நாள் இ-பாஸ் முறையைப் பயன்படுத்தினர். கடந்த சில வாரங்களாக இந்த முறை பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது இதில் சில மாற்றங்களைச் செய்துள்ளது இடுக்கி மாவட்ட நிர்வாகம்.

மாற்றங்கள் குறித்து ஏலக்காய் விவசாயிகள் கூறுகையில், “ஒரு நாள் இ-பாஸ் பெற்று, வாரத்தில் ஒரு நாள் எங்களது தோட்டங்களுக்குச் சென்று வந்தோம். ஆனால், ஒரு நாள் இ-பாஸ், ஏலக்காய் ஏலத்துக்குச் செல்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும், இனி தோட்டங்களுக்குச் செல்பவர்களுக்குக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்துவிட்டார்கள். அதேபோல, தோட்டத்துக்குச் சென்றால், 14 நாள்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குப் பிறகுதான் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறுகின்றனர். இந்தப் புதிய கட்டுப்பாடுகள் எங்கள் பணியை பாதிக்கும்” என்றனர்.

Also Read: `ஷார்ட் விசிட் பாஸ்; பலகட்ட ஆய்வுகள்!’ - எல்லைக் கட்டுப்பாடுகளில் அசத்தும் கேரளம்

இது தொடர்பாக கேரள அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, “தேனி மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துவருவதால், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் தொற்று பரவிவிடக் கூடாது என்பதற்காகத் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்கின்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/theni-cardamom-farmers-seek-relaxation-in-kerala-e-pass-system

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக