Ad

சனி, 4 ஜூலை, 2020

சாத்தான்குளம் விவகாரம்: தி.மு.க, காங்கிரஸிடமிருந்து ஏன் விலகி நிற்கிறது வி.சி.க?!

சாத்தான் குளம் சம்பவத்தில், `சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்றும் `சி.பி.ஐ விசாரணையை ரத்து செய்யவேண்டும்' என்றும் இருவேறு கருத்துகள் தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடையே நிலவி வருகின்றன. இந்நிலையில், மாறுபட்ட இந்த நிலைப்பாடுகளைக் குறிவைத்து, கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கான காய் நகர்த்தல்களும் ஆரம்பித்திருக்கின்றன.

சாத்தான்குளத்தில், தந்தை - மகன் இருவரும் காவல்நிலைய விசாரணையின்போது கொடூரமாகத் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர் என்ற செய்தி நாட்டையே உலுக்கியெடுத்து வருகிறது. இந்த விவகாரத்தின் ஆரம்பத்தில், `குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியை தமிழக அரசு எடுத்துவருவதால், தமிழகக் காவல்துறை இவ்வழக்கை விசாரித்தால் நீதி கிடைக்காது. எனவே, சி.பி.ஐ (மத்தியப் புலனாய்வு துறை) விசாரணை வேண்டும்' என்று குரல் கொடுத்தன தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.

பென்னிக்ஸ் - ஜெயராஜ்

இந்தநிலையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளையே தானாக முன்வந்து சாத்தான்குளம் வழக்கை எடுத்து விசாரித்தது. அடுத்தடுத்த விசாரணைகளில் நீதிமன்றம் தீவிரம் காட்டிவரவே, திடீரென தமிழக அரசு, `வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றுகிறோம்' என்று வெளிப்படையாக அறிவித்தது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளுங்கட்சி தானாக முன்வந்து ஏற்றது எதிர்க்கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, நீதிமன்றக் கண்காணிப்பில் தற்போது நடைபெற்று வரும் சி.பி.சி.ஐ.டி விசாரணையில், குற்றவாளிகள் மீது கொலை முயற்சி வழக்கு பதியப்பட்டு, சம்பந்தப்பட்ட காவலர்கள் 5 பேர் அதிரடியாகக் கைதும் செய்யப்பட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்தப் போக்கு எதிர்க்கட்சிகளிடையே மனமாற்றத்தை ஏற்படுத்திவருகிறது.

இதையடுத்து, `சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் அவருடைய மகன் பென்னிக்ஸ் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை, 3 மாதங்களில் நடத்தி முடித்து குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும். எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றும் உத்தரவை தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவரும் வி.சி.க-வின் இந்த முடிவு கூட்டணிக் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது, கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தி.மு.க மற்றும் அடுத்த நிலையில் உள்ள காங்கிரஸ் என இரு கட்சிகளுமே, இந்த விவகாரத்தில், `சி.பி.ஐ விசாரணைதான் வேண்டும்' என்று கேட்டுக்கொண்டிருந்த சூழலில், கூட்டணியிலுள்ள வி.சி.க அதற்கு நேர்மாறான நிலைப்பாடு எடுத்திருப்பதுதான் சர்ச்சைகளுக்கான காரணம். இதையடுத்து `கூட்டணிக்குள் குழப்பம், தி.மு.க, காங்கிரஸ் கட்சிகள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுவிட்டன' என்றெல்லாம் செய்திகள் றெக்கை கட்டுகின்றன.

சாத்தான்குளம் விவகாரம் - சி.பி.ஐ விசாரணை ரத்து கோரி வி.சி.க ஆர்ப்பாட்டம்

தி.மு.க செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவனிடம் இவ்விவகாரம் குறித்துப் பேசினோம்...

``சாத்தான்குளம் படுகொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யார் என்பது எல்லோருக்குமே தெரியும். பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது, காவல்துறையைச் சேர்ந்த பெண் அதிகாரி மற்றும் மாஜிஸ்திரேட்டும் சொல்லியிருக்கிறார்கள். ஆக, குற்றவாளிகள் யாரென்று தெரிந்தாலும்கூட வழக்கை முறையாக விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் வேலையை மாநில அரசுதான் செய்துமுடிக்க வேண்டும்.

ஆனால், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்பது ஆரம்பத்திலேயே தவறாக இருந்தது. அதாவது, `ஜெயராஜும் பென்னிக்ஸும் உடல்நலம் சரியில்லாமல்தான் இறந்துபோனார்கள்' என்று முதல் அமைச்சர் சொன்னார். அடுத்ததாக, வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இருவரை பணியிடமாற்றம் செய்கிறார். அடுத்தகட்டமாக பணியிடை நீக்கம் செய்கிறார். `குற்றம் செய்தவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுங்கள்' என்று நாங்கள் சொல்லிக்கொண்டிருக்க, தமிழக அரசோ குற்றவாளிகளைக் காப்பாற்றுகிற முயற்சியை செய்துகொண்டிருந்தது. எனவேதான் ஆட்சியாளர்கள் இந்த வழக்கில் சரிவர செயல்படமாட்டார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நாங்கள், `சி.பி.ஐ விசாரணை வேண்டும்' எனக் கேட்டோம்.

Also Read: சாத்தான்குளம்:`எதிர்காலத்தை நினைத்து பயப்படுகிறேன்' - கதறிய எஸ்ஐ பாலகிருஷ்ணன்

ஆக, மாநில அரசு சரிவர விசாரணையைத் தொடராதோ என்ற அச்சத்தில்தான் எதிர்க்கட்சிகள் சி.பி.ஐ விசாரணையைக் கேட்கின்றன. ஆனால், மாநில அரசே, `சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று கேட்பதில் எந்தவித நியாயமும் இல்லை. இன்னும் வேடிக்கை என்னவென்றால், `சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று தமிழக டி.ஜி.பி-யே கேட்கிறார். அப்படியென்றால், என்ன அர்த்தம்? `தமிழ்நாடு காவல்துறை அந்தளவுக்குக் கெட்டுப்போயிருக்கிறது. தங்களால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாது' என்கிறாரா? `நாங்களே தண்டனை வாங்கித்தருவோம்' என்றல்லவா டி.ஜி.பி சொல்லவேண்டும்.

குற்றவாளிகள் யாரென்பது ஆட்சியாளர்களுக்கும் தெரியும் என்கிறபோது, விசாரணையை சரிவர நடத்தி தண்டனைதானே பெற்றுத்தர வேண்டும். ஆனால், அப்படிச் செய்யாமல், அவர்களே `சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று கேட்டால், அது குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்கவா அல்லது வழக்கைத் காலதாமதப்படுத்துவதற்காகவா? இதற்கிடையே, காவல்துறையைக் கையில் வைத்திருக்கிற ஓர் ஆளுங்கட்சி தன்னால் இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்ற இயலாமையில்தான் `சி.பி.ஐ விசாரணையைக் கோருகிறதா...' என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.

டிகே.எஸ் இளங்கோவன்

எந்தவொரு மாநிலமும், தானே முன்வந்து சி.பி.ஐ விசாரணை கோருவது இல்லை. மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, `எங்களிடம் காவல்துறை இருக்கிறபோது, சி.பி.ஐ தலையீடு கூடாது' என்று போராட்டமே நடத்தியிருக்கிறார். மாநிலங்களுக்கிடையே நடைபெற்ற ஒரு குற்ற வழக்கு என்றால், அதில் சி.பி.ஐ விசாரணை உதவியை மாநில அரசு கேட்பது உண்டு. ஆனால், யார் குற்றவாளி என்பது வெளிப்படையாகத் தெரிந்துவிட்ட இந்த வழக்கிலும்கூட, `சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்று தமிழக அரசு கேட்பதால்தான், `குற்றவாளிகளைக் காப்பாற்றுவதற்காகத்தான் இப்படியொரு முயற்சியை செய்கிறார்களோ' என்ற சந்தேகம் எழுகிறது. அதாவது நாங்கள் கேட்டதையே தங்களுக்கு சாதகமாக அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள்.

மாஜிஸ்திரேட்டை ஒரு காவலர் அவமரியாதையாகப் பேசுகிறார், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவங்களையெல்லாம் சொல்லிவிட்டார் என்ற காரணத்துக்காகவே ஒரு பெண் காவலருக்கு மிரட்டல் வருகிறது, அதைத்தொடர்ந்து அந்தப் பெண் போலீசுக்கு பாதுகாப்பு தரப்படுகிறது. இதையெல்லாம் தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. `இவர்கள் குற்றவாளிகள்தான்; கட்டாயம் இவர்களுக்குத் தண்டனை வாங்கித் தருவோம்' என்றுகூட இந்த அரசு இதுவரை சொல்லவில்லை.

குற்றம் நடந்திருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை. வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைக் கைது செய்யவும் இல்லை. பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தையடுத்தே, வேறு வழியில்லாமல், இதையெல்லாம் செய்துவிட்டு இப்போது நாங்கள் `சி.பி.ஐ விசாரணைக்கும் அனுப்புகிறோம்' என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இவையெல்லாம் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதி.

தற்போது நீதிமன்றக் கண்காணிப்பின்படி சி.பி.சி.ஐ.டி விசாரணை நடந்துவருகிறது. மறுபடியும் இதில் ஏதேனும் தவறு நிகழ்ந்தால் நிச்சயம் சி.பி.ஐ விசாரணைக்குத்தான் போகவேண்டும்'' என்றார் தெளிவாக.

இதையடுத்து, சாத்தான்குளம் விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகளிலிருந்து மாறுபட்டு, முடிவெடுத்ததன் பின்னணி என்னவென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசுவிடம் கேட்டோம்....

வன்னி அரசு

``சி.பி.ஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை என்பது தனிப்பட்ட சுயாதீன அமைப்பு என்று சொல்லப்படுகிறது. ஆனாலும்கூட அதுவும் மத்திய அரசின் கீழ்தான் வருகிறது என்கிறபோது சார்புநிலையோடுதான் அந்த அமைப்பும் செயல்பட்டு வருகிறது. இது ஒருபுறம் இருந்தாலும்கூட, `சி.பி.ஐ விசாரணை வேண்டாம்' என்று வி.சி.க கோரிக்கை வைத்ததற்குக் காரணம்... சி.பி.ஐ-யின் கடந்தகால பின்னணியாகத்தான் இருக்கிறது. அதாவது, சி.பி.ஐ விசாரணைக்குச் சென்ற பல வழக்குகளும் மெல்ல மெல்ல நீர்த்துப்போய்விட்டன என்பதுதான் நடைமுறை எதார்த்தமாக இருக்கிறது.

உதாரணமாக, வழக்கறிஞர் சங்கரசுப்புவின் மகன், பல வருடங்களுக்கு முன்பே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கை சி.பி.ஐ-தான் விசாரித்து வருகிறது. அந்தப் படுகொலையில் காவல்துறையும் சம்பந்தப்பட்டிருக்கிறது என்று பலரும் வெளிப்படையாகவே பேசிவருகிறார்கள். `காவல்துறைக்கு எதிராக நான் வழக்கு தொடுத்து வருவதால்தான், என் மகனைப் படுகொலை செய்துவிட்டனர்' என்று வழக்கறிஞர் சங்கரசுப்புவே காவல்துறைமீதுதான் சந்தேகப்படுகிறார். ஆண்டுகள் பல கடந்தும்கூட அந்த வழக்கில் இப்போதுவரை குற்றவாளிகள் யார் என்றே கண்டுபிடிக்கப்படவில்லை. ஆக, காவல்துறையைப் பாதுகாக்கும் அமைப்பாகத்தான் சி.பி.ஐ செயல்பட்டு வருகிறது.

திருச்சியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை வழக்கையும் சி.பி.ஐ-தான் விசாரிக்கிறது. அந்த வழக்கில் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்களும் காவலர்களும் சம்பந்தப்பட்டிருப்பதாக செய்திகள்தான் வெளிவருகின்றனவே தவிர, ஆண்டுகள் பல கடந்தும்கூட குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை சி.பி.ஐ.

கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது அப்பாவி பொதுமக்கள் 13 பேரை காவல்துறைதான் துப்பாக்கிச்சூடு நடத்தி கொன்று குவித்தது. அந்த வழக்கையும் சி.பி.ஐ-தான் விசாரித்து வருகிறது. 2 ஆண்டுகளைக் கடந்தும் இதுவரையில் யார் ஒருவர் மீதும் எஃப்.ஐ.ஆர் போடப்படவில்லை. அதேசமயம், கலெக்டர் ஆபிஸில் புகுந்தனர், கலவரம் செய்தனர் என்றெல்லாம் விதம்விதமாக 20 எஃப்.ஐ.ஆர் வரையிலும் பொதுமக்கள் மீது போடப்பட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

குட்கா ஊழல் வழக்கையும் சி.பி.ஐ-தான் விசாரிக்கிறது. இதுவரையிலும் யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. சி.பி.ஐ விசாரணைக்கு எடுத்துக்கொண்ட எந்தவொரு வழக்கிலும் குறுகிய காலத்தில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்திருக்கிறது என்ற நிலையே இருந்ததில்லை. பொதுமக்களுக்கு எதிராக, காவல்துறையினரே சம்பந்தப்பட்ட இதுபோன்ற வழக்குகளில், சி.பி.ஐ-யின் கடந்தகால வரலாறு என்பது இப்படியாகத்தான் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல... இந்தியா முழுமைக்குமான சி.பி.ஐ-யின் வரலாறு இதுதான்.

முதல் தகவல் அறிக்கைக்கூட பதிய முடியாத அளவில்தான் சி.பி.ஐ-யின் செயல்பாடு இருக்கிறது என்றால், இது ஆளுங்கட்சியின் பாதுகாவலாக இருக்கிறது என்பதுதானே உண்மை. இப்படியொரு சூழலில்தான், தற்போது சாத்தான்குளம் வழக்கை உயர் நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்துவருகிறது. எனவே நாங்களும் இந்த வழக்கு விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து, சி.பி.ஐ விசாரணை வேண்டாம் என்கிறோம். இதுவும்கூட, நீதிமன்றக் கண்காணிப்பின்படி நடந்துவருவதால்தான் இப்படியொரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம். ஏனெனில், சி.பி.சி.ஐ.டி மட்டுமே தன்னிச்சையாக இந்த வழக்கை விசாரித்துவந்தால், இந்தளவுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்தான்.

Also Read: ``தாமதமாகக் கருத்து சொல்வதுதான் ரஜினி ஸ்டைல்!'' - சாத்தான்குளம் விவகாரம் பற்றி கராத்தே தியாகராஜன்

இதுவே, சி.பி.ஐ இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டால், இதுவரையிலும் விசாரணையையே ஆரம்பித்திருக்க மாட்டார்கள். மாநில அரசும்கூட, `சி.பி.ஐ எங்கள் அதிகாரத்துக்கு உட்பட்ட அமைப்பு கிடையாது' என்று சொல்லிக்கொண்டு ஒதுங்கிக்கொள்வார்கள். காவல்துறையினரைப் பாதுகாப்பதாகவேதான் கடந்தகால சி.பி.ஐ செயல்பாடுகள் இருப்பதன் அடிப்படையில்தான் `சி.பி.ஐ விசாரணை வேண்டாம்' என்கிறோம்.

சாத்தான்குளத்தில் இப்படியொரு படுகொலை நடந்திருக்கிறது, காவல்துறையே இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் அறிந்ததும் உடனே, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள், `இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மைகள் வெளிவரும்' என்று கோரிக்கை வைத்தன. அதன்பிறகு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தானாகவே முன்வந்து வழக்கை விசாரித்ததும், நீதிமன்றக் கண்காணிப்பின் கீழேயே சி.பி.சி.ஐ.டி விசாரணை முறையாக நடந்துவருகிறது என்பதாலும் அவர்களுமே இப்போது இதை ஆதரிப்பார்கள்.

மாறாக, இந்த சி.பி.சி.ஐ.டி விசாரணையும் சரிவர நடைபெறவில்லை என்றால், நாங்களுமே அடுத்த முயற்சியாக, `சி.பி.ஐ விசாரணை'தான் கோரப்போகிறோம்'' என்றார் தடாலடியாக.

கோபண்ணா

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை விவரிக்கும் அக்கட்சியின் ஊடகப் பிரிவுத் தலைவர் கோபண்ணா, ``சி.பி.ஐ விசாரணைதான் வேண்டும் என்று முதன்முதலில் கோரிக்கை வைத்தது காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிதான். ஆனால், சி.பி.ஐ விசாரணை ஆரம்பிக்கப்படும்வரை இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்பேரில் சி.பி.சி.ஐ.டி விசாரணை ஆரம்பிக்கப்பட்டு, அது நல்லதொரு திசையிலும் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த விசாரணையில் நமக்கு நல்லதொரு நம்பிக்கையை அளிக்கக்கூடிய அளவிலான அறிகுறிகள் தென்படுவதற்கான காரணம், நீதியரசர்கள் மேற்கொண்டுள்ள முயற்சி. இவர்கள் கொடுத்த ஊக்கத்தினால்தான் தலைமைக் காவலர் ரேவதி, துணிச்சலாகச் செயல்பட்டார், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார். இவையெல்லாமும் சேர்ந்து தற்போது வழக்கும் நல்லதொரு நிலையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. ஒருகட்டத்தில், சி.பி.ஐ விசாரணை வந்தது என்றால், அப்போது சி.பி.சி.ஐ.டி-யின் விசாரணை அனைத்தும் அப்படியே சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்படும். எனவே, `சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்ற கோரிக்கையிலிருந்து நாங்கள் எப்போதும் பின்வாங்கப்போவதில்லை.

நீதிமன்றக் கண்காணிப்பினால்தான் தற்போதுமே வழக்கு சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறதே தவிர, ஏற்கெனவே சி.பி.சி.ஐ.டி மேற்கொண்ட வழக்கு விசாரணைகளில், நமக்கு நியாயமே கிடைக்கவில்லை. எனவே, மத்திய புலனாய்வு அமைப்பு இந்த வழக்கு விசாரணையை ஏற்றுக்கொள்கிற வரையில், நீதிமன்றக் கண்காணிப்பில் சி.பி.சி.ஐ.டி உரிய முறையில் விசாரணை நடத்தவேண்டும். சி.பி.ஐ ஏற்றுக்கொண்ட பிறகு, வழக்கில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை அவர்கள் பெற்றுத்தர வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு. மற்றபடி, 'சி.பி.ஐ விசாரணை வேண்டும்' என்ற எங்கள் கோரிக்கையை வாபஸ் பெற்றுவிட்டோம் என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்கிறார் உறுதியாக.



source https://www.vikatan.com/government-and-politics/news/dmk-congress-and-vck-clarifies-their-position-on-cbi-enquiry-for-sathankulam-incident

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக