இந்தியாவில் சிறுவர்கள், இளைஞர்கள் எனப் பலரிடையேயும் மிகவும் பிரபலமான விளையாட்டு பப்ஜி. இந்த விளையாட்டு பலரையும் அடிமையாக்கி வைத்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் பப்ஜி விளையாட்டின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தொடர்ந்து பப்ஜி விளையாடுவதால் ஏற்பட்ட உடல் மற்றும் மன அளவிலான பிரச்னைகள், பப்ஜி விளையாட்டு தொடர்பாக உயிரிழப்பு வரை நடந்த வன்முறை சம்பவங்கள் எனப் பல செய்திகள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், தற்போது பப்ஜிக்காக பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்த சுமார் ரூ.16 லட்சத்தை 17 வயது சிறுவன் செலவிட்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கரார் எனும் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் தனது தாயின் ஸ்மார்ட்போனில் தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். விளையாட்டின் அடுத்தகட்ட வெற்றிகளைப் பெற புதிய தரவிறக்கங்கள் செய்யவும் செயலியை அப்டேட் செய்யவும் தனது பெற்றோர் சேமித்து வைத்திருந்த வங்கிக்கணக்கு பணத்திலிருந்து கிட்டத்தட்ட ரூ 16 லட்சத்தைச் செலவு செய்துள்ளார். அதிகமான நேரம் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடம் பெற்றோர் கேட்டதற்குப் படித்துக்கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார். தனக்கான செயலிகளை வாங்குவது மற்றும் அப்டேட் செய்வது போன்ற செயல்களில் பணத்தைச் செலவழித்தது மட்டுமல்லாது தன்னுடன் விளையாடும் மற்ற நபர்கள் பப்ஜியில் அடுத்த கட்டம் செல்வதற்கும் தனது பெற்றோரின் பணத்தை அச்சிறுவன் செலவழித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: பொயட்டு தனுஷ் அப்டேட்ஸ், துல்கரின் பப்ஜி அடிக்ஷன், பூனைக்குட்டி ரைஸா! சோஷியல் மீடியா ரவுண்ட் அப்
சிறுவனின் பெற்றோர் வங்கிக்கணக்கை சோதனை செய்தபோது ரூபாய் 16 லட்சத்தை பப்ஜிக்குச் செலவிட்ட விஷயம் தெரியவந்துள்ளது. வங்கிக்கணக்கைப் பயன்படுத்திய பிறகு வரும் மெசேஜ்களையும் அந்த சிறுவன் உடனே அழித்துவிடுவதால் பெற்றோருக்கு இதுதொடர்பான விஷயங்கள் தெரியாமல் இருந்துள்ளன. சிறுவனின் தந்தை, சிறுவனின் எதிர்காலம் மற்றும் மருத்துவச் செலவுகளுக்காகப் பணத்தைச் சேமித்து வைத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். அவர் அரசாங்கப் பணியிலிருந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எளிதில் பெற்றோரிடம் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக மற்றொரு வங்கிக் கணக்குக்கு மாற்றி பணத்தை அச்சிறுவன் செலவழித்ததாகவும் கூறப்படுகிறது.
பணத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற முயற்சியில் சிறுவனின் பெற்றோர் காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர். ஆனால், சிறுவன் தெரிந்தே விளையாட்டுக்காகப் பணத்தை செலவழித்ததால் அதை மீட்க முடியாது என்று கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்தை அடுத்து சிறுவனின் தந்தை, அவனை வாகனங்கள் பழுதுபார்க்கும் கடை ஒன்றில் வேலைக்கு அனுப்பியுள்ளார். ``நான் அவனை வீட்டில் இனி எந்த வேலையும் இல்லாமல் உட்கார வைக்க முடியாது. படிப்பதற்காகக்கூட இனி அவனுக்கு மொபைல் கிடையாது” என்று சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனாவில் இந்தச் செயலிக்கு அதிகமான நபர்கள் அடிமையாகி இருப்பதால் பப்ஜியின் மீது அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன. இதைத் தடை செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து பல குரல்கள் ஒலித்தவண்ணம் உள்ளன.
Also Read: மணிக்கணக்கில் பப்ஜி ஆட்டம்; மயங்கிவிழுந்து உயிரிழந்த மாணவர்! - ஈரோட்டில் சோகம்...
source https://www.vikatan.com/news/india/teenager-spent-16-lakh-for-pubg-game-and-father-was-shock
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக