Ad

சனி, 4 ஜூலை, 2020

சாத்தான்குளம்: `ஸ்டேஷனில் வைக்கப்பட்ட குடும்பத்தினர்' -முத்துராஜ் சிக்கியது எப்படி?

தந்தை, மகன் உயிரிழந்த சாத்தான்குளம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகியோரை கடந்த 1-ம் தேதி எஸ்.பி அலுவலகத்துக்கு விசாரணைக்காக வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. 1-ம் தேதி சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, தீவிரமாகத் தேடிவந்தது மாவட்ட போலீஸாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே முதலில் உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் கைது செய்யப்பட்ட தகவல் கசிய ஆரம்பித்ததும், மற்ற இருவரும் எஸ்.பி அலுவலகத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

சாத்தான்குளம் காவல் நிலையம்

இதையடுத்து உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அன்றிரவிலும், ஆய்வாளர் ஸ்ரீதர் 2-ம் தேதி காலையிலும் கைது செய்யப்பட்டனர். இந்த விஷயமறிந்த தலைமைக்காவலர் முருகன், முத்துராஜ் ஆகியோர் தலைமறைவாகினர். அவர்களைப் பிடிக்க மூன்று சி.பி.சி.ஐ.டி எஸ்.ஐக்கள் தலைமையிலான குழுவினர் இருவரின் செல்போன் டவரை வைத்து கண்டுபிடித்தனர். அதில், அவர்களது இரண்டு பேரின் செல்போன் டவரும் புதியம்புத்தூர் அருகிலுள்ள நடுவக்குறிச்சி கிராமத்தின் டவரைக் காட்டியுள்ளது.

இதையடுத்து தட்டாப்பாறைக் காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு தலைமைக்காவலர் ஒரே பைக்கில் சென்ற அவர்கள் இருவரையும் மடக்க முயன்றார். ஆனால், அந்த தலைமைக்காவலரை இருவரும் தள்ளிவிட்டுத் தப்பியோடி விட்டனர். இதில், தலைமைக்காவலர் முருகன் மட்டும் சில மணி நேரத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால், முத்துராஜின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகியதால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர், ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

காவலர் முத்துராஜ்

இதற்கிடையில், காவலர் முத்துராஜின் சொந்த ஊரான வேப்பலோடை அருகிலுள்ள ஆவாரங்காடு கிராமத்துக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸார் குழு முத்துராஜைத் தேடிச் சென்றனர். அங்கு முத்துராஜ் இல்லாததால், முத்துராஜின் மனைவி மற்றும் நெருங்கிய உறவினர் இரண்டு பேரை அழைத்துச் சென்று குளத்தூர் காவல்நிலையத்தில் வைத்தனர். இதைக்கேள்விப்பட்டு ஊர் மக்கள் திரண்டதால் உடனே அவர்கள் விடுவிக்கப்பட்டனர். விளாத்திகுளத்தில் மனைவிவழி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சமடைந்த முத்துராஜுக்கு இந்த விவகாரம் தெரிந்ததும், சரணடைய முடிவு செய்தாராம்.

இந்த நிலையில், காவலர் முத்துராஜ் அப்ரூவராக மாறியதாகவும், சி.பி.சி.ஐ.டி போலீஸார் தனி இடத்தில் வைத்து விசாரணை செய்வதாகவும் தகவல்கள் பரவின. ஆனால், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி சங்கர் இதை மறுத்தார். இன்னும் ஒரு நாளுக்குள் முத்துராஜை கைது செய்துவிடுவோம் எனவும் சொன்னார். இதற்கிடையில், நேற்றிரவு விளாத்திகுளம் அருகே பூசனூரில் உறவினருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது விளாத்திகுளம் டி.எஸ்.பி பீர்முகைதீன் தலைமையிலான குழு மடக்கிப்பிடித்து சி.பி.சி.ஐ.டி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி அலுவலகம்

பசுவந்தனை அருகிலுள்ள மேலமங்கலம் காட்டுப் பகுதியில் மறைவாக நிறுத்தப்பட்டிருந்த முத்துராஜின் பைக்கும் மீட்கப்பட்டது. சாத்தான்குளம் வழக்கில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் குற்ற வழக்கு பதிவு செய்த ஐந்து பேரையும் பிடித்து சிறையில் அடைத்துள்ள நிலையில், அவர்களை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில், இவர்களுடன் சாத்தான்குளத்தில் தந்தை, மகனை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்ட நான்கு 'ஃபிரெண்ட்ஸ் ஆப் போலீஸாரை'யும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் தேடி வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/policemen-muthuraj-arrested-in-sathankulam-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக