Ad

ஞாயிறு, 5 ஜூலை, 2020

உ.பி போலீஸ் கொலைகள்: 25 தனிப்படைகள்; 48 மணிநேரத்தில் 100 ரெய்டுகள்! - திணறும் காவல்துறை

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூர் பகுதியில் உள்ள பிக்ரூ என்ற கிராமத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விகாஸ் தூபே என்ற பிரபல ரவுடி, தன்னைக் கைதுசெய்ய வந்த காவலர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்தத் தாக்குதலில், காவல்துறையைச் சேர்ந்த 8 காவலர்கள் உயிரிழந்தனர். இதனிடையே, தூபே உள்ளிட்ட ரவுடிகள் அப்பகுதியிலிருந்து தப்பித்து ஓடினர். இதையடுத்து, காவல்துறையினர் சிறப்பு தனிப்படைகளை அமைத்து, விகாஸ் தூபேவை தீவிரமாகத் தேடி வருகின்றனர். தூபே குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.

உ.பி காவலர்கள்

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய அன்றிலிருந்து காவலர்கள், தூபேவை பல்வேறு வழிகளில் தேடிவருகின்றனர். எனினும், தூபேவைக் கைதுசெய்ய முடியவில்லை எனக் காவலர்கள் தெரிவிக்கின்றனர். நேபாளம் உள்ளிட்ட பிற மாநிலங்களின் எல்லைக்கு அருகே, அதிகாரிகள் குழு தேடுதல் வேட்டை நடத்திவருகிறது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் 25 தனிப்படைகள் சோதனைகளை மேற்கொண்டுள்ளன. கொலை மற்றும் கொலை முயற்சி உட்பட சுமார் 60 வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் தூபே பற்றிய தகவல்களை அளிப்பவர்களுக்கான பரிசுத் தொகையை 50,000 ரூபாயில் இருந்து 1 லட்ச ரூபாயாக உயர்த்தி உ.பி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தற்போது, தூபே பதுங்கியிருக்கும் இடம் குறித்த தகவல்களை அறிய சுமார் 500-க்கும் மேற்பட்ட மொபைல்களைக் கண்காணிக்கவும் தனிக்குழு ஒன்றை அதிகாரிகள் அமைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read: உ.பி: `போலீஸ் துப்பாக்கியால் கொல்லப்பட்ட 8 காவலர்கள்!’ - பிரேதப் பரிசோதனை அதிர்ச்சி

இரவும் பகலுமாக அதிகாரிகள் கடுமையாகத் தேடிய பிறகும் தூபேவை அதிகாரிகளால் பிடிக்க முடியாத நிலை உள்ளது. தூபே நீதிமன்றங்களில் சரணடைய வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் இதுதொடர்பான உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில், விகாஸ் தூபேயின் வீட்டில் அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். பின்னர், அந்த வீட்டை இடித்துத் தரைமட்டமாக்கினர். இந்த வழக்கில் காவல்துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுவதால், உயர் அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்துவருவதாகக் கூறப்படுகிறது. விகாஸ் தூபேயின் கிராமம் அடங்கிய சவுபேபூர் சரகத்தில் உள்ள காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவரும் இந்தச் சம்பவம் தொடர்பாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விகாஸ் தூபேயின் அம்மாவும் அப்பாவும் தங்கள் மகனுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கடுமையான தண்டனைகளை அவனுக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

உ.பி காவலர்கள்

விகாஸ் தூபே மீதான குற்ற வழக்குகள் 1990-லிருந்து தொடங்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை முயற்சி, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற பல குற்றங்களில் அவர் தொடர்ந்து ஈடுபடுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 2001-ம் ஆண்டு, பா.ஜ.க-வைச் சேர்ந்த தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளியாகத் தூபே கருதப்பட்டார். 2002-ம் ஆண்டு, தானாக காவல் நிலையத்தில் சரணடைந்து பின்னர் விடுதலையானார். அரசியல் தொடர்புடைய குற்றவாளியாக வலம்வந்த தூபே, பிரபல அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினராக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகவும் கொடூரமான குற்றவாளியாக தூபே அக்கிராமத்தில் இருந்துவந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தூபேவின் தலைமறைவு, அதிகாரிகளின் தீவிரமான தேடும் பணி மற்றும் காவல்துறையினர் மீதான சந்தேகம் ஆகியவை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உ.பி கொடூரம்:`என் மகனைக் கொன்றுவிடுங்கள்!’ - காவலர்களை சுட்டுக்கொன்ற ரவுடியின் தாய்



source https://www.vikatan.com/news/crime/25-police-teams-searching-the-criminal-vikas-dubey-for-last-48-hours

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக