Ad

செவ்வாய், 14 ஜூலை, 2020

மதுரை: `பசுமாட்டைப் பிரிந்து தவித்த காளை!' - சொந்த செலவில் கோயிலுக்கு வழங்கிய ஓ.பி.எஸ் மகன்

மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்தவர் முனியாண்டி. பசுமாடு ஒன்றை வளர்ந்துவந்த இவர், கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் ஏதும் இன்றி, வாடிபட்டியைச் சேர்ந்த நபருக்கு தனது பசுமாட்டை விற்றுள்ளார். கடந்த காலங்களில் அதே பகுதியைச் சேர்ந்த மஞ்சமலை கோயில் காளை, முனியாண்டியின் பசுமாட்டுடன் பழகி வந்துள்ளது. தினமும் முனியாண்டி வீட்டிற்கு வருவதும், பசுமாட்டோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதும், தண்ணீர் குடிப்பதுமாக இருந்துள்ளது.

கோயில் காளை என்பதால் முனியாண்டியும் காளையை எதுவும் செய்யாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று, தனது பசுமாட்டை, சரக்கு வண்டியில் ஏற்றி வாடிப்பட்டிக்கு அனுப்ப முனியாண்டி முயற்சி செய்ய, அதைக் கோயில் காளை தடுத்தது. இத்தனை நாள்களாகத் தன்னுடன் பழகிய பசுமாட்டை பிரிய மனம் இல்லாமல், வண்டியை நகர்த்தக்கூட விடாமல் டிரைவரையும் முட்ட முயன்றது.

வண்டியை மறித்த கோயில் காளை

சுமார் ஒரு மணி நேரம் சென்ற பின்னர், சாமர்த்தியமாகச் செயல்பட்டு டிரைவர் வண்டியை எடுக்க, அப்போதும், பசுமாட்டை பிரிய முடியாமல் தவித்த காளை, வண்டியின் பின்னால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிவந்துள்ளது. ஒருகட்டத்தில் ஓட முடியாமல் மூச்சுவாங்கி நின்றது. இச்செய்தி ஊடகங்களில் வெளியாகி மதுரை மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Also Read: மதுரை: பசுமாட்டைப் பிரிந்த சோகம்! -1 கி.மீ ஓடிவந்த பாசக்கார காளை

இந்நிலையில், இச்செய்தியை அறிந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப், உடனடியாக வாடிப்பட்டியில் உள்ள தன் நண்பர்களைத் தொடர்புகொண்டு, விற்கப்பட்ட முனியாண்டியின் பசுமாட்டை தனது சொந்த செலவில் வாங்கினார். தொடர்ந்து, மாட்டைப் பிடித்துக்கொண்டு நேராகப் பாலமேடு வந்தார். சோழவந்தான் எம்.எல்.ஏ மாணிக்கம் உடன் இருக்க, மஞ்சமலை கோயில் கமிட்டியினரை அழைத்துப் பேசிய ஜெயபிரதீப், பசுமாட்டை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

Also Read: மதுரை: `என் குடும்பத்தில் இருப்பவங்களா நினைக்கிறேன்!’ - டீ விற்று உதவும் ஆதரவற்ற இளைஞர்

பத்திரிகையாளர்களிடம் பேசிய ஜெயபிரதீப், ``பசுமாட்டைப் பிரிய மனம் இல்லாமல் காளை மாடு வண்டியின் பின்னால் ஓடிவந்தது அனைவரது மனதையும் உருகச் செய்தது. இச்செய்தி துணைமுதல்வர் கவனத்துக்குச் செல்ல, அவரது உத்தரவின்படி, பசுமாட்டை மீட்டு, கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளோம்” என்றார்.



source https://www.vikatan.com/news/tamilnadu/jayapradeep-bought-the-cow-and-donated-to-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக